மறுபக்கம்





‘‘நம்மை விட வசதி குறைஞ்சவங்களா இருந்தா கூட, பக்கத்து ஃப்ளாட்காரங்களுக்கு வீம்பு ஜாஸ்திங்க. மூணு பெட்ரூமோட விசாலமா ஃப்ளாட் வச்சுருக்கிற நாமளே பழைய நியூஸ் பேப்பரை உடனுக்குடன் பேரம் பேசி எடைக்குப் போட்டுடறோம். ஆனா அவங்க சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட்ல பழைய பேப்பர்களையும், வேண்டாத சின்னச்சின்ன சாமான் களையும் சேர்த்து வச்சு, ஆறு மாசத்துக்கு ஒருமுறை பேப்பர்காரன்கிட்ட போடறாங்க. அதுலயும் பேரமே பேசுறதில்ல. கொடுக்கறதை வாங்கிக்கறாங்க. இப்படி இருந்தா எப்படி முன்னேற முடியும்?’’ என கணவனிடம் புலம்பினாள் செல்வி.


பழைய பேப்பர் வாங்குபவர், அந்த வீட்டில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு இங்கு வந்தார். இந்தமுறை தன் ஆறு வயது மகளுடன் வந்திருந்தார்.
‘‘என்னப்பா... பெண்ணையும் இந்த வியாபாரத்துக்கு பழக்கறியா..?’’ - கிண்டலாகக் கேட்டாள் செல்வி.
‘‘சேச்சே... அவளுக்கு படிப்பில் ரொம்ப ஆர்வம்மா. பழைய பேப்பர்ல கூட அவளுக்கேத்த புத்தகங்கள் ஏதாச்சும் கிடைக்குதான்னு பார்த்து, பொறுக்கி எடுத்துடுவா. பக்கத்து ஃபிளாட்காரங்க இவளுக்காகவே குழந்தைங்க புத்தகத்தைத் தனியா கொடுப்பாங்க. பேப்பர்ல கூட இவளுக்கு உதவுற விஷயங்களைத் தனியா எடுத்து வச்சு இனாமா கொடுக்கறாங்க. விசாலமான மனசு படைச்சவங்க. அவங்களைப் பார்க்கத்தான் இன்னிக்கு வந்திருக்கா’’ என்றார் அவர். எதற்கும் மறுபக்கம் உண்டு என்பதை உணர்ந்தாள் செல்வி.