குட்டிச்சுவர் சிந்தனைகள்!





குழந்தைகள் நம்மிடம் கேட்கும் கேள்விகள்...
‘‘அப்பா, மீன் தண்ணி குடிக்குமாப்பா?’’
‘‘அம்மா, ஆடு மழையில நனைஞ்சா ஜலதோஷம் புடிக்குமா?’’
இதற்கு நாம் சொல்லும் பதில்கள்...
‘‘தெரியல, இப்போ ரொம்ப முக்கியமா?’’
‘‘உனக்கு வேற வேலையே இல்லையா?’’

நாம் குழந்தைகளிடம் கேட்கும் கேள்விகள்...
‘‘இங்க சக்கரைய யாரு கொட்டினா?’’
‘‘யூனிபார்ம கண்ட இடத்துல கழட்டிப் போடாதன்னு எத்தன தடவ சொல்லி இருக்கேன்?’’
இதற்கு குழந்தைகள் சொல்லும் பதில்கள்...
‘‘தெரியல, இப்போ ரொம்ப முக்கியமா?’’
‘‘உனக்கு வேற வேலையே இல்லையா?’’
குழந்தைகள் எல்லாவற்றையும் நம்மிடமே கற்றுக்கொள்கிறார்கள்!


ஓட்டல்ல சர்வர் மூச்சு விடாம, ‘சூடா சாப்பிட என்ன இருக்கு’ன்னு பெரிய லிஸ்ட் சொன்னாலும், நாம கேட்பது ‘வேற... வேற...’ புடவைக் கடையில ஆயிரம் புடவையப் பார்த்தாலும் பொண்ணுங்க மனசு கேட்கிறது ‘வேற... வேற...’ நூறு பொம்மைகள் வாங்கிப் போட்டாலும் குழந்தைகள் எதிர்பார்ப்பது ‘வேற... வேற...’ லவ் பண்ணி அலைஞ்ச பொண்ணு கிடைக்கலைன்னா நம்ம மனசு சொல்றது ‘வேற... வேற...’
இப்படி வாழ்க்கை முழுக்க எல்லாத்துக்கும் வேற வேற ஆப்ஷன் வச்சு இருக்கோம். ஆனா, வாழும் முறையில் மட்டும் எல்லோரும் ஒரே ஆப்ஷன்தான் வச்சு இருக்கோம். நம்ம முகம் மட்டும்தான் தனித்தனியா செஞ்சது, இந்தியர்கள் எல்லோருடைய மனசும், ஒரே மெஷின்ல ஜெராக்ஸ் போட்டது.


வீட்ல மல்லாக்கப் படுத்து விட்டத்தப் பார்த்து யோசிச்சப்ப தோணுனது என்னன்னா, மாமியார் என்பவர் சாமி போல... கண்ணுக்குப் புலப்படமாட்டார்; ஆனால், நடக்கும் எல்லா செயலுக்கும் பின்னால் இருப்பார். மாமனார் என்பவர் அபார்ட்மென்ட் வாட்ச்மேன் போல... எப்பவும் எல்லாத்துக்கும் முன்னாலதான் நிற்பார்; ஆனா, மீசை பெரிசா இருக்கிறளவு மரியாதை பெரிசா இருக்காது. மச்சினன் என்பவன் நமக்கு சூப்பர்மேன். ஆனா, அந்த மச்சினனுக்கு நாம டாபர்மேன்.

முதன்முதலா பள்ளிக்கூடத்த கட்டடிச்சுட்டு சினிமாவுக்குப் போன நாள், முதன்முதலா வளர்ந்தும் வளராத தாடிய ஷேவிங் செய்த நாள், முதன்முதலா அப்பாவிடம் கெஞ்சி பைக் வாங்கிய நாள், முதன்முதலா வீட்டுக்குத் தெரியாம பீர் குடித்த நாள், முதன்முதலா ஒரு பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்த நாள், முதன்முதலா நண்பர்களோட பைக்ல ஊட்டி, கொடைக்கானல் போன நாள், முதன்முதலா கேங்கோட காலேஜ் மாஸ் கட்டடிச்ச நாள், முதன்முதலா தியேட்டர் இருட்டுல சிகரெட் சுவைத்த நாள், முதன்முதலா ஒரு பொண்ண தன் டூ வீலர்ல ஏற்றிய நாள்... இப்படி இந்தப் பசங்களுக்குத்தான் எத்தனை வயசுக்கு வந்த நாட்கள். பாவம் இந்தப் பொண்ணுங்களுக்குத்தான் அது ஒரே ஒரு நாள்!

பெண்கள் அழகிகள். கர்ப்பிணிப் பெண்கள் பேரழகிகள். பெண்களுக்கு குழந்தைப்பேறு உண்டான மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் அழகு 10% கூடிக்கொண்டே இருக்கிறது. முதல் மாதத்தில் 10 சதவீதமாக இருந்த அழகு, ஆறாம் மாதத்தில் 60% சதவீதமாகி பர்ஸ்ட் கிளாசுக்கு வந்து விடுகிறது. ஏழாம் மாசத்தில் நடக்கும் வளைகாப்பு அன்று அவர்கள் கன்னத்தில் புரளும் இளஞ்சிவப்பு வெட்கம் ஏசியன், நெரோலக்ஸ் என்று எந்த பெயின்ட் கம்பெனியாலும் கொண்டுவரப்படாத கலர். இப்படியாக, பத்தாவது மாதமான பிரசவிக்கும் மாதத்தில் 100% சதவீதமாகி அந்த ஒட்டுமொத்த அழகும் குழந்தையாய் இந்த பூமியில் பிறக்கிறது.

மனைவி கணவனை விவாகரத்து செய்ய எத்தனையோ உப்பு சப்பில்லாத உப்புமா காரணங்களை அடுக்கலாம்... ஆனா, ஒரு கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய, ‘தொடர்ந்து மூணு நாள் எனக்கு உப்புமா செஞ்சு தந்தாங்க’ன்னு சொன்னா போதும். அந்தளவு உப்புமா தமிழக கணவர்களிடம் நல்ல பேரு வாங்கி வச்சிருக்கு.
ஆனா, உப்புமாவப் பற்றிய உண்மைகளையும் உவமைகளையும் புரிஞ்சுக்கிட்டா உப்புமாவுக்கு நாம உம்மா கொடுத்து ஏத்துப்போம். உப்புமா மட்டும் இல்லையென்றால் பல திடீர் விருந்தாளிகளை பட்டினியாய் அனுப்பியிருப்பான் தமிழன். ‘சூரியவம்சம்’ படத்தில் கலெக்டர் தேவயானியின் குடும்ப மானம் காத்தது உப்புமா. உப்புமா என்பது கடவுளைப் போல, அது எந்தக் கஷ்ட காலத்திலும் நம்மைக் கைவிடுவதில்லை. உப்புமா என்பது மாமியார்கள் போல, ஆரம்பத்துல பிடிக்காட்டியும் புழங்கப் புழங்க பிடிச்சுப் போயிடும். பேச்சுலர்களை வாழ வைக்கும் வள்ளல் உப்புமா. உச்சா போயிட்டு வர்ற நேரத்தில் செஞ்சு முடிக்கக் கூடிய ஒரே உணவு உப்புமா மட்டுமே.

*  சாதாரணமானவர்கள் எப்படி லவ்வை சொல்றதுன்னு யோசிப்பார்கள்; ஆனால் சாதிக்கிறவர்கள், எப்படி லவ்வ சொல்ல வைக்கிறதுன்னு யோசிப்பார்கள்.
*  சாதாரணமானவர்கள் காதலிகளைக் கவரவும் சமாதானப்படுத்தவும் அதிகமாக ‘ஐ லவ் யூ’ சொல்கிறார்கள்; ஆனால் சாதிக்கிறவர்கள், காதலிகளைக் கவரவும், சமாதானப்படுத்தவும் அதிகமாக ‘ஐ மிஸ் யூ’ சொல்கிறார்கள்.
*  சாதாரணமானவர்கள் காதலை வளர்க்க அதிகமாக கிஃப்ட் தருகிறார்கள்; ஆனால் சாதிக்கிறவர்கள், தன் காதலே பெரிய கிஃப்ட் என காதலியை நினைக்க வைக்கிறார்கள்.
*  சாதாரணமானவர்கள் காதலியின் தோழிகளிடம் நட்பு வைத்துக்கொள்கிறார்கள்; ஆனால் சாதிக்கிறவர்கள், காதலியின் அப்பா, அம்மா, தம்பி, தங்கைகளிடம் நட்பு பாராட்டுகிறார்கள்.
*  சாதாரணமானவர்கள் காதல் தோல்வி அடைந்தால் மனசு நொந்து தளர்ந்து போகிறார்கள்; ஆனால் சாதிக்கிறவர்கள், அடுத்த காதலுக்கு ரெடியாகிறார்கள்.

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்(ஸ்)...

‘கண்ணா, ரெண்டாவது லட்டு தின்னா ஆசையா?’ என இந்திய அணி கொத்திக் கொதறிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி