ஆரத்தி தட்டில் லாபமும் கொட்டும்





சடங்குகளும், சம்பிரதாயங்களும் காலத்துக்கேற்ப மாறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட இன மக்களின் திருமணம் மற்றும் விசேஷங்களில் மட்டுமே வைக்கப்பட்டு வந்த ஆரத்தி தட்டு கலாசாரத்தை இன்று பலரும் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். திருஷ்டி கழிக்க, வரிசை வைக்க, அழகுக்காக என ஆரத்தி தட்டுகளின் பயன்பாட்டில் மட்டுமே வித்தியாசம்.

சென்னையைச் சேர்ந்த பாவனா பிரசாத் செய்கிற ஆரத்தி தட்டுகளில் அழகு அள்ளுகிறது. ஆரத்தி தட்டு அவசியம் வைக்க வேண்டும்... ஆனால் பட்ஜெட்டும் கையைக் கடிக்கக் கூடாது என நினைக்கிற மக்களுக்கு பாவனாவிடம் இருக்கிறது தீர்வு.

‘‘செலவு அதிகமாகக் கூடாதுன்னு நினைக்கிறவங்க தெர்மகோல்ல பண்ணலாம். ரொம்பவும் கம்மியாவும் வேண்டாம், ரொம்ப காஸ்ட்லியாவும் வேணாம்னு நினைக்கிறவங்க எவர்சில்வர்ல பண்ணலாம். எவ்வளவு வேணா செலவழிக்கத் தயார்னு நினைக்கிறவங்களுக்கு பிளைவுட் தட்டு சரியான சாய்ஸ்.

தட்டுகளை முதல்ல பெயின்ட் அடிச்சு, டிசைன் பண்ணிட்டு, அதுக்கு மேல நம்ம விருப்பப்படி அலங்காரம் பண்ண வேண்டியதுதான் வேலை. ரெண்டு கொப்பரைத் தேங்காயை வச்சு, அது மேல மாப்பிள்ளை, பெண்ணோட பேரை பெயின்ட் அல்லது ஸ்டிக்கர்ல எழுதலாம். குட்டிக்குட்டி பொம்மைகளை ஒட்டி டிசைன் பண்ணலாம். உபயோகமில்லாத பழைய சிடியை உபயோகிக்கலாம். அகல் விளக்குகளை ஒட்டி, மெழுகுவர்த்தியோ, கற்பூரமோ ஏத்தி வைக்கிற மாதிரி செய்யலாம். இது தவிர மணி, முத்து, குந்தன் ஸ்டோன், ஹேண்ட்மேட் பேப்பர், லேஸ், ஜரிகை, ஸ்டிக்கர் பொட்டு, நவதானியம், கலர், கலர் மிட்டாய்.... இப்படி எதை வேணாலும் உபயோகிச்சு கற்பனைக்கேத்தபடி டிசைன் பண்ணலாம். தெர்மகோல் தட்டுன்னா, நம்ம விருப்பத்துக்கேத்தபடி வெட்டிக்கலாம். எவர்சில்வர் தட்டு ரெடிமேடா கிடைக்கிறதால பிரச்னை இல்லை. பிளைவுட்னா, கார்பென்டர்கிட்ட வெட்டி வாங்கணும்.

நிறைய மாடல்கள்ல, வேற வேற பட்ஜெட்ல தட்டுகளை தயார் பண்ணி வச்சுக்கிட்டா, வாடகைக்கும் கொடுக்கலாம். சொந்தமா கேட்கறவங்களுக்கு விலைக்கும் தரலாம். தெர்மகோலா, எவர்சில்வரா, பிளைவுட்டாங்கிறதைப் பொறுத்து ஒரு நாளைக்கு 15 தட்டு வரை ரெடி பண்ணலாம். கல்யாண கான்டிராக்டர்கள், மண்டப உரிமையாளர்கள், கேட்டரிங் பண்றவங்ககிட்ட சொல்லி வச்சு ஆர்டர் பிடிக்கலாம்’’
என்கிறார் பாவனா.
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்


முதலீடு: 5 தெர்மகோல் தட்டுகளுக்கு 300 ரூபாய், 5 எவர்சில்வர் தட்டுகளுக்கு 800 ரூபாய், 5 பிளைவுட் தட்டுகளுக்கு 2 ஆயிரம் ரூபாய்.

லாபம்: 50 சதவீதம்
பயிற்சிக்கு: தெர்மகோலில் ஒன்று, எவர்சில்வரில் ஒன்று, பிளைவுட்டில் ஒன்று என 3 மாடல்களை ஒரே நாளில் கற்றுக் கொள்ள ஆயிரம் ரூபாய் கட்டணம். தேவையான பொருள்களும் தரப்படும்.
தொடர்புக்கு: 81448 37663