மிஸ் அழுமூஞ்சி சிரிப்பழகி!



சின்னத்திரையின் 'மிஸ் அழுகைமூஞ்சி’ பட்டத்துக்குப் போட்டியின்றி தேர்வு செய்யலாம் காவ்யாவை. சன் டி.வியின் ‘திருமதி செல்வம்’ மற்றும் ‘செல்லமே’ தொடர்களில் அழுதுவடியும் நாயகி. ‘அவளா நீயி...’ எனக் கேட்கிற அளவுக்கு நிஜத்தில் ‘சிரிசிரி’ பார்ட்டி காவ்யா!

‘‘நினைவு தெரிஞ்சு நிஜ வாழ்க்கைல நான் அழுததே இல்லை. எல்லாத்துலயும் டேக் இட் ஈஸி பாலிசி! 24 வருஷமா அழாம சேர்த்து வச்ச கண்ணீரெல்லாம் இப்ப அருவியா கொட்டுது. அழறது இவ்ளோ கஷ்டமா?’’  அப்பாவியாகக் கேட்கிறார்.

‘‘அப்ப எனக்கு 10 வயசிருக்கும். ஒரு கல்யாணத்துல சும்மா டான்ஸ் பண்ணினேன். அதிலேர்ந்து தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க வீட்டு விசேஷங்கள்ல ஆடற அளவுக்கு செம பிஸி! திடீர்னு ‘நாம ஏன் பாடக் கூடாது’னு தோணவே, பாட ஆரம்பிச்சிட்டேன். அது வருமா, வராதான்னெல்லாம் யோசிக்கலை. ஸ்டேஜ்ல பாடற அளவுக்கு வளர்ந்தப்ப, நிகழ்ச்சித் தொகுப்பாளராகிற ஆசை வந்தது. ஆடிக்கிட்டே பாடறது, பாடிக்கிட்டே காம்பியரிங் பண்றதுனு ஒரு டைப்பா போயிட்டிருந்தப்ப, நடிக்கக் கூப்பிட்டாங்க. ‘அதை ஏன் விட்டு வைக்கணும்’னு சீரியல் பக்கம் வந்தேன். சீரியல்ல என்னைப் பார்த்துட்டு சினிமாவுக்குக் கூப்பிடறாங்க. ஐடியா இல்லை’’ என்கிறவர், அழுகாச்சி பழக ஸ்பெஷல் கிளாஸ் போகிறாரோ?

‘‘பொம்பளைங்க அழக்கூடாதுனு நினைக்கிறவ நான். ஆனா, சீரியல்ல அழுதாத்தான் பொம்பளையே... ‘செல்லமே’ல நான் தற்கொலைக்கு முயற்சி பண்ற மாதிரியும், கடைசி நிமிஷத்துல அப்பா வந்து காப்பாத்தற மாதிரியும் சீன். கழுத்துல கயிறு மாட்டியாச்சு. லேசா இறுக்கியாச்சு. அப்பாவா நடிக்கிறவர் ஒருவேளை வரலைன்னானு நினைச்சுக்கிட்டேன். என்னையும் மீறி அழுகை வந்திருச்சு. இன்னொரு சீன்ல ராதிகா மேடம் என்னை அறையணும். லேசா தட்டுவாங்கனு பார்த்தா, நிஜமாவே பளார்னு விட்டதுல, கண்ணு கலங்கிடுச்சு... இப்படி ஏதாவது நடந்தாத்தான் உண்டு. இல்லைனா என்னை அழ வைக்கிறது கின்னஸ் சாதனை!’’  கலாய்க்கிற காவ்யாவுக்கு அடுத்து என்ன திட்டமோ?

‘‘எம்.பி.ஏ பண்ணணும். பிசினஸ்ல குதிச்சு, நாலு பேருக்கு சம்பளம் கொடுக்கிற அளவுக்கு உயரணும். அப்புறம் பைத்தியமா நடிக்கணும்... ஓ.கேவா?’’  சீரியஸாகக் கேட்கிறார் சிரிப்பழகி!
ஆர்.வைதேகி