எல்லா நடிகைகளும் எனக்கு «ஐ£டியாகணும்!





‘வெள்ளச்சி’ படத்தில் கிராமத்து இளைஞனாக எதார்த்தம் மீறாத நடிப்பில் மிளிர்ந்துள்ளார் பிண்டு. நடிகர் பாண்டுவின் மகன். படம் பார்த்தவர்களின் பாராட்டு, பிண்டுவை உற்சாகத்தில் மிதக்க வைத்திருக்கிறது.

‘‘ஸ்கூல் படிக்கும்போதே அப்பாவோட ஷூட்டிங், டப்பிங்னு போவேன். பிறப்பு, வளர்ப்பு, போய் வந்த இடங்கள்னு எங்க சுத்தினாலும் சினிமா உறவு என்னைத் தொடர்ந்துக்கிட்டே வர, ஒரு கட்டத்தில் எனக்குள் தொற்றிக்கொண்டது நடிப்பு ஆசை. பயந்து பயந்து அப்பாகிட்ட சொன்னேன். அவர் ஸ்டைல்லயே ‘ஆங்... உன் இஷ்டம்’னு ஆசீர்வாதம் பண்ணிட்டார்.
லிங்குசாமி தயாரிச்ச ‘பட்டாளம்’தான் முதல் படம். இடையில் ஏற்பட்ட கேப்பை, சினிமாவுக்காக என்னைத் தயார்படுத்திக்க யூஸ் பண்ணிக்கிட்டேன். அதன் பிறகு கிடைச்ச வாய்ப்புதான் ‘வெள்ளச்சி’. சிட்டி பையனான எனக்கு, வில்லேஜ் கேரக்டர் சவாலாதான் இருந்துச்சு. நடிப்புல மட்டும் பச்சோந்தியா மாறும் வித்தை தெரிஞ்சுக்கிட்டா போதும்... கதாபாத்திரமாவே வாழ்ந்திடலாம். அத நான் செஞ்சிருக்கேன்னு இப்ப கிடைக்கற பாராட்டை வச்சு தெரிஞ்சிக்கிட்டேன்’’ - அகமகிழ்கிறார் பிண்டு.

இனிமே சோலோ ஹீரோவா மட்டும்தான் நடிப்பீங்களா?
‘‘சினிமால யார் எந்த இடத்துக்கு எப்படி வருவாங்கன்னு சொல்ல முடியாது. நம்ம வேலைய சரியா பண்ணிக்கிட்டு இருந்தா, நல்ல வாய்ப்புகள் தானா அமையும். வலுவான கேரக்டர்னா, நெகட்டிவ் ரோல் பண்ணக்கூட ரெடி. படம் பார்த்த என்ஃபிரண்ட்ஸ், ‘மச்சி... அடுத்து ரொமான்ஸ் கதையா பண்ணு’ன்னு கலாய்ச்சாங்க. பிரபுதேவா, கே.எஸ்.ரவிக்குமார்னு நிறைய சினிமா பிரபலங்கள் வாழ்த்தினாங்க. எல்லோரோட ஆசீர்வாதங்களும் என்னை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகும். சரியான நேரத்துக்கு ஷூட்டிங் போறது, இயக்குனர்களுக்கும் சீனியர் நடிகர்களுக்கும் மரியாதை தர்றதுன்னு நல்ல பழக்கங்களை அப்பா கற்றுக்கொடுத்திருக்கார்.’’

எந்த நடிகையோட ஜோடி சேர ஆசைப்படுறீங்க?
‘‘என்ஆசை இருக்கட்டும். என்னோட ஜோடியா நடிக்க எல்லா நடிகைகளும் ஆசைப்படுற அளவுக்கு நான் வளரணும். அதில மட்டும்தான் கவனம் இருக்கு. ஆனா ஒரு ரசிகனா அனுஷ்கா, த்ரிஷா ரெண்டு பேரையும் எனக்கு பிடிக்கும். அடுத்து மூன்று கதைகள் கேட்டிருக்கேன். இன்னும் எதுவும் முடிவாகல. கேரக்டருக்குத் தகுந்த மாதிரி உடம்பை ஏற்றி, இறக்கக் கத்துக்கிட்டேன். அப்பாவுக்கு பெருமை சேர்க்கிற மாதிரி நல்லா நடிச்சி நட்சத்திர அந்தஸ்தை வாங்கணும்ங்கிறது என்னோட லட்சியம்!’’
- மனசு நிறைய நம்பிக்கையுடன் பேசுகிறார் பிண்டு.
- அமலன்