வாங்களேன் ஒரு வாழ்க்கையை ஜெயிக்க வைக்கும் வாக்கிங்





சென்னை திருவான்மியூர்... அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்றின் முதல் தளம். விசாலமாக இருக்கிறது அந்த அறை. அறைக்குள் நுழையும் ஒரு பெண்மணி, ஒரு கட்டைப் பைக்குள் காலி பீர் பாட்டில்களைப் போட்டு சுத்தியலால் உடைக்கிறார். சில்லு சில்லாக அது நொறுங்கும் சத்தம் அறையெங்கும் எதிரொலிக்கிறது. பை நிறைய கண்ணாடிச் சில்லுகள் குவிந்ததும், வெள்ளை விரிப்பொன்றில் அவற்றை பரப்பி வைக்கிறார் பெண்மணி. படு ஷார்ப்பாக மல்லாந்து கிடக்கும் அந்தச் சில்லுகளைப் பார்க்கும்போதே வலிக்கிறது நமக்கு. அதை உற்சாகமாகப் பார்த்தபடி நிற்கிறார்கள் 20 டூ 60 வயதுகளில் இருக்கும் பெண்கள். ‘‘இது மேல யாரு முதல்ல நடக்கப் போறீங்க?’’ என்று ஒரு குரல் கேட்க, ‘நான்.. நீ...’ என்று போட்டி போட்டு முன்வருகிறார்கள் பெண்கள்.

‘‘பார்க்க பயமா இருக்கலாம். பைத்தியக்காரத்தனமா கூட தெரியலாம். ஆனா இது ஒரு பயிற்சி. பெண்களுக்கு முக்கியமா தரப்படுற மனப்பயிற்சி’’ என்று புதிர் அவிழ்க்கிறார் ஹஃபீஸ் கான். இளைஞர்களுக்கான மனப்பயிற்சிகளை வழங்கும் ‘இ-சோன் இண்டியா’ என்ற அமைப்பின் தலைவர் இவர்.
‘‘வாழ்க்கையில பலரும் தோற்றுப் போகக் காரணம். சவால்களைப் பார்த்து பயப்படுறதுதான். எதையும் முயற்சி பண்ணிப் பார்க்காமலேயே ‘இதெல்லாம் நம்மால முடியுமா’ன்னு ஒரு நெகட்டிவ் எண்ணம் மனசை ப்ளாக் பண்ணிடுது. ‘எதுவா இருந்தாலும் ஒரு கை பார்ப்போம். எல்லாம் ஒரு அனுபவம்தானே’ன்னு ஒரு எண்ணத்தை இந்தப் பயிற்சி தருது’’ என்கிறார் அவர்.



‘‘அதுக்காக...’’ என்று நாம் பதற்றப்படும்போதே, கண்ணாடிச் சில்லுகள் மேல் நடப்பதற்கு உற்சாகமாக வந்து நிற்கிறார் வைஷ்ணவி என்ற இளம்பெண்.
அந்தக் கண்ணாடி விரிப்பின் முன்னால் வந்து நின்றவர், சுற்றியிருக்கும் பெண்களைப் பார்த்து, ‘‘கிட்டக்கிட்ட கால் வச்சு நடக்குறது ஈசியா? தூரத்துல ஸ்டெப் வச்சு நடக்குறது ஈசியா?’’ என்கிறார்.
‘‘லாங் வாக் காலில் அதிக பிரஷரைக் கொடுக்கும். ஷார்ட் வாக்தான் சிறந்தது’’ என்று கூட்டம் அறிவியல் அட்வைஸ் தருகிறது.
‘‘ஓகே’’ என்றபடி, சில்லுகளில் முதல் அடியை எடுத்து வைக்கிறார் வைஷ்ணவி.



