என் எதிரே...



என் கவனம் முழுவதும் அந்த வெள்ளை நிறப்பொருள் மீது இருந்தது. எங்கிருந்தோ வந்த பேத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் அதனை அள்ளி எடுத்து வந்து, ‘‘தாத்தா... இந்தா பிடி’’ எனத் தந்து விட்டாள்.

‘‘தாத்தா... அந்த சேவக்கோழியை விரட்டிடு... நம்ம வீட்டிலதான் கோழியே இல்லையே...’’  அவள் காட்டிய திசையில் ஒரு சேவல், நான்கு பெட்டைக்கோழிகள் புடைசூழ தோட்டதில் ராஜநடையிட்டுக் கொண்டிருந்தது. பூச்செடிகளை கிளறி விடக்கூடாதே... விரட்டியபோது கோழிகள் எழுப்பிய ‘கொக்... கொக்...’ பக்கத்து வீட்டிலிருந்தவர்களை எட்டிப்பார்க்க வைத்துவிட்டது. அந்த வெள்ளை நிறப் பொருள் என் உள்ளங்கைக்குள் மறைந்துகொண்டது.

கீழ்ப்புற வீட்டில் உள்ள கருப்புக்கோழி இட்ட முட்டையா? மேல்புற வீட்டில் உள்ள வெள்ளைக்கோழி இட்ட முட்டையா? இந்த முட்டை யாருக்குச் சொந்தம்? உரிமை கொண்டாடி யாரும் வரவில்லைதான்... ஆனாலும், வைத்திருக்க என் கைகள் கூசின.

தற்செயலாக எட்டிப்பார்த்த மனைவி, ‘‘ஆஹா இன்னைக்கும் ஒரு முட்டையா! இரண்டு ரூபாய் மிச்சம்...’’ என்றபடி வாங்கி, சூடேறிக் கிடந்த தோசைக்கல்லில் உடைத்து ஊற்றிப் பொரித்து வைத்துவிட்டாள். அடுத்த நிமிடம் எங்கிருந்தோ வந்த கடுவன் பூனை, முட்டைப்பொரியலுக்காகவே காத்திருந்தது போல லபக்கென கவ்விக்கொண்டு மறைந்தது!
சு.பழனியப்பன்