தன் எதிரே...



இரவு ஒன்பது மணி இருக்கும். வீட்டுக்குள் கணவனுடன் கீதா பெரிய குரலில் விவாதம் செய்வதை அக்கம்பக்கம் வீடுகளில் இருந்தவர்கள் ஆர்வத்தோடு கேட்டார்கள். இவள் உரத்த குரலில் பேசப் பேச, அந்த மனிதன் வாயையே திறக்காமல் இருப்பதும் வெளியுலகத்துக்குப் புரிந்தது. ஒரு மனிதன் இப்படி மென்மையாக அமைதி காக்கும்போது எப்படி இவளுக்கு ஓங்கிய குரலில் அவரோடு தர்க்கம் செய்ய மனசு வருகிறது என்று ஆளாளுக்குப் பேசிக்கொண்டார்கள்.

அடுத்த வீட்டுச் செல்லம்மாவுக்குத்தான் பொறுக்கவில்லை. ஆனால் அதற்குக் காரணம் வேறு! கீதாவை செல்போனில் அழைத்துக் கேட்டாள்...

‘‘என்ன கீதா... யாரோடு இப்படி உரக்க தர்க்கம் பண்ணிப் பேசறே?’’

‘‘
என் வீட்டுக் காரருடன்தான்... ஏன் கேக்கறீங்க?’’

‘‘அவர்தான் வெளியூர் போனாரே... வந்துட்டாரா?’’

கீதா மெல்லச் சொன்னாள்...
‘‘இல்லேக்கா... நாளைக்குத்தான் வருவார். ஆனா, அவர் வீட்டில இருக்கிறாப்போல ஓர் எண்ணத்தை உருவாக்கிட்டா, துணை இல்லாத வீட்டில் நான் தைரியமா தனியா இருக்கலாமில்லே..? அதனாலதான் அவரோட பேசிட்டிருக்கிறாப் போல பேசிட்டிருக்கேன். வெளிய சொல்லிடாம உங்க மனசோடவே வச்சுக்குங்க!’’

‘‘சூப்பர்!’’ என்று பேச்சை முடித்துக் கொண்டாள் செல்லம்மா.
பம்மல் நாகராஜன்