நான்கடி நீளமுள்ள அந்தச் சில்லுகளைக் கடக்க அவர் பத்து தடவையாவது அடியெடுத்து வைக்க வேண்டும். எங்கிருந்தாவது ஒரு தமிழ் சினிமா ஹீரோ ஓடி வந்து, ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ என்று அந்தப் பாதங்களைத் தாங்கிக்கொள்ள மாட்டாரா என அற்பமாக யோசிக்கிறது நம் மனம். ஆனால், எந்தச் சலனமும் இன்றி மென் புன்னகை மாறாமல் அந்த நான்கடியை நளினமாகக் கடந்து வருகிறார் வைஷ்ணவி. பாதங்களில் ஒரு துளி ரத்தக் காயமும் இல்லை.
‘‘இது சயின்ஸுங்க. ரோட்டுல சிங்கிள் பாட்டில் துண்டுல நீங்க கால் வச்சுட்டா சதை பெயர்ந்து வந்திடும். இப்படி பாட்டில் துண்டுகளை ஒண்ணா குவிச்சா, அதுல ஆபத்தில்ல. குவியல்ல உள்ள பாட்டில் துண்டுகளுக்கு கால்களை துளைக்கிற அளவுக்கு சப்போர்ட் கிடைக்காது. நம்ம எடை தாங்காம அது இன்னும் உள்ளே புதையுமே தவிர, தோலைக் கிழிக்காது. பார்க்க படு ஆபத்தா தெரியும் இந்த கிளாஸ் வாக், எல்லாருமே செய்யக் கூடியதுதான். எந்தப் பயிற்சியும் தேவையில்லை’’ என்று அவர் சொல்ல, அடுக்கடுக்காக எல்லா பெண்களுமே ஏதோ கேட் வாக் போல அந்தக் கண்ணாடி விரிப்பில் ஒரு வலம் வருகிறார்கள்.

சில பெண்கள் நடைக்கு நடுவே ஒற்றைக் காலில் நின்றும் வில்லாக வளைந்தும் ஜிம்னாஸ்டிக் வேலையெல்லாம் கூடக் காட்டுகிறார்கள். அங்கிருந்த பெண்களில் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த கிளாஸ் வாக் முதல்முறையாம். ஒருவரைப் பார்த்து மற்றவருக்கு தைரியம் வர, ஒரு கட்டத்தில் எல்லோருமே ‘பூ மிதித்து’விட்டார்கள். அறுபது வயதை நெருங்கிவிட்ட மீனாட்சி பாட்டி கூட கணவர் கைப் பிடித்து நடந்து வந்தது, அதில் நின்றபடி ஒற்றைக் காலில் சூரிய நமஸ்காரம் செய்தது கண்கொள்ளாக் காட்சி.



‘‘இதுதான் எங்க சக்ஸஸ். பயத்தை ஜெயிக்கிற சக்தி இதுல இவங்களுக்குக் கிடைக்குது. கராத்தே கத்துக்கறவங்க எதுக்காக செங்கல்லை உடைக்கிறாங்க? அது ஒரு தன்னம்பிக்கையைக் கொடுக்கிறதாலதானே. அதே மாதிரி டிரீட்மென்ட்தான் இதுவும். இது மாதிரியான பல பயிற்சிகளை எங்க அமைப்பு மூலமா நாங்க பல கார்ப்பரேட் கம்பெனிகள்ல கொடுக்கறோம். அவங்க பிரச்னைகள் என்ன? மனச்சோர்வுக்கும் அழுத்தத்துக்கும் என்ன காரணம்னு தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கு ஏத்த மாதிரி மனசை ஒருமுகப்படுத்துற பயிற்சிகளைக் கொடுப்போம். இதே மாதிரி நெருப்புல நடக்குறது, தேளை கடிக்க விடுறது, ரெண்டாவது மாடியில இருந்து குதிக்க வைக்கிறதுன்னு நிறைய சாகசங்களைச் செய்ய வைப்போம். வாழ்க்கையில எந்தப் பிரச்னை வந்தாலும் சந்திச்சுப் பார்ப்போம்னு ஒரு உத்வேகத்தை இது அவங்களுக்குக் கொடுக்கும். அவங்கவங்க வாழ்க்கைப் பிரச்னைகளை தைரியமா எதிர்கொள்ளத் தெரிஞ்சாலே போதுங்க... வெற்றி தன்னால தேடி வரும்’’ என்கிறார் ஹஃபீஸ்.
ஆக, வாழ்க்கையே கத்தி மேல நடக்குற மாதிரிங்கறீங்க!
- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்