அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் சுத்தமத்தளம்



பாரி நாதஸ்வரம், பஞ்சமுக வாத்தியம், கொடுகொட்டி, சுத்தமத்தளம், நாட்டுத்தாளம், கெத்துவாத்தியம், எக்காளம், வாங்கா, கர்ணா, சிகண்டி, துத்தி, சங்கம், சேமக்கலம், டக்கா, பேரிகை, தவண்டை, புல்லாங்குழல், திருச்சின்னம் ஆகிய 18 வாத்தியங்களையும் இசைத்து ஆராதிப்பது தமிழர் மரபில் முக்கிய வழிபாட்டு முறை. இதை ‘பதினெண் இசைவழிபாடு’ என்பார்கள். இப்போதும் கூட சில சிவாலயங்களில் இந்த வழிபாடு நடைமுறையில் இருக்கிறது.

இந்த பதினெட்டு இசைக்கருவிகளில் சுத்தமத்தளம் தனித்துவமும் சிறப்பும் வாய்ந்தது. மிருதங்கம் போலவே இருக்கும் இது, அதைவிடப் பெரிதாகவும் நீளமாகவும் இருக்கிறது. தபேலாவைப் போல அகலமான வெட்டுத்தட்டுப் பகுதியையும், மிருதங்கத்தை விட அகலமான வலம்தளைப் பகுதியையும் கொண்டது. இந்த தோற்கருவியின் நாதம் இன்பமயமானது. அதிர்வு சிதறாத இதன் இசை நெடுந்தொலைவு கேட்கும். ஒரு காலத்தில் தமிழர்களின் சுகதுக்கங்களிலும் வழிபாட்டுச் சடங்குகளிலும் நீங்கா இடம்பிடித்திருந்தது இது. இப்போது திருவாரூர், சிதம்பரம், திருச்செங்கோடு, திருத்துறைப்பூண்டி, மதுரை உள்ளிட்ட சில சிவாலயங்களில் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. இங்கும்கூட இலக்கணம் அறிந்து இசைக்க அடுத்த தலைமுறையில் யாருமில்லை என்பது சோகம்.

மத்தளம் என்பது பழந்தமிழர் இசைக்கருவி. சுருதி வார்க்காத மத்தளமே சுத்தமத்தளம். திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பஞ்சமுக வாத்தியம் போலவே இக்கருவியையும் பாரசைவர் மரபினரே வாசிக்கிறார்கள். இக்கோயிலின் பெருந்திருவிழாவில் சந்திரசேகரருக்கு என ஒரு தனித்திருவிழா நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் பிராகார உலா வரும் சுவாமி, ஈசானிய திசையில் எழுந்தருளும்போது ‘பூதநிருத்தம்’ என்ற நிகழ்ச்சி நடைபெறும். அந்நேரத்தில் வான மண்டலத்தில் பூதகணங்கள் எல்லாம் ஆடிப்பாடுவதாக நம்பிக்கை.

அதனால் பக்தர்கள் அனைவரும் மௌனம் காப்பார்கள். அப்போது பூதகணங்களை உற்சாகப்படுத்துவதற்காக, தலையில் முண்டாசு கட்டி, அதன்மேல் சுத்த மத்தளத்தை வைத்து வானதிர இசைப்பார் பாரசைவ முட்டுக்காரர். இசை உச்சம் தொடும்போது திடீரென சுத்தமத்தளத்தை வான்நோக்கி வீசி, அது விழும்போதும் தாளம் பிசகாமல் இசைத்து பக்தர்களை வியப்பில் ஆழ்த்துவார். சுவாமி உலாமுடித்து கருவறை திரும்பும்போது, சுத்தமத்தளம் வாசித்தவருக்கு பரிவட்டம் கட்டி, பட்டு வழங்கி மரியாதை செய்வார்கள். இந் நிகழ்ச்சி 18ம் நூற்றாண்டு தொடங்கி இன்றுவரையிலும் நிகழ்ந்து வருகிறது. இதுதவிர, திருவந்திக்காப்பு மற்றும் ஏனைய தீப ஆராதனை நிகழ்ச்சிகளிலும் இக்கருவி வாசிக்கப்படுகிறது.

திருத்துறைப்பூண்டியில் பெருந்திருவிழா உற்சவக்காலத்தில் மட்டும் இக்கருவி இசைக்கப்படும். திருவாரூரில் வாசிக்கும் கலைஞரே இங்கும் வந்து வாசிப்பார். மதுரை மீனாட்சியம்மன் கோயில் பெருந்திருவிழா காலத்தில் மாசிவீதிகளில் இக்கருவியை இசைப்பார்கள். மேலும், புட்டுக்கு மண்சுமத்தல் மற்றும் கழுவேற்று திருவிளையாடலின்போதும் இக்கருவி இசைக்கப்படும். தலைமை சிவாச்சாரியார் இறந்து போனால், இடுகாடு வரைக்கும் இக்கருவியை இசைத்த படியே செல்வார்கள்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி புறப்பாட்டின்போது, சுத்தமத்தளம் மூலம் தாண்டவ ஜதிகள் இசைக்கப்படும். ‘சிவனார் வாத்தியம்’ என்று அழைக்கப்படும் இந்த சுத்தமத்தளம், பரதநாட்டிய மரபிலும் பயன்படுகிறது. அக்காலங்களில் கோயில்களில் நடக்கும் நள்ளிரவு பூஜைகளின்போது, தலையில் குடதீபம் ஏற்றி தெய்வமகளிர் சதிராடும் நேரத்தில் இக்கருவியே இசைக்கப்படும்.

மிகப்பழமை வாய்ந்த இந்த இசைக்கருவி சில கோயில்களில் வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே இருந்து வருகிறது. முறைப்படி இசைப்பவர்களும் அருகி வருகிறார்கள். தமிழர் வாழ்க்கையோடும் வழிபாட்டோடும் கலந்த இந்த இசைக்கருவி கேரளாவில் மிகுந்த ஆதிக்கம் செலுத்துகிறது. அம்மாநிலத்தின் பண்பாட்டுக் கலையான கதகளி ஆடுகையில் இசைக்கப்படும் பஞ்சவாத்தியத்தில் இதுவும் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. வடமாநிலங்களில் ‘பக்குவாஜ்’ என்ற பெயரில் இக்கருவியை ஒத்த ஒரு இசைக்கருவி பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தமிழர்களின் பெருமைக்குரிய இந்த இசைக்கருவி வழக்கொழியும் நிலையில் இருக்கிறது.

 வெ.நீலகண்டன்