+2 கம்ப்யூட்டர் சயின்ஸ் : சென்டம் வாங்க டிப்ஸ்





கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் சேர்வதற்கு ‘பிளஸ் 2’வில் கணிதத்தை ஒரு பாடமாகப் படித்திருந்தாலே போதுமானது. ஆனால் சமீபமாக ‘சாஃப்ட்வேர் எஞ்சினியர்’ கனவு இருப்பவர்கள், கணிதத்துடன் கம்ப்யூட்டர் சயின்ஸையும் மேல்நிலை வகுப்பிலேயே தேர்ந்தெடுத்து விடுகிறார்கள். ‘‘கணிதம் மட்டும் படித்துவிட்டு வருபவர்கள், எஞ்சினியரிங் சேர்ந்ததும் முதல் வருடம் ரொம்பவே சிரமப்படுகிறார்கள். பள்ளி அளவிலேயே கம்ப்யூட்டரை ஒரு பாடமாக படித்து வருகிறவர்களிடம் அந்தப் பிரச்னை இல்லை’’ என்று காரணம் சொல்கிறார்கள் கணினியியல் ஆசிரியர்கள். கணக்கு தவிர, காமர்ஸ் பிரிவிலும் ஒரு பாடமாக இருக்கும் கணினி அறிவியலில் எப்படி வாங்கலாம் சென்டம்? சாதித்த மாணவர்களும் அந்தச் சாதனைக்குக் காரணமான ஆசிரியர்களும் வழி காட்டுகிறார்கள்.

மற்ற அறிவியல் பாடங்களைப் போலவே கம்ப்யூட்டர் சயின்ஸிலும் 150 மதிப்பெண்களுக்குத்தான் எழுத்துத் தேர்வு. ஆனாலும், வினாத்தாள் வித்தியாசப்படுகிறது. இதில் 75 ஒரு மதிப்பெண் கேள்விகள், 20 இரு மதிப்பெண் கேள்விகள், 7 ஐந்து மதிப்பெண் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும். மேலும் ஒரு மதிப்பெண் கேள்விகளை முதலிலேயே முடித்து விடைத்தாளை ஒப்படைத்தால்தான் அடுத்த பகுதிக்குச் செல்ல முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு மார்க் விடைகளை எழுதும் விடைத்தாள், போட்டித்தேர்வுகளில் வழங்கப்படுவது போன்ற ஓ.எம்.ஆர் விடைத்தாள் என்பதால் கையாள்வதில் கவனம் அவசியம்.

‘‘ஐம்பது சதவிகித மதிப்பெண்கள் ஒதுக்கப்படும் ஒரு மார்க் பகுதியே சென்டம் வாய்ப்பையும் தடுக்கிறது‘‘ எனச் சொல்லும் தூத்துக்குடி மாணவி மாலதி, கடந்த ஆண்டு தேர்வில் அதை வெற்றிகரமாகச் சந்தித்து முழு மதிப்பெண் பெற்றவர். ஒரு மதிப்பெண் கேள்விகளை எதிர்கொள்ளும் லாவகம் குறித்து இவரிடம் கேட்டோம்.

‘‘புளூபிரின்ட்படி மொத்தமுள்ள 21 பாடங்கள்ல இருந்தும் ஒரு மார்க் கேள்விகள் கேக்குறாங்க. அதனால ஒவ்வொரு பாடத்துலயும் புக்பேக் கேள்விகளை கண்டிப்பா படிச்சே ஆகணும். ஆனா, அதுமட்டுமே போதும்னு நினைக்கக் கூடாது. பாடங்களுக்குள்ள இருந்தும் கேள்விகள் எடுக்கப்பட்டு கேட்கப்படுது. அதனால தனியா ஒரு மார்க் வினாக்களுக்கான ஒரு தொகுப்பை நாமே தயாரிச்சுக்கலாம். ரெண்டு தொகுதியிலயும் சேர்த்து கிட்டத்தட்ட 2000 ஒரு மார்க் கேள்விகள் இருக்கலாம். புக்பேக் தாண்டி கேட்கப்படுகிற கேள்விகளுக்கு பழைய கேள்வித்தாள்களைப் பார்க்கறதும் நல்ல பலன் தருது. நிறைய கேள்விகள் இருக்கறதால சப்ஜெக்ட்வாரியா பிரிச்சு குரூப் ஸ்டடியா படிக்கலாம்’’ என்கிற மாலதி, ஓ.எம்.ஆர் விடைத்தாளைக் கையாள்வது குறித்தும் பயனுள்ள டிப்ஸ் தருகிறார்...

*  ஓ.எம்.ஆர் விடைத்தாளில் ஷேட் பண்ணும்போது அது குறிப்பிட்ட கட்டத்துக்குள் தெளிவாக இருக்க வேண்டும்.

*  நிறையவே நேரம் இருப்பதால் நிதானமாக யோசித்து விடையளிக்க வேண்டும். அவசரப்பட்டு அழித்து திருத்துவது விடைத்தாளைச் சேதப்படுத்தி மதிப்பெண் இழப்புக்குக் காரணமாகலாம்.

