ரஜினி அட்வஸ் அதிரடி விஜய்





‘துப்பாக்கி’ வெற்றியின் சூடு தணிவதற்கு முன்பாகவே விஜய் ஷூட்டிங் கிளம்பிய படம் ‘தலைவா’. இயக்குனர் விஜய் டைரக்ஷனில் இளைய தளபதி நடிக்கும் படம் என்ற ரைமிங்குடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது ரசிகர் கூட்டம்.
இரும்புக் கோட்டைக்குள் பூட்டி வைத்த பொக்கிஷமாய் படம் பற்றிய தகவல்களைப் பொத்திப் பொத்திப் பாதுகாக்கும் நிலையிலும், நம் காதில் கசிந்துள்ள சில ரகசியங்களை பந்தி வைக்காவிட்டால் நமக்குத் தூக்கம் ஏது? ‘‘ஹய்யோ! மேட்டரை சீக்கிரம் சொல்லுங்க தலைவா...’’ என்கிறீர்களா? இதோ ‘தலைவா’ ஸ்பெஷல்...

தாய்க்கு சமமாக அன்பும் அரவணைப்பும் காட்டி வளர்த்த தந்தை, ஒரு கொடூரனால் கொல்லப்பட்டால் எந்த மகன்தான் சும்மா இருப்பான்? அப்படி தந்தையை கொன்ற ஒரு மும்பை டானை தேடிக் கண்டுபிடித்து பழிவாங்கும் ஒரு மகனின் கதைதான் ‘தலைவா’. தலைப்புக்கும் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே என்பதுதானே உங்கள் சந்தேகம்? வில்லனை பழிவாங்கும் படலம் ஒரு பக்கம் நடக்க, இன்னொரு பக்கம் மக்களிடம் நல்ல பெயரெடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் இறங்கி நாற்காலியை நோக்கிச் செல்லும் பயணம் தான் படத்தின் க்ளைமாக்ஸாம்.
‘துப்பாக்கி’யை தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பும் முழுக்க முழுக்க மும்பையில் நடக்கிறது. 60 சதவீத படப்பிடிப்பு ஓவர். ஸ்பெயின் நாட்டில் சில காட்சிகளையும், விஜய் - அமலா பால் டூயட் சாங்கையும் எடுக்க ஃபிளைட்டுக்கு டிக்கெட் போட்டுள்ளது யூனிட்.

பொறுக்கிகளை உதைத்து உள்ளே தள்ளும் பொறுப்பான போலீஸ் அதிகாரி வேடம் அமலாபாலுக்கு. ஆரம்பத்தில் ஒரு ஹீரோயின் இருப்பது போலத்தான் கதை எழுதியிருந்தார் இயக்குனர் விஜய். இடையில் என்ன நடந்ததோ... சில மாற்றங்களை செய்து அமலாபால் தவிர இன்னொரு ஹீரோயின் கேரக்டரையும் சேர்த்துள்ளார். ராகினி நந்த்வானி என்ற பாலிவுட் நடிகைதான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வட இந்தியப் பெண்ணாக வரும் அவருக்கு வசனங்களும் முழுக்க இந்தியில்தான்! விஜய்யுடன் அமலாபாலும் ராகினியும் போட்டி போட்டு ஆடும் ஒரு பாடல், ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் என்கிறார்கள். காமெடி கேரக்டரில் சந்தானம் நடிக்கிறார்.

பஞ்ச் வசனம் பேசுவதை சமீபமாக குறைத்திருக்கும் விஜய்க்கு இந்த படத்தில் நிறைய ‘பஞ்ச்’ தீனி போட்டிருக்கிறாராம் இயக்குனர். நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் மும்பையில் இதுவரை தமிழ் சினிமா காட்டாத லொகேஷன்களில் படமாக்கியுள்ளனராம். பட்டையை கிளப்பப் போகும் பாடல்கள் பாங்காக்கில் கம்போஸ் செய்யப்பட்டுள்ளன. ‘தலைவா... தலைவா...’ பாடலுக்கு  மும்பையில் பிரமாண்ட செட் போட்டார்கள். ஜெய்ப்பூரிலிருந்து விஜய்க்கான ஸ்பெஷல் காஸ்ட்யூம் வந்து இறங்கியது. ஐம்பது படகுகளுக்கு மத்தியில் 500 டான்ஸர்களோடு விஜய் ஆடும் காட்சி பரபரப்பாக பேசப்படும் என்கிறார்கள்.

‘கூகுல் கூகுல் பண்ணிப் பார்த்தேன்...’ என்று ‘துப்பாக்கி’யில் விஜய் பாடிய பாட்டு ஹிட். ‘தலைவா’விலும் விஜய்யை ஒரு பாட்டு பாடச் சொல்லிக் கேட்டிருக்கிறாராம் இயக்குனர். கதைப்படி விஜய்யின் தந்தையைக் கொல்லும் டான் தவிர, இன்னொரு வில்லனும் இருக்கிறாராம்.
இன்னும் 30 நாட்கள் ஷூட்டிங் நடந்துவிட்டால், படம் முடிந்துவிடும். ‘தலைவா’ முடிந்த கையோடு சூப்பர்குட் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில், நேசன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய். இந்தப் படத்தில் ஜீவாவும் நடிப்பார் என்கிறார்கள்.

ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையே விஜய் கேப் விடுவது வழக்கம். ஆனால் ‘நண்பன்’ படத்திலிருந்து விஜய் தொடர் கால்ஷீட்டில் ஓடிக்கொண்டிருக்கிறார். ரஜினியின் அட்வைஸ்தான் இதற்குக் காரணம். ‘‘அடுத்தடுத்து கமிட்மென்ட் வச்சிக்கிட்டாதான் ஒரு படம் தோற்றாலும் இன்னொரு படம் கைகொடுக்கும்’’ என்று ரஜினி கொடுத்த டிப்ஸையே இப்போது கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளார் விஜய்.
- அமலன்