மகன் எதிரே...



‘‘ஆஸ்பத்திரிக்கு ராகுலை அழைச்சுக்கிட்டுப் போனீங்களே... ரொம்ப நேரம் காக்க வச்சுட்டாங்களோ?’’  பாஸ்கரிடம் மனைவி துர்கா கேட்டாள்.

“அதனால என்ன? அவனுக்கு ஆஸ்பத்திரியில புது ஃபிரண்ட்ஸ் கிடைச்சாங்க. டாக்டர் கூப்பிடறவரைக்கும் அவங்களோட ஜாலியா விளையாடிக்கிட்டிருந்தான். அந்த சந்தோஷத்திலயே அவனுக்கு பாதி காய்ச்சல் போயிடுச்சு. காத்துக்கிட்டு இருந்த நேரத்தில நான் அங்கிருந்த புத்தகங்களைப் படிச்சு பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன்.’’

‘‘டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரைகளை ஆஸ்பத்திரியில இருக்கிற மருந்துக் கடையிலேயே வாங்கச் சொன்னாங்களாமே?’’

‘‘எல்லா மருந்துகளும் ஒரே இடத்தில் கிடைக்க வழி செய்திருக்காங்கன்னு அவங்களைப் பாராட்டணும். இல்லைன்னா, ஒவ்வொரு மருந்துக்கும் ஒவ்வொரு கடையா ஏறி இறங்கியிருக்கணுமே...’’

சிறிது நேரத்துக்குப் பின்...
“நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ராகுல் எதிரில் மற்றவர்கள் மீது எந்தத் தவறும் இல்லாதது போல பதில் சொன்னீங்களே... ஏன்?’’ &மகன் தூங்கும்போது ஆச்சரியத்துடன் கேட்டாள் துர்கா.

‘‘வாழ்க்கையில் நாம தவறா நினைக்கிற ஒவ்வொன்றிலும் ஒரு நல்லது இருக்குன்னு நம்ம பையனுக்கும் கத்துக் கொடுக்கணும். அதான் அப்படிப் பேசினேன்’’ என்று சொன்ன பாஸ்கரை பாசிட்டிவ்வாக பார்த்தாள் துர்கா!
ஆர்.லதா