வீடு



வீடு என்பது
நம் உடலுக்குப் பாதுகாப்பு கொடுப்பது மட்டுமல்ல...
உணர்வுக்கு
உயிர் கொடுப்பதும்கூட!
பிலிப் மோஃபிட்
(அமெரிக்க எழுத்தாளர்)

‘நகர ஊரமைப்புத் துறை’யின் தொழில்நுட்ப ஒப்புதல் பெறப்பட்ட வீட்டுமனைப் பிரிவுக்கு இறுதி ஒப்புதல் வழங்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புக்கு உண்டு. ஆனால், சில இடங்களில் தொழில்நுட்ப ஒப்புதல் பெறாமலே உள்ளாட்சி அமைப்பின் மூலம் வீட்டு மனைப் பிரிவுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. தொலைக்காட்சியில் விளம்பரங்கள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் வீட்டுமனைப் பிரிவுகளில் பெரும்பான்மையானவை  தொழில்நுட்ப ஒப்புதல் பெறாமல், உள்ளாட்சியால் மட்டுமே ஒப்புதல் கொடுக்கப்பட்டு விற்கப்படுபவைதான்.

‘பஞ்சாயத்து அங்கீகாரம் என்ற ஒன்று கிடையாது’ என நாம் குறிப்பிடுவது தொழில்நுட்ப ஒப்புதல் பெறாமல் பஞ்சாயத்தால் மட்டுமே அங்கீகாரம் கொடுக்கப்படும் லேஅவுட்களையே. உள்ளாட்சியால் இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டாலும்கூட, அந்த லேஅவுட்டில் உள்ள வீட்டுமனையை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யும்போது,அங்கீகரித்த லே அவுட் என்றுதான் குறிப்பிடப்படும். ‘பஞ்சாயத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட லே அவுட்’ என குறிப்பிடுவதில்லை. அதனால் இந்த லேஅவுட் அங்கீகரிக்கப்பட்ட லேஅவுட்தான்.

2008 நவம்பரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 ஏக்கரில் வீட்டுமனைகள் விற்க அறிவிப்பு வருகிறது. அந்த லேஅவுட் வரைபடத்தில் பொது ஒதுக்கீடான சாலையும் குழந்தைகள் பூங்காவும் இருக்கின்றன. அதில்   எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது  அங்கீகரிக்கப்படவில்லை என்பதும் நன்றாகவே தெரிகிறது. இவர் உள்ளாட்சியில் மட்டும் அங்கீகாரம் வாங்கினாரா என்பதும் தெரியவில்லை. லேஅவுட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பொது உபயோக இடங்கள் முறைப்படி உள்ளாட்சிக்கு ஒப்படைக்கப்பட்டதா என்றும் தெரியவில்லை. அதனுடைய கிரயப்பத்திரத்தை பார்க்கும்போது தனிநபர் ஒருவர்தான் இந்த லேஅவுட்டை விற்பனை செய்கிறார் என்று தெரிகிறது. இப்படி விற்பனை செய்கிறவர், ‘நிலத்தை நான் மனைப்பிரிவுகளாக பிரித்து அதற்கு ...... நகர் எனப்பெயரிட்டு உருவாக்கப்பட்டுள்ள வீட்டுமனைப்பிரிவில்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

 அப்படியென்றால் ‘நான்’ என்பதற்கு அர்த்தம் என்ன? அவருக்கு மனைப்பிரிவுகளாகப் பிரிப்பதற்கு அதிகாரம் கொடுத்தது யார்? இதை சார்பதிவாளர் எப்படி பதிவு செய்தார்?  தொழில்நுட்ப ஒப்புதல் பெறப்படாமல், இப்படிப் பிரிக்கப்படும் லே அவுட்களை பதிவு செய்யக்கூடாது என்பது சார்பதிவாளர் அலுவலகத்துக்குத் தெரிவிக்கப்படவில்லையா? மொத்தத்தில் பாதிக்கப்படுவது இந்த லேஅவுட்டில் இடம் வாங்குபவர்கள்தான். இப்படிப்பட்ட லேஅவுட்களை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதற்கும் அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்கிறார் ட்ரைஸ்டார் ஹவுசிங் நிர்வாக இயக்குனர் பா.ஜார்ஜ் பீட்டர் ராஜ்.

தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள வீட்டு மனைகளுக்கு மட்டுமே இறுதி ஒப்புதல் கொடுக்கும் அதிகாரம் உள்ளாட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் பெறாத எந்த லேஅவுட்டுக்கும் உள்ளாட்சியால் அங்கீகாரம் வழங்க முடியாது என்பது உறுதி.

அமெரிக்கவாழ் தமிழர் ஒருவருக்கு எதிர்காலத்தில் சென்னையில் குடியேற விருப்பம். 4 ஆண்டுகள் சம்பாதித்த பணத்தில் சென்னையில் மனை வாங்க எண்ணினார். ஒரு கிரவுண்ட் இடத்தை 60 லட்சம் ரூபாய்க்கு (2007ல்) வாங்கி, சென்ட்டிமென்ட்டாக அப்பா பெயரில் பதிவுசெய்தார். அப்பாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு 2008ல் இறந்து விட்டார். அப்பா பெயரில் உள்ள சொத்து பற்றி அப்போது குடும்பத்தினருடன் பேச விரும்பாத அவர், வீடு கட்டும்போது பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டார்.

இந்த ஆண்டு அவருக்கு திருமணம். தனியாக வீடு கட்டி குடியேற நினைத்து, சொத்தினை தன் பெயருக்கு மாற்ற முயற்சி எடுத்தார். அப்பா பெயரில் சொத்து இருப்பதால் வாரிசு என்ற அடிப்படையில் இவருடைய அம்மா, இவர் மற்றும் இவருடன் பிறந்தவர்கள் அனைவருக்கும் சொத்து சட்டப்படி சொந்தமாகிவிடுகிறது! இவரையும் சேர்த்து மொத்தம் 6 வாரிசுதாரர்கள். மற்ற ஐவரும் விடுதலைப்பத்திரம் பதிவு செய்து கொடுத்தால்தான் இவருக்கு முழுச்சொத்தும் வந்து சேரும். அம்மாவைத் தவிர மற்ற நால்வரும் விடுதலைப்பத்திரம் எழுதிக் கொடுக்க மறுத்துவிட்டார்கள். ‘இது அப்பா வாங்கிய சொத்து... எங்களுக்கும் பங்கு உண்டு’ என வாக்குவாதம். என்ன செய்வாரோ அவர்?

சொத்து விஷயத்தில் எப்போதுமே சென்டிமென்ட் வைக்கக்கூடாது. ‘அப்பா என்னை தாலாட்டி வளர்த்தார். அண்ணன் என்னை தோளில் தூக்கிச் சுமந்தார்’ என்று எண்ணி, நன்றியுணர்வோடு அவர்களை மகிழ்விப்பதாக நினைத்து, அவர்கள் பெயரில் சொத்து வாங்கி, பிறகு அவதிப்படுவது தேவையா? நன்றி சொல்ல வேறு எத்தனையோ வழிகள் இருக்கின்றன.
‘நாம் திறமையாக செயல்படுகிறோம்’ என நினைத்து அரசாங்க விதிகளை ஏமாற்ற நினைத்தால்..? அது அடுத்த வாரம்...
(கட்டுவோம்!)
தாஸ்