எய்ட்ஸை குணப்படுத்தும் மருந்து!





அட் லாஸ்ட்... அப்படி ஒரு அதிசயம் நடந்தே விட்டது. பெரியம்மைக்கு தடுப்பூசியும் காசநோய்க்கு மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டபோது உலகம் எப்படி பரவசம் கொண்டதோ, அதே பரவசம் அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணமெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஆம், உயிர்க்கொல்லி எய்ட்ஸ் நோயை ஒரு குழந்தையிடமிருந்து முற்றிலுமாக அகற்றி சாதித்திருக்கிறார்கள் அங்குள்ள விஞ்ஞானிகள்.

பெரும்பாலும் பாலுறவால் பரவுவதுதான் எச்.ஐ.வி கிருமி. ஆனாலும் தாய்மார்களிடமிருந்து, கருவிலிருக்கும் குழந்தைகளுக்கும் தொற்றி ஆண்டுதோறும் பல லட்சம் உயிர்களை பலிவாங்கி விடுகிறது அது. அப்படிப்பட்ட கர்ப்பிணி ஒருவர்தான் மிசிசிப்பி மாகாணம் ஜாக்சன் நகரில் இருக்கும் குழந்தைகள் மருத்துவ மையத்தில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார்.

கருவிலிருக்கும் சிசுவை எச்.ஐ.வியில் இருந்து பாதுகாக்கும் எந்த மருந்தையும் அவர் எடுத்துக்கொள்ளவில்லை. எனவே, எச்.ஐ.வி தொற்றோடு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த 30 மணி நேரத்திலேயே அக்குழந்தைக்கு 3 வித கூட்டு மருந்துகளை செலுத்தி சிகிச்சையைத் தொடங்கினார்கள், குழந்தைகள் எச்.ஐ.வி நிபுணர் டாக்டர் ஹன்னா கே தலைமையிலான டாக்டர்கள். இதுவரை யாரும் முயற்சித்திராத இந்த சிகிச்சை தொடர்ந்து 18 மாதங்களுக்கு நீடித்தது.

அதன்பின் அந்தத் தாயார் பொறுப்பில்லாமல், 6 மாத காலத்துக்கு குழந்தையை சிகிச்சைக்கு அழைத்து வரவில்லை. ‘எல்லா முயற்சியும் வீண்’ என்று விரக்தியோடு மீண்டும் அந்தக் குழந்தையின் ரத்தத்தை சோதித்த மருத்துவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. ஆம், குழந்தையின் ரத்தத்தில் முற்றிலுமாக எச்.ஐ.வி வைரஸ்களே இல்லை.

அட்லாண்டாவில் நடந்த மருத்துவக் கருத்தரங்கில் நுண்ணுயிரி சிகிச்சை நிபுணர் டாக்டர் டெபோரா பெர்சாட், ‘‘குழந்தை பிறந்ததுமே நோய் எதிர்ப்பு மருந்துகளால் சிகிச்சை அளித்தால், எச்.ஐ.வி பாதிப்பை முழுமையாக குணப்படுத்தலாம் என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது’’ என்று சொல்லியிருக்கிறார்.

எச்.ஐ.வியில் இருந்து முழுமையாக குணமடைந்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றவர் திமோதி பிரவுன். அமெரிக்கரான இவருக்கு எச்.ஐ.வி மற்றும் வெண்புள்ளி பாதிப்புகள் இருந்தன. இவை முற்றிய நிலையில், தானமாகக் கிடைத்த எலும்பு மஜ்ஜை மூலம் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் அதிசயம், அவரது இரு பாதிப்புகளும் சரியானதுதான். ஆனால், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மிக ஆபத்தானது. இதை எல்லா எச்.ஐ.வி பாதிப்பாளர்களுக்கும் அளித்து விட முடியாது. அந்த சிகிச்சையை எளிமையாக்குவது குறித்த ஆராய்ச்சி தொடர்கிறது.

திமோதி பிரவுனுக்குப் பின்னர், எச்.ஐ.வி பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்தவர் என்ற பெருமையை மிசிசிப்பி பெண் குழந்தை பெற்றுள்ளது.
- ஜே.எஸ்.கே.பாலகுமார்