ஏழைகளின் போராளி!





‘‘நேற்று இங்கு சாத்தான் வந்துவிட்டுப் போனது. அதன் துர்நாற்றம் இன்னமும் வீசுகிறது!’’ - அமெரிக்க மண்ணில் இருக்கும் ஐ.நா பொதுச்சபையில் நின்று, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை இப்படி விமர்சித்தவர் ஹூகோ சாவேஸ். அமெரிக்க மேலாதிக்கத்தை அவர் அளவுக்குக் கேள்வி கேட்டவர்கள் சமீப காலத்தில் வேறு யாருமில்லை. அசைக்கமுடியாத மக்கள் செல்வாக்கோடு, 14 ஆண்டுகள் வெனிசுலா நாட்டு அதிபராக இருந்த சாவேஸ், கடந்த செவ்வாய்க்கிழமை மறைந்தார். புற்றுநோயின் தாக்கத்துக்கு 58 வயதிலேயே அவர் பலியானதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள் வெனிசுலா மக்கள்.
அமெரிக்காவின் காலடியில் கிடக்கும் குட்டி தேசங்கள் தென் அமெரிக்க நாடுகள். லத்தீன் அமெரிக்கா என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியில் அமெரிக்கக் கழுகின் கண் சற்று அதிகமாகவே பதிந்திருக்கும். குறிப்பாக வெனிசுலா மீது அமெரிக்காவுக்கு ஸ்பெஷல் கவனம் உண்டு. தென் அமெரிக்க நாடுகளில் அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடு அது என்பதே அதற்குக் காரணம். அங்கிருக்கும் அத்தனை எண்ணெய்க் கிணறுகளும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கு சொந்தம். அவர்களாகப் பார்த்துக் கொடுப்பதை அரசாங்கம் வாங்கிக்கொள்ள வேண்டும். எதிர்க்கும் அரசு கவிழ்ந்துவிடும்.

இந்த நிலையை சாவேஸ் வந்து மாற்றினார். ஒரு சாதாரண ஆசிரியரின் மகனாக கிராமத்தில் பிறந்து, பேஸ்பால் விளையாட்டு வீரனாக வளர்ந்து, அதற்காகவே ராணுவத்தில் சேர்ந்து லெஃப்டினன்ட் கர்னல் பதவி வரை உயர்ந்தவர் சாவேஸ். இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட அவரால், தன் தேசத்தின் வளங்களை வல்லரசுகள் சுரண்டுவதையும், மக்களில் 55 சதவீதம் பேர் சோற்றுக்கு வழியில்லாத ஏழைகளாக வாழ்வதையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.

ராணுவத்தில் இருக்கும் நண்பர்களோடு சேர்ந்து கடந்த 92ம் ஆண்டு அரசைக் கவிழ்க்க முயன்றார். ஆனால் புரட்சி தோற்றது. ‘‘நாங்கள் தற்காலிகமாகத் தோற்றிருக்கிறோம். என்றாவது ஒருநாள் வெல்வோம்’’ என டி.வியில் உரை நிகழ்த்திவிட்டு சரணடைந்தார். அவரது வீரமும், தலைமைக் குணமும் வெனிசுலா மக்களைக் கவர்ந்தன. இரண்டே ஆண்டுகளில் ஆட்சி மாற்றத்தின்போது விடுதலை செய்யப்பட்டவர், புதிய கட்சி ஆரம்பித்தார். எதிர்த்துப் போட்டியிட்ட அத்தனை பேரையும் மண்ணைக் கவ்வச் செய்துவிட்டு 98ல் ஆட்சியைப் பிடித்தார். அன்றுமுதல் அவர்தான் அதிபர்.



வெளிநாட்டு நிறுவனங்களின் கையிலிருந்த எண்ணெய் வளத்தை அரசுடமை ஆக்கி, அந்த வருமானத்தை ஏழைகள் நலத்திட்டங்களுக்கு செலவிட்டபோது உலகமே அவரைத் திரும்பிப் பார்த்தது. ஆனால் அமெரிக்கா இதை ரசிக்கவில்லை. அரசியல் எதிரிகள், தொழிலதிபர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், மதத் தலைவர்கள் என எல்லோரையும் பிணைத்து சாவேஸுக்கு எதிராக நிறுத்தின ஏகாதிபத்திய சக்திகள். ராணுவத்தில் ஒரு பிரிவும் துணை போக, 2002ல் ஆட்சியைக் கவிழ்த்தார்கள். சாவேஸை தொலைதூரத் தீவு ஒன்றில் ராணுவ முகாமில் சிறை வைத்தார்கள். ஆனால் வெனிசுலா மக்கள் வீதிக்கு வந்தார்கள். தங்கள் தலைவனுக்காக அவர்கள் நடத்திய 72 மணி நேரப் போராட்டம் தேசத்தை கொந்தளிக்கச் செய்தது. சதி செய்தவர்கள் தலை வணங்கினார்கள்.

19ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெனிசுலா விடுதலை வீரனான சைமன் பொலிவாரின் அவதாரம் என சாவேஸ் தன்னை கருதிக் கொண்டார். ‘‘தேவனும் நம்மோடு இருக்கிறார்; மக்களும் நம்மோடு இருக்கிறார்கள். நமக்கு எதிராக யார் என்ன செய்துவிட முடியும்?’’ எனக் கேட்ட அவர் அபாரமான பேச்சாளர். டி.வி நேரடி ஒளிபரப்பில் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தி, போனில் மக்கள் கேட்ட விஷயங்களை அரசாங்க உத்தரவுகளாக பிறப்பித்தவர். ‘இடதுசாரி உலகின் தலைவன்’ என ஃபிடல் காஸ்ட்ரோ வகித்த பொறுப்பை, அவரது ஓய்வுக்குப் பிறகு நிரப்பியவர். பதினான்கே ஆண்டுகளில் தன் தேசத்தின் வறுமையையும் வேலையில்லா திண்டாட்டத்தையும் பாதியாகக் குறைத்த அவர், ஏழைகளுக்கு இலவச மருத்துவம், கல்வி, நியாய விலையில் உணவு, உடைகள், எலெக்ட்ரானிக் பொருட்கள் என எல்லாவற்றையும் சாத்தியமாக்கி இருக்கிறார்.
இனி இதையெல்லாம் யாரும் தடுக்க முடியாது!
- அகஸ்டஸ்