என் கனவை கலைச்சிடாதீங்க... : பொங்கும் லட்சுமி ராய்




லட்சுமி ராயை பார்த்தாலே கிறக்கம் வரும். முதல்முறையாக உருக்கம் வந்தது அவர் பேசியதைக் கேட்டு! எப்போதும் ஏதாவது ஒரு கிசுகிசுவோ, சர்ச்சையோ அவரைச் சுழற்றி அடித்துக் கொண்டிருக்கும். சமீபத்திய சர்ச்சை, நடிகர் வினய்யுடன் அவர் நடித்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பானது. ‘‘ஒரு ஆணுடன் ஒரே அறையில் தங்குவது தப்பில்லை’’ என்று அவர் சொன்னதாக வெளியான செய்தியால் சூடாகிப் போன லட்சுமி கோர்ட் வரை போனது சென்ற வார பரபரப்பு.

‘‘சினிமா பார்க்கறதைத் தவிர எந்த வகையிலும் சினிமா ஃபீல்டுக்கு சம்பந்தம் இல்லாத குடும்பம் என்னோடது. அன்பா நேசிச்சு, பாசத்தைக் கொட்டி வளர்த்தாங்க. என் எந்த விருப்பத்துக்கும் தடை போடாத குடும்பம். அப்படி சுதந்திரமா என்னை அனுமதிச்சவங்களே, ‘சினிமா ஃபீல்டுக்கா போறே?’ன்னு ஆரம்பத்தில தயங்கினாங்க. அப்புறம் நடிப்பில் எனக்கு இருக்கும் ஆர்வத்தைப் புரிஞ்சிக்கிட்டு அனுமதி கொடுத்தாங்க.

எந்த சினிமா பின்னணியும் இல்லாம ஃபீல்டுக்கு வந்தேன். ஆரம்பத்தில நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த ஏழு வருஷத்தில தனி ஆளா நின்னு ஜெயிச்சிருக்கேன். இந்த இடத்தை அடைவதற்கு நான் எவ்வளவு உழைச்சு இருப்பேன், எத்தனை கஷ்டப்பட்டிருப்பேன்னு என்னைப் பத்தி தப்புத் தப்பா செய்தி பரப்பறவங்களுக்குத் தெரியுமா?

கடந்த மூணு வருஷமா ஹிட் ஆகிற படங்களில் நடிச்சிக்கிட்டு இருக்கேன். எனக்குன்னு ஒரு ஆடியன்ஸை சம்பாதிச்சிருக்கேன். இப்படி ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும், என்னை விரட்டி விரட்டி கொத்துது தவறான செய்திகள். டோனி விஷயத்தில் தொடங்கி நிறைய எழுதிட்டாங்க. இடையில கொஞ்ச நாளாதான் நிறுத்தியிருந்தாங்க. இப்போ மறுபடியும் என் சொந்த வாழ்க்கையை டேமேஜ் பண்றாங்க. வினய் எனக்கு நல்ல ஃபிரண்டுதான். ‘ஒன்பதுல குரு’ படத்தில் சேர்ந்து நடிச்சதோட அது முடிஞ்சு போச்சு. ஆனா, ரெண்டு பேரும் ஒண்ணா தங்குனதாகவும். ‘அதில் என்ன தப்பிருக்கு?’ன்னு நான் கேட்டதாகவும் எழுதறது எந்த வகையில நியாயம்?



யார் துணையும் இல்லாமலே தனி ஆளா நான் வளர்ந்தது பலருக்குப் பொறாமையை ஏற்படுத்திருக்கு. அதுக்காக கேரியரையே காலி பண்ண நினைக்கிறது நியாயமில்லை. ஆனா, என்னோட வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம்னு நாலு மொழியிலும் நடிச்சிக்கிட்டு இருக்கேன். சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் நல்ல காரியங்களும் செஞ்சிட்டு இருக்கேன். நல்லது நினைக்கற எனக்கு நல்லதே நடக்கும். இந்த வருஷத்துக்குள்ள இந்திப் படத்திலும் நடிச்சிருவேன். அதுக்கான பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டிருக்கு...

நடிகைன்னா அவளைப் பத்தி என்ன வேணும்னாலும் செய்தி பரப்பலாம்னு ஒரு மனநிலை பலருக்கு இருக்கு. எங்களுக்கும் மனசு, ஆசாபாசங்கள் இல்லையா? அடிப்படையில் நானும் ஒரு பொண்ணுங்க. எனக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு. கடைசி வரைக்கும் நான் நடிகையாகவே இருக்கப் போறதில்ல. எனக்கும் ஒருநாள் கல்யாணம் நடக்கும்; குடும்பம் வரும். அப்போ இந்த மாதிரி தப்பான செய்திகளெல்லாம் என்னை பாதிக்காதா? என்னோட குடும்பத்தில் உள்ளவங்க எவ்வளவு வேதனைப்படுவாங்கன்னு கொஞ்சமாவது யோசிச்சுப் பார்க்கணும். இந்த மாதிரி மனசளவில் பாதிக்கப்படும் எல்லா நடிகைகள் சார்பிலும்தான் நான் போராட்டத்துல இறங்கியிருக்கேன்.



ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அன்பும், மரியாதையும் மட்டும்தான். ஏன்னா, இந்தக் கால பெண்கள் ஆண்களுக்கு சமமா திறமையை நிரூபிச்சு, சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க. பெண்கள் உரிமை, பாதுகாப்பு பற்றி அமைப்பு ஆரம்பிக்கும் எண்ணம் கூட எனக்கு வருது. பார்க்கலாம்!’’

‘‘கல்யாணம் பற்றி ஏதாவது ஐடியா இருக்கா?’’
‘‘அதப் பண்ணும்போது சொல்றேன். இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கல. நான் நினைச்சதைவிடவும் என் கேரியர் நல்லா போய்க்கிட்டிருக்கு. எல்லா மொழியிலும் பெரிய ரவுண்ட் வந்துட்டு குடும்ப வாழ்க்கையைப் பற்றி யோசிப்பேன். ஆனா, குருவி கூட்டை கலைக்கிற மாதிரி என்னோட கனவை கலைச்சிடாதீங்கன்னு மீடியா ஆட்களை என் அண்ணன், தம்பியா நினைச்சி கேட்டுக்கிறேன்... ப்ளீஸ்!’’
- அமலன்
படங்கள்: ஜி.வெங்கட்ராம்