டேஸ்ட்





‘‘எங்க அம்மா சமையலை சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு ருசி கண்டவன் நான். ஆனா என் மனைவி டேஸ்ட்டாவே சமைக்க மாட்டேங்குறாடா’’ என்று சதா பொருமிக் கொண்டிருந்த ஆபீஸ் நண்பன் அஸ்வினை, தன் வீட்டுக்கு சாப்பிட அழைத்துப் போனான் கோகுல்.

‘‘அடடா! எவ்வளவு டேஸ்ட்டா இருக்கு தெரியுமா? அதுலயும் இந்த ரசம்... ஆஹா! நீ கொடுத்து வைச்சவன்டா’’ - கோகுலின் மனைவியைப் பாராட்டினான் அஸ்வின்.
‘‘கொஞ்சம் இங்கே வாம்மா...’’ என கோகுல் அழைக்க, சமையல் அறையில் இருந்து வெளிப்பட்டாள் அஸ்வினின் மனைவி!
அதிர்ச்சியில் உறைந்தான் அஸ்வின்.
‘‘என்ன பார்க்குற? நீ சும்மா சும்மா புலம்புறேன்னு உன் மனைவி சொல்லித்தான் இந்த நாடகம். நீ சாப்பிட்டது உன் மனைவியோட சமையல்தான். பார்த்தியா, எவ்வளவு நல்லா இருக்குன்னு! இப்ப மட்டும் எங்கிருந்து வந்தது இந்த டேஸ்ட்? எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்! அவ நல்லா சமைக்க மாட்டாள்னு நினைச்சுக்கிட்டே சாப்பிட்டா நல்லா இல்லாமத்தான் தெரியும்!’’
நண்பனின் அட்வைஸைத் தவிர்க்க முடியாமல் நெளிந்தபடி விடை பெற்றவன், போகும்போது நினைத்துக் கொண்டான்!
‘அடச்சே... இவனும் கண்றாவியான சாப்பாட்டைத்தான் சாப்பிடுறான்னு நினைச்சு, நாகரிகத்துக்காக நல்லா இருக்குன்னு சொன்னா, நமக்கே ஆப்பாயிருச்சே! இனிமேல் நல்லா இல்லைன்னா, நல்லா இல்லைன்னே சொல்லிடணும் போல!’