முதலாளி





அந்த டீக்கடையில் டீ போடுவது, மேஜையைத் துடைப்பது, கிளாஸ் கழுவுவது, பரோட்டா போடுவது என்று எல்லா வேலைகளையும் செய்யும் அந்தப் பெரியவர் மீது வினோத்துக்கு ஒருவித மரியாதை ப்ளஸ் பரிதாபம்!
‘‘பெரியவரே... டீக்கடையில நாள் பூராவும் இருக்கறீங்க. வீட்டுக்குப் போக மாட்டீங்களா? முதலாளி எவ்வளவு சம்பளம் தர்றார்?’’ - ஒரு நாள் கேட்டான்.

‘‘சம்பளம் கிடையாது தம்பி. மூணு வேளை சாப்பாடு... அப்புறம் துணி வாங்கித் தருவார்.’’
‘‘என்னங்க அநியாயமா இருக்கு? இந்தக் காலத்துல கூலி வேலை செஞ்சா கூட தினமும் 200 ரூபா கிடைக்குமே. அப்ப உங்க குடும்ப செலவுக்கு என்ன செய்யறீங்க?’’
‘‘குடும்பம் என்ன குடும்பம்? என் சம்சாரம் கூட இங்க வேலை செய்யுது. அதோ பாருங்க வடை, போண்டா சுடுது.’’
‘‘அடப்பாவமே... ரெண்டு பேரும் உங்க வயித்தைக் கழுவத்தானா இப்படி நாள் பூரா அடிமைகளாக உழைக்கிறீங்க? உங்க முதலாளி மட்டும் மடிப்பு கலையாத சட்டை போட்டு கல்லாவுல ஜாலியா உக்கார்ந்திருக்கான்... இப்படி உங்களைக் கஷ்டப்படுத்துறவன் உருப்படுவானா?’’
‘‘முதலாளியைத் திட்டாதீங்க. அவனுக்காகக் கஷ்டப்பட்டு உழைக்கிறோம். அவன் நல்லா இருக்கணும்.’’
‘‘என்ன பெரியவரே சொல்றீங்க?’’
‘‘கல்லாவில் உட்கார்ந்திருக்கறது என் மகன்தான்!’’