லிஃப்ட்





பைபாஸில் பறந்து கொண்டிருந்தான் ஆனந்த். ஒரு நடுத்தர வயதுக்காரர் கை நீட்டி லிஃப்ட் கேட்க, ஏற்றிக்கொண்டான்.
கொஞ்ச தூரம்தான் போயிருப்பார்கள். சாலையின் ஓரமாக ஒரு வாலிபன் பைக்குடன் சாய்ந்த நிலையில் விழுந்து கிடந்தான். வேகமாக வந்தவன் சாலையில் இருந்த பள்ளத்தில் எதிர்பாராமல் பைக் இறங்கியதில் விழுந்திருக்கக்கூடும். அவன் கைகளை ஊன்றி எழ முயற்சிப்பதும் புரிந்தது.

யாருமே நிற்காமல் சென்றுகொண்டிருந்தனர். ஆனந்தும் அவ்விதமே கடக்க, பின் சீட்டில் இருந்தவர் சத்தமாகச் சொன்னார். ‘‘தம்பி, கொஞ்சம் நிறுத்துங்க. பாவம் அந்தப் பையன்... ஏதாவது ஹெல்ப் பண்ணணும்!’’ என்றார்.
‘‘இல்லீங்க... பெரிய அடி ஒண்ணும் இல்ல. சமாளிச்சுப்பான். நாம போலாம்!’’
ஆனாலும் அவர் விடவில்லை.

‘‘ப்ளீஸ் தம்பி... உங்களுக்கு வேலையிருந்தா என்னை இறக்கி விட்டுருங்க. எனக்கு மனசு ஒரு மாதிரியா இருக்கு!’’
சட்டென்று பிரேக் போட்டு அவரை இறக்கிவிட்டான் ஆனந்த்.
‘‘என்னங்க, ரொம்ப நல்லவர்னு நெனப்பா? இல்ல, அந்தாளு உங்களுக்குத் தெரிஞ்சவரா?’’ - கேட்டான்.
‘‘தெரிஞ்சவர்தான் தம்பி...’’
‘‘அப்படியா... எப்படி?’’
‘‘உங்களுக்கு முன்னாடி அந்தத் தம்பிகிட்டயும் லிஃப்ட் கேட்டேன். ஏதோ அவசரம் போல... நிக்காம போய்ட்டாரு. அதனால கண்டுக்காம போறோமோன்னு மனசு உறுத்துது தம்பி!’’
அவர் முன் ஆனந்த் கூனிக் குறுகிப் போனான்!