*  ஓ.எம்.ஆர் விடைத்தாளில் விடை தவிர்த்து, கேட்கப்பட்டிருக்கும் மற்ற விபரங்களையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

‘‘சாஃப்ட்வேர் எஞ்சினியராவதற்கு முக்கியமான பாடம். சென்டம் வாங்கறதும் குதிரைக் கொம்பு இல்ல. ஆனாலும், ‘கட் ஆஃப்’பில் இதோட மார்க் சேர்க்கப்படலைங்கிறதால முக்கியத்துவம் இல்லாத சப்ஜெக்ட்டாவே இருக்கு. இதனாலேயே மாணவர்கள் மொழிப்பாடங்களைப் போலத்தான் இதையும் நினைக்கிறாங்க’’ என்று ஆதங்கப்படும் ஆசிரியை சீதாரமணியே கடந்தாண்டு மாலதியை சென்டம் வாங்க தயார்படுத்தியவர். ஒரு மார்க் தவிர்த்த மீதிப் பகுதியில் மதிப்பெண்கள் அள்ள சூப்பர் டிப்ஸ் தருகிறார் இவர்...

*  இரண்டு, ஐந்து மார்க் கேள்விகளில் மார்க் குறைய வாய்ப்பு ரொம்பவே குறைவு. இந்தப் பகுதிகளுக்கு தியரி பாதியாகவும் புரோகிராமிங் மீதியாகவும் பிரித்துப் படிக்கலாம். தியரிக்கு புத்தகத்தை வாசித்தால் போதும். புரோகிராமிங் கேள்விகளை எதிர்கொள்ள திரும்பத் திரும்ப ஒர்க் அவுட் பண்ணிப் பார்த்துவிட்டுப் போக வேண்டியது அவசியம்.

*  சாய்ஸில் புரோகிராமிங் கேள்விகளாகவே தேர்ந்தெடுக்கலாம். காரணம், அந்தக் கேள்விகள்தான் நேரத்தை மிச்சப்படுத்தித் தரும்.

*  புளூபிரின்ட் படியே சில பாடங்களில் இருந்து இரண்டு மார்க் கேள்விகளும் சில பாடங்களில் இருந்து ஐந்து மார்க் கேள்விகளும் கேட்கப்படுவதில்லை. அந்தப் பாடங்களில் ஒரு மார்க் கேள்விகளை மட்டும் பார்த்தா போதும். (உதாரணத்துக்கு, முதல் தொகுதியில் கடைசி இரு பாடங்களில் இருந்து ஐந்து மதிப்பெண் கேள்விகள் இடம்பெறுவதில்லை)

*  கேள்வித்தாளின் கடைசி இரு கேள்விகள் (ஐந்து மதிப்பெண் பகுதி) இரண்டே வரிகளில் விடை வருமளவுக்கு மிகவும் எளிமையானவை. அவற்றை சாய்ஸில் விடுவது நல்லதல்ல. பெரும்பாலும் தொகுதி இரண்டின் 8, 9வது பாடங்களிலிருந்தே கேட்கப்படுகின்றன அவை.

*  புத்தகத்தைப் பொறுத்தவரை முதல் தொகுதியை விட இரண்டாம் தொகுதியிலிருந்தே ஐந்து மதிப்பெண் கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன.

*  நேரத்தைப் பொறுத்தவரை மற்ற எந்த அறிவியல் பாடத்துக்கும் இதற்குக் கிடைப்பதுபோல் கிடைப்பதில்லை. ஒரு மார்க் விடைத்தாளை முதலிலேயே வாங்கி விடுவர் என்றாலும் அதற்கும் கூடுதலாகவே நேரம் தரப்படுகிறது.

‘‘கம்ப்யூட்டரைக் கையாளத் தெரிந்துகொண்டால் ‘கணினி அறிவியல்’ தேர்வை மிக எளிதாக எதிர்கொண்டு சென்டம் வாங்கலாம்’’ என்கிறார் சீதாரமணி. பாடமாக எடுத்துப் படிக்காதவர்களுக்கே ஆர்வத்தைத் தூண்டும் ஒரு பொருள் கம்ப்யூட்டர் என்றால், அதைப் படிப்பவர்களுக்குச் சொல்ல வேண்டுமா?

இதுவரை நீங்கள் எதிர்கொள்ளவே பயந்த எமகாதகப் பாடங்களையெல்லாம் எளிமையாக்கி, ‘இதிலும் சென்டம் வாங்கலாம்’ என்ற நம்பிக்கையை இந்தப் பகுதி ஏற்படுத்தியிருக்கும் என்று நம்புகிறோம். நம்பிக்கையோடு பொதுத்தேர்வை எதிர்கொண்டு சென்டம் பெற முயற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம். எதிர்பார்த்த மதிப்பெண்ணில் ஒன்றிரண்டு குறைந்தாலும் மனம் தளராமல் வாழ்வை எதிர்கொண்டு வெல்வதில்தான் உள்ளது. அப்படிப்பட்ட மனப்பக்குவத்தோடு நீங்கள் அனைவரும் வாழ்வில் சென்டம் போட வாழ்த்துகள்!
தொகுப்பு: அய்யனார் ராஜன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன், பரமகுமார்


புரோகிராமே வெல்லும்!

வேலூர் சிருஷ்டி மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்னாள் மாணவர் சிவக்குமார். தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படிக்கிறார். கடந்த ஆண்டு சென்டம் வாங்கியது பற்றி அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்...

‘‘தியரியை விட புரோகிராமிங் பண்றது சப்ஜெக்ட்ல நல்ல அறிவைத் தரும்னு சீனியர்ஸ் சொன்னதால, படிக்கும்போதே நிறைய புரோகிராம் பண்ணிப் பார்த்துப் படிச்சேன். தேர்வுல மார்க் ஸ்கோர் பண்ண அந்த உத்தி கை கொடுத்திச்சு. ஒரு மார்க் கேள்விகளுக்கு புக்பேக், ஆசிரியர்கள் குறிச்சுத் தர்றது, பழைய கேள்வித்தாள்கள்னு கலந்து படிச்சதால சாதிக்க முடிஞ்சது!’’