நர்த்தகி திருநங்கைகளுக்கான முதல் சினிமா!



குழந்தை காலத்தில் ஒரு உடல் ஒரு உடல்
வளர்ந்த காலத்தில் வேறுடலே
சிதையில் தீவைத்து எரித்திடும் வரையினில்
உடலின் உருமாற்றம் தொடர்கதையே!
ஆண்கள் என்பதும் பெண்கள் என்பதும் மாயத் தோற்றங்கள்
திருநங்கை இவள் இருகரை நடுவினில் ஓடும் நதியா?


திருநங்கைகளின் வாழ்வை பதிவு செய்யும் ‘நர்த்தகி’ படத்தில் நா.முத்துக்குமாரின் வரிகள் இவை. திருநங்கைகளுக்கான முதல் தமிழ் சினிமாவை இயக்கிக் கொண்டிருக்கிறார், இயக்குநர் விஜயபத்மா. இதில் நாயகியாக நடிக்கிறார் திருநங்கை கல்கி. திருநங்கைகளின் மனித உரிமைக்காகப் போராடும் கல்கியின் சினிமா பிரவேசம் குறித்து பேசினோம்.

‘‘எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், எந்தப் படத்திலாவது எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. ஒருநாள் இயக்குநர் விஜயபத்மா, ‘திருநங்கைகள் பற்றி ஒரு படம் பண்ணுகிறேன்... நீங்கள் நடிக்கிறீர்களா?’ என்று கேட்டார். கதை கேட்டேன். பிடித்திருந்ததால் உடனே ஒப்புக்கொண்டேன்.
சினிமாவில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். சினிமா எடுப்பதோ, நடிப்பதோ, இயக்குவதோ எளிதான காரியமல்ல என்பது மட்டும் எனக்குத் தெரியும். இந்தப் படத்தை ‘புன்னகைப்பூவே’ கீதா தயாரிக்கும்போது இந்த வாய்ப்பைத் தவறவிட முடியுமா? தஞ்சையில் பிறந்து, திருநங்கையாக உணர்ந்து, மும்பை சென்று அறுவை சிகிச்சை செய்து திருவையாறு திரும்பி வந்து பரதநாட்டியம் கற்றுக்கொள்ளும் ஒரு திருநங்கையின் வாழ்வில், அவர் கற்றுக்கொண்ட நாட்டியத்திற்கும் அவருக்கு வாய்த்த காதலுக்கும் என்ன நடக்கிறது என்பதே கதை. ஒரு திருநங்கையின் வாழ்வை சமரசமின்றி சொல்லியிருக்கிறார் விஜயபத்மா’’ என்கிறார் கல்கி.

‘‘இந்தப் படத்தில் விவின் என்பவர் எனக்கு ஜோடி. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நா.முத்துக்குமார் பாடல் எழுதுகிறார். இப்படி தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும்படியான மிகப்பெரிய ஸ்டார்களுடன் வேலை செய்வதை பெருமையாக நினைக்கிறேன்.

முதல் நாள் கேமரா முன் நின்றபோது கொஞ்சம் நடுக்கமாகத்தான் இருந்தது. இயக்குநர் விஜயபத்மாதான், ‘கேமரா முன்னால் நடிக்க வேண்டாம்... இயல்பாக உணர்ந்து செய்தால் போதும்’ என்றார். அப்படியே செய்தேன். ‘நர்த்தகி’ படத்தின் கதை என்னுடைய கதையல்ல... திருநங்கைகளின் கதை. இதை இன்னொரு திருநங்கை கேட்பார் என்றால் அவருக்கும் இக்கதை பொருத்தமாக இருக்கும். சமூகத்தில் எல்லா திருநங்கைகளும் ஒரே மாதிரியான பிரச்னைகளையே சந்திக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இது முக்கியமான படமாக இருக்கும்.
தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு மிகவும் பிடித்தமான சூப்பர்ஸ்டார் ரஜினி சார் படத்தில் ஒரு சண்டைக்காட்சிக்கு நடிக்க ஆசைப்படுகிறேன்’’ என்று தன் ஆசைப் பட்டாசைக் கொளுத்துகிறார் கல்கி.
 டி.அருள் எழிலன்