இந்தியா பேசுமா?





ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை நிகழ்த்திய போர்க்குற்றங்கள் பற்றிய வெளிப்படையான விசாரணை வேண்டி, ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என பிரசாரத்தில் இறங்கியிருக்கிறது ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்பு. அதன் இந்திய தலைமை இயக்குநர் அனந்தபத்மநாபனிடம் பேசினோம். தெளிந்த வார்த்தைகளோடு சூழ்நிலை பற்றிப் பேசினார் அவர்...

‘‘ஐ.நா சபையில் என்னதான் நடந்துகொண்டு இருக்கிறது?’’
‘‘ஐ.நா சபையில் கெல்லம் மெக்ரேயின் ‘நோ ஃபயர் ஸோன் - தி கில்லிங் ஃபீல்ட்ஸ்’ ஆவணப்படத்தைப் போட்டுக் காட்டியபோது மன்ற உறுப்பினர்கள் கலங்கிப் போனார்கள். அங்கே என்ன நடந்திருக்கிறது என்பதை நன்றாகப் புரிய வைத்துவிட்டது. பிரபாகரனின் இளைய மகன் படுகொலை உலகமெங்கும் அதிர்ச்சியையும், கவலையையும் உண்டாக்கிவிட்டது. நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என அவர்களுக்குள்ளே கேள்வி பிறந்து விட்டது. இந்தியப் பிரதமரை இலங்கையின் மீதான தீர்மானத்திற்கு ஆதரவாகப் பேச வைக்க எத்தனிக்கிறோம். இலங்கையின் போர் மீறலை தட்டிக்கேட்கக் கூடிய சூழலை ஒருசேர உருவாக்க வேண்டும். அதற்கான தீவிரமான பணியில் இருக்கிறோம்.’’

‘‘ஐ.நா சபையில் என்ன நடக்கும் என யூகிக்க முடியுமா?’’
‘‘உடனுக்குடன் எதுவும் நடந்துவிடாது. அதுதான் உண்மை. அடுத்த இருபத்து நாலு மணி நேரத்தில் எல்லாம் நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பதிலும் நியாயம் கிடையாது. தமிழினத்திற்கு எதிராக நடந்த போருக்கு வலிமையான ஆதாரங்களும், அழிக்க முடியாத சாட்சிகளும் இருக்கின்றன. இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால்தான் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும். சர்வதேச அளவில் இதனைக் கொண்டு போக வேண்டிய கட்டாயம் உள்ளது. இலங்கையில் காமன்வெல்த் மாநாடு அக்டோபரில் நடக்கப்போகிறது. அந்தக் கொடூர பூமியில் இந்த மாநாடு நடக்கத்தான் வேண்டுமா என்ற எதிர்ப்புக்குரல்கள் இப்போதே ஒலிக்கத் தொடங்கி விட்டன. இது நல்ல ஒரு குறியீடு. இந்த மாநாட்டை நடத்த முடியாத இடர்ப்பாடு அவர்களுக்கு வரலாம். ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் விசாரணை நடந்தால் இலங்கை தலை குனிய வேண்டும். அந்த விசாரணைக்குத்தான் இவ்வளவு முயற்சியும். எங்கள் அம்னெஸ்டி அமைப்பினர் அந்தந்த அரசுகளுடன் பேசி இலங்கையின் போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.’’

‘‘ஆனால் போர் நடந்தபோது அப்பாவிகளின் மரணத்தைத் தடுக்க ஐ.நா மனது வைக்கவில்லையே..?’’
‘‘ஐ.நா பொதுச்செயலாளர் பான்-கி-மூனுக்கு அந்தத் தகவலைச் சொல்ல வேண்டியவர்கள் தங்கள் பணியைச் சரிவர செய்யவில்லை என்பது பின்னால தெரியவந்தது. வேறு வழியில்லை, இறுதியாக ஐ.நா அமைப்பைத்தான் நம்ப வேண்டியுள்ளது. எல்லா நாடுகளும் அங்கேதான் ஒருசேர சந்திக்கின்றன. உலக அரசியல் அங்கேதான் பேசப்படுகிறது. ஒடுக்குமுறைகள், இன அழிப்பு அங்கேதான் கவனத்திற்கு வைக்கப்படுகின்றன. சில குறைபாடுகள் இருக்கின்றன. அதற்காக ஐ.நா சபையை விட்டுத்தர முடியாது. கடைசியாக நீதியை அங்கேதான் பெற வேண்டி இருக்கிறது.’’

