சுண்டாட்டம் : விமர்சனம்





கேரம் விளையாட்டின் சுத்த தமிழ்ப்பெயர்தான் ‘சுண்டாட்டம்’. வடசென்னையைக் களமாக வைத்து, காதல், ஆக்ஷன், சஸ்பென்ஸ் என பல காய்களை நகர்த்தி விளையாடி யிருக்கும் கதை. புதுக்களம், புது விளையாட்டு என வித்தியாசம் காட்டியிருக்கும் புது டைரக்டர் பிரம்மா ஜி.தேவ், புதிய முகமாகத் தெரியவில்லை.

சுண்டாட்டத்தில் சூரப்புலி தான் ஹீரோ இர்பான். பார்த்த கணத்திலேயே தங்கையின் தோழி அருந்ததியிடம் காதல் துளிர்க்கிறது. இதற்கிடையில் ஒருநாள் கேரம் போட்டியில் இர்பான் கலந்துகொள்ள... வம்பு தும்பாகி வாழ்க்கை திசை மாறுகிறது. இர்பான் வெளிநாடு போனாரா... காதல் களைகட்டியதா... என பயங்கர ஆக்ஷனுக்கு நடுவில் சொல்லியிருக்கிறார்கள். அதுதான் க்ளைமாக்ஸ்.



குறுந்தாடியும், கூரிய பார்வையுமாக ஹீரோ இர்பான் நடிப்பில் ரெட் அண்ட் ஃபாலோ போடுகிறார். குடித்துவிட்டு காதலி வீட்டு முன் சலம்புவது, கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் தெறித்து ஓடுவது என காதல் ஏரியாவில் கலகலக்க வைக்கிறார். கேரம் விளையாட்டில் கைதேர்ந்தவர் மாதிரி அத்தனை நம்பிக்கை, உறுதியுடன் ஆடுகிற அழகே அழகு. சும்மா சொல்லக்கூடாது... அதிகம் பேசாத அருந்ததி, கண்களின் பாவனைகளில் பக்கம் பக்கமாகப் பேசுவது ரசனைக் குவியல். கேரம் கிளப், கட்டப்பஞ்சாயத்து என வடசென்னை புகழ் தாதாவாக ஆடுகளம் நரேனிடம் துளி அலட்டல் இல்லாத நடிப்பு. ஹீரோவிடம் விளையாடித் தோற்ற பகையில் குரூரம் காட்டும் புதுமுகம் மது அருமை. போதையில் மூழ்கித் திளைக்கிற காட்சியில் ஆகட்டும், தோற்று பின்வாங்கும் அடிபட்ட புலியின் மனோபாவத்தை முகத்தில் காட்டியிருக்கும் விதத்தில் ஆகட்டும், மதுவிடம் என்ன ஒரு பாடி லாங்குவேஜ்!



தாதா நரேன் ஆட்களிடம் எக்குதப்பாக மாட்டிக்கொள்ளும் ஹீரோ ‘கைமா’தான் என்று நினைக்கும் வேளையில், பாராட்டும் பணமும் வாங்கி வருவது சூப்பர் ட்விஸ்ட். நரேனை போட்டுத் தள்ள எதிர் கோஷ்டி போடும் திட்டமும், அது தவிடுபொடியாகும் கட்டங்களும் எழுந்து உட்கார வைக்கின்றன.

வடசென்னையின் அழுக்கு ஏரியா, ஆட்டத்தின் போக்கைப் புரிந்துகொள்ள வைக்கிற கோணம், பரபரப்பு என கவனிக்க வைக்கும் ஒளிப்பதிவாளர் பாலகுருநாதனுக்கு அழுத்தமாக கை கொடுக்கலாம். வேகம் காட்டும் சேஸிங், மிரட்டும் அதிரடி சண்டைக் காட்சிகள் என பாய்ச்சல் காட்டும் படத்திற்கு எடிட்டர் தாசன்தான் பெரும் துணை.

சோகம், டென்ஷன், நெகிழ்ச்சி, வருத்தம் என டோன் மாற்றி அடிக்கும் ப்ரிட்டோ, பின்னணி இசையோடு பாடல்களிலும் இன்னும் கவனம் தீட்டியிருக்கலாம். ஆரம்பத்தில் குடும்பத்தோடு வலம் வரும் இர்பான், நடுவில் தனி ஆளாகத் திரிவது ஏனோ? அருந்ததி காதலுக்கு எதிரியாக இருக்கும் அண்ணன் மனம் மாறுவது... அட போங்கப்பா! அழுத்தம் அதிகம் இல்லாத காதல் அலுப்பு தருகிறது. இறுதி பரபரப்பு திருப்பத்திற்குக் கொண்டு போயிருக்கும் கதையில் கொஞ்சம் கத்திரி வைத்திருந்தால் ‘சுண்டாட்டம்’ இன்னும் வெற்றிகரமான ஆட்டமாக அமைந்திருக்கும்.
- குங்குமம் விமர்சனக் குழு