கர்ணனின் கவசம்





“என்னது... சூரியனுக்குள்ள ஊடுருவற கனிமம் இருக்கா?’’ - நம்ப முடியாத மகிழ்ச்சியுடன் கேட்டார் அடார்னோ.
‘‘யெஸ் சார்...’’ - பதிலளித்த ஃபாஸ்டின் குரலில் உறுதியும், உற்சாகமும் கொப்பளித்தது. 

‘‘குட்... குட்...’’ என்றபடி அவன் தோளில் தட்டினார் அடார்னோ. இருவரும் ஜெர்மனியின் மியூனிச் நகரிலுள்ள இங்கிலீஷ் கார்டனில் நடந்து கொண்டிருந்தார்கள். சுற்றுலாத் தலம். பயணிகளின் நடமாட்டம் எப்போதும் இருக்கும். அன்றும் இருந்தது. ஆனால், பூங்காவின் ஒரு பகுதியில் இருந்த ஜப்பானிய டீ ஹவுஸை அவர்கள் கடந்தபோது கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை யாரும் தென்படவில்லை. ஜெர்மன் உளவு நிறுவனமான ‘பிஎன்டி’யில் பணிபுரியும் அவர்களுக்கு அந்தத் தனிமை தேவைப்பட்டது.  
‘‘இந்த ஒரு பதிலுக்காகத்தான் பல வருஷங்களா காத்திருக்கேன்...’’ - கண்களில் துளிர்த்த எதிர்பார்ப்புடன் புல்தரையில் அமர்ந்த அடார்னோ, தன்னருகில் அமரும்படி அவனுக்கு செய்கை செய்தார். ஆறடி உயர உருவத்தை குறுக்கியபடி சற்று இடைவெளிவிட்டு ஃபாஸ்ட் அமர்ந்தான்.

‘‘பெரிய பாரமே இறங்கினா மாதிரி இருக்கு ஃபாஸ்ட். இனி கவலையில்லை. ஜெர்மன் தலை நிமிர்ந்துடும். இந்த ஒண்ணை வச்சே சீனாவோட கண்ணை நோண்டிடலாம். அடிமை நாய்ங்க. கனிம வளங்கள் இருக்குங்கிற திமிருல பழசை மறந்துட்டு என்ன ஆட்டம் போடறாங்க..?’’ - அடார்னோவின் கண்களில் பூக்க ஆரம்பித்த கோபத்தை அப்படியே நுகர்ந்தான் ஃபாஸ்ட்.
‘‘ஃப்ளோரசன்ட் பல்ப், ஐபாட் ஹெட் ஃபோன்ஸ், ஹைபிரிட் வண்டிகள் மாதிரியான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்ய அபூர்வமான கனிமங்கள் தேவை. இதெல்லாம் சீனாவுலதான் கிடைக்குது. ஸோ வாட்? இதனாலயே அவனை வல்லரசு நாடா ஏத்துக்கணுமா..?’’ - பற்களைக் கடித்தபடி சொற்களை உச்சரித்த அடார்னோ, தன் பார்வையை அழுத்தமாக ஃபாஸ்டின் முகத்தில் பதித்தார்.
‘‘என்ன... ‘அந்தக் கனிமங்களை இனி ஏற்றுமதி பண்ண மாட்டேன். எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை நானே தயாரிச்சு தர்றேன். நான் சொல்ற ரேட்டுல வாங்கிக்க...’ன்னு அறிக்கை விட்டிருக்கான். அவ்வளவுதான? சொல்லிட்டு போகட்டும். மழைல முளைச்ச காளான்கள் இப்படித்தான் துள்ளிக் குதிக்கும்...’’ என்ற அடார்னோ, சட்டென்று சிரித்தார்.
‘‘ஒரு காமெடி தெரியுமா