‘‘நீங்கள் கெல்லம் மெக்ரேயின் ஆவணப்படத்தை டெல்லியில் பார்வைக்கு வைத்தபோது அது எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியது?’’
‘‘முக்கியமானவர்கள் அங்கே கூடியிருந்தார்கள். ஆட்சியாளர்களோடு அறிவுபூர்வமானவர்களும் சேர்ந்திருந்தார்கள். எல்லோரும் பதறி விட்டார்கள். போரின் உக்கிரத்தை நேரில் பார்க்கிற மாதிரி பரிதவிப்பு அது. அவர்களால் உடனடியாகப் பேச இயலவில்லை. இளஞ்சிறுவன் பாலச்சந்திரனின் இறப்பை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. இப்படித்தான் ஐ.நா சபையிலும் இருந்தது. துக்கத்தின் சாயலும், வேதனையும் எங்கேயும் ஒன்றுதான்.’’

‘‘இந்தத் தீர்மானத்திற்கும், சுட்டிக் காட்டலுக்கும் இத்தனை வருடங்களா?’’
‘‘அதுதான்... உங்களின் அவசரம் இங்கே நடக்காது. பெரும் திரளான நாடுகளிடமும், தலைவர்களிடமும் கொண்டு போய் சேர்க்கிற விஷயமிது. முழுமையான பார்வைக்கு தீவிரமான ஆதாரங்கள் வேண்டும். இந்த ஆவணப்படம் 83 நிமிடம் ஓடக்கூடியது. நாங்கள் 22 நிமிடம்தான் திரையிட்டு இருக்கிறோம். அங்கே உள்ள சிங்கள ஊடகத்திற்கே எந்த சுதந்திரமும் இல்லை. அவர்கள் மறைமுகமாக எச்சரிக்கப்பட்டார்கள். நாட்டை விட்டு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். சிலர் கேள்வி கேட்க ஆளில்லாமல் கொல்லப்பட்டார்கள். எல்லாம் நடத்திவிட்டு அங்கே ஜனநாயகம் நடக்கிறது என்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில் எதுவுமே நடக்கவில்லை என்பதில் உண்மையில்லை. கேள்வி கேட்பதற்கான சமயம் உருவாக காலங்கள் வேண்டியிருந்தது.’’

‘‘இலங்கையின் போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அதற்காக ராஜபக்ஷேவிற்கு தண்டனைகள் கிடைக்க வழி இருக்கிறதா?’’
‘‘நிச்சயமாக வழியிருக்கிறது. அதற்கான முன்மொழிதல்கள், நடைமுறைகள் முறையாக நடக்கவேண்டும். இலங்கைக்கு எதிராக கடந்த வருடமே மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை இலங்கை அரசும் ஏற்றுக்கொண்டது. அதில் சில பரிந்துரைகள் சொல்லப்பட்டன. ஆனால், எதிர்பார்த்த மாதிரி இலங்கை அரசு அதற்கான எந்த முன்னெடுப்பையும் செய்யவில்லை. அதனை ஐ.நாவின் மனித உரிமை கவுன்சில் கண்டுகொண்டது. ஒரு நாட்டின் மீது படிப்படியாக நடவடிக்கைகளை மட்டுமே ஐ.நா சபை எடுக்கும். சர்வதேச விதிகளை ஒட்டி இனி அவ்வப்போது முடிவு எடுக்கும். அதற்கான வேலைகளை அம்னெஸ்டி இன்டர்நேஷனல் எடுத்துவருகிறது. போர்க்குற்றங்கள், உரிமை மீறல்கள் என குறுகிவிடாமல், இது இன அழிப்பு என்பதை நிரூபிக்க முயற்சி எடுக்கிறோம். எப்படியும் போர்க்குற்றவாளிகள் தப்பிக்க முடியாது.’’
- நா.கதிர்வேலன்

இலங்கைக்கு எதிராக இந்தியப் பிரதமரைப் பேச வைக்கும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் முயற்சிக்கு நீங்களும் உதவலாம். 092480 74010 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்!