விருந்து





செல்போன் மீண்டும் ஒலிக்க, அதன் ஒளிர்திரையையே வெறித்துப் பார்த்தான் ராஜேஷ். அரை மணி நேரத்துக்குள் ரகுவிடமிருந்து வரும் மூன்றாவது அழைப்பு.
‘‘டேய் ராஜேஷ்... நாங்க ஹோட்டலுக்குத்தான் போயிட்டிருக்கோம். நீ கிளம்பிட்டியா?’’ - செல்போனில் பரபரத்தான் ரகு.

‘‘நான்தான் சொன்னேனே... இன்னிக்குத்தான் புதுசா வேலையில சேர்ந்திருக்கேன்! முதல் நாளே பர்மிஷன் கேக்கறது கஷ்டம். ப்ளீஸ்... என்னை விட்டுடேன்!’’ தயங்கினான் ராஜேஷ்.
‘‘என்னடா... நம்ம ப்ரெண்ட்ஸெல்லாம் இத்தனை வருஷம் கழிச்சு மீட் பண்றோம். உனக்கு ஒரு வாரம் முன்னாடியே சொன்னேனில்ல... வரலேன்னு மட்டும் சொல்லாதே. ப்ளீஸ், எங்களுக்காக வா!’’ - அன்புக்கட்டளையைத் தட்ட
முடியவில்லை.
‘‘சரி, கிங்ஸ் ஹோட்டல்தானே! மீட் பண்ணலாம். ஆனா, உங்களோட விருந்தெல்லாம் சாப்பிட முடியாது சரியா!’’
‘‘ரொம்பத்தான் பந்தா காட்டறே... சரி, சாப்பிட வேண்டாம். வந்து தலையைக் காட்டு போதும்!’’
நண்பர்கள் சந்தோஷமாக அரட்டை அடித்துக் கொண்டிருப்பதை தொலைவிலிருந்து பார்த்தான் ராஜேஷ். தயக்கத்துடன் அவர்கள் அருகில் சென்று நின்ற அவனை அதிர்ச்சியுடன் பார்த்தனர் நண்பர்கள். ‘‘எல்லாரும் நல்லாயிருக்கீங்களா? உங்களை பார்த்ததுல சந்தோஷம். இதுக்குத்தான் நான் வரலன்னு சொன்னேன். சரி சொல்லுங்க... என்ன சாப்பிடறீங்க?’’ என்று குறிப்பெடுக்கத் தயாரானான், அந்த ஹோட்டலில் சர்வர் வேலைக்குப் புதிதாய் சேர்ந்த ராஜேஷ்.