அதிவேக தருணத்தின் அழகு!





காட்சியின் தன்மையே புகைப்படத்தின் மேன்மையைத் தீர்மானிக்கும். தொழில்நுட்பங்கள் அதன் புறத்தன்மையை அழகூட்ட மட்டுமே பயன்படுகிறது...’’ என்கிறார் மெர்வின் ஆண்டோ.

நாகர்கோவிலைச் சேர்ந்த மெர்வின், ‘ஃபென்டாஸ்டிக் போட்டோகிராபி’யில் புகழ்பெற்றவர். அதிவேக மற்றும் மிக மெதுவான காட்சிப்பதிவுகளால் நிகழ்வின் உள்ளமைவைப் பொய்க்கச் செய்து, வடிவத்தை வேறுவிதமாக வியாபித்துக் காட்டி விழிகளை வியப்பின் எல்லைக்குக் கொண்டு செல்வதே ஃபென்டாஸ்டிக் போட்டோகிராபி.

தெறித்துப் பரவும் நீரின் மையப்புள்ளியான ஒரு துளியையும், கோடு கோடாக சிதறிப் பறக்கிற நெருப்பையும் மெர்வினின் கேமரா ஓவியமாகக் காட்சிப்படுத்துகிறது. உலக அளவில் வெகு
சிலரே சாதிக்கிற அதி நுணுக்கமான இந்தத் துறையில் தீவிரமாக செயல்படுகிற மெர்வின், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படித்தவர். நாகர்கோவில் பேருந்து நிலையத்தை ஒட்டி ஒரு புகைப்பட நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

‘‘காட்சியைப் பார்க்கும் விதம்தான் நல்ல புகைப்படத்தை உருவாக்கும். காட்சி ஒன்றுதான். ஆனால் கண்கள் எல்லோருக்கும் வேறு வேறாகவே இருக்கிறது. ஒரு புகைப்படக் கலைஞன் தன் கண்களால் மட்டுமின்றி பிறர் கண்களாலும் காட்சியைப் பார்த்துப் பழக வேண்டும்.
ஃபென்டாஸ்டிக் போட்டோகிராபிக்கு நேரத்தை சரியாக கையாளத் தெரிய வேண்டும். ஒரு நல்ல புகைப்படத்தை எடுக்க நல்ல கேமரா அவசியமில்லை. அந்தப் புகைப்படத்தின் தருணங்களே அதற்கு உயிரளிக்கும். ஒரு காட்சி நகரும் வேகத்தில், நொடிக்கும் கீழான நேரத்தைப் பதிவு செய்தால் மட்டுமே உன்னதமான அனுபவத்தைத் தர முடியும். காற்றின் வேகத்துக்கு கேமரா இயங்க வேண்டும். பழகப் பழகவே இது சாத்தியமாகும். கற்பனைத்திறனும், ஒருங்கிணைந்து செயல்படுகிற ஆர்வமும் இருந்தால் இது சாத்தியம்.



சிறு வயதில் எங்கள் வீட்டில் இருந்த 120 பாக்ஸ் கேமராவை அப்பாவுக்குத் தெரியாமல் தூக்கிக்கொண்டு மிகப்பெரும் கனவோடு அலைந்திருக்கிறேன். எந்தத் தொழில்நுட்பமும் தெரியாது. லென்ஸ் வழியாக என் கண்கள் பார்க்கும் அனைத்தும் எனக்கு சிறந்த புகைப்படங்களாகவே பட்டன. என்னைப் பெரிய படிப்பாளியாக்கிப் பார்க்க ஆசைப்பட்ட அப்பா, என் கவனத்தை போட்டோகிராபி ஈர்த்துவிடும் என்று அஞ்சினார். அவர் நினைத்தது போலத்தான் நடந்தது.

பாலிடெக்னிக் படிப்பு முடிந்ததும் என் உறவினர் நடத்திய கலர் லேப்பில் வேலைக்குச் சேர்ந்து விட்டேன். என் முடிவை அப்பா சகித்துக்கொண்டார். கலர் லேப்பில் தொழில்நுட்பம் பழகியதோடு, புதுப்புது கேமராக்களைக் கையாளவும் பயிற்சி பெற்றேன். போட்டோகிராபியை ஒரு தொழிலாகப் பார்க்கும் மனநிலையே எனக்கு நெடுங்காலம் வரவில்லை.

பொழுது போக்காகக் கருதியே செயல்பட்டேன்.
புகைப்படத்துறையில் உலகளாவிய முன்னேற்றங்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் உண்டு. நிறைய வாசிப்பேன். இன்டர்நெட்டில் தேடுவேன். புதிது புதிதாக நிறைய முயற்சி செய்வேன். லோ ஷட்டர் ஸ்பீடில் நுட்பமான ஆக்ஷன் ஷாட்டுகளைப் பதிவுசெய்து பார்ப்பேன். நான் எடுத்த புகைப்படங்களைப் பார்த்தவர்கள், நான் ‘ஃபென்டாஸ்டிக் போட்டோகிராபி’யின் அருகில் நிற்பதாகச் சொன்னார்கள். அதன்பிறகே அதைத் தேடித்தேடி கற்றேன்.

புகைப்படத்துறையில் சத்தமில்லாமல் தமிழகம் பெரும் சாதனைகளை செய்திருக்கிறது. உலகப் புகழ்பெற்ற பல கலைஞர்கள் இங்கே சிறிய ஸ்டுடியோவை வைத்துக்கொண்டு வாழ்கிறார்கள். உலகளாவிய கலை அமர்வுகளில் கௌரவமான இடத்தில் தமிழர்கள் இடம் பெறுகிறார்கள். நிறைய இளைஞர்கள் புகைப்படத்துறை நோக்கி வருகிறார்கள். அது இன்னும் நம்பிக்கை அளிக்கிறது. இணையம் மூலம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறேன்.

இன்றைய தொழில்நுட்பப் புரட்சியில் புகைப்படம் சாதாரணமாகி விட்டது. இல்லாத ஒன்றையும் உருவாக்கி உலவவிடும் அளவுக்கு அறிவியல் மயமாகி விட்டது. சிரிக்காத மனிதனை சாப்ட்வேர் சிரிக்க வைத்துவிடுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தைத் தாண்டி ஒரு புகைப்படக்கலைஞன் என்ன சாதிக்கிறான் என்பதே அவனது அடையாளம்.

முதலில் காட்சிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். எல்லாவற்றிலும் ஒரு புகைப்படத்துக்குரிய காட்சிகள் இருக்கின்றன. இமை அசைவதில் தொடங்கி, ஒரு பூ மலர்வது வரை எல்லாமும் காட்சிகள்தான். அந்தக் காட்சிகளை தகுந்த நேரத்தில், தகுந்த கோணத்தில், தகுந்த மனநிலையில் காட்சிப்படுத்த வேண்டும்’’ என்கிற மெர்வின், ஒரு நாளின் 18 மணி நேரங்கள் கேமராவோடு சுற்றித் திரிகிறார். அணில், முயல், நாய் எனப் பல்வேறு தலைப்புகளில் தனித்தனி காட்சித் தொகுப்புகளையும் உருவாக்கி வருகிறார்.
- வெ.நீலகண்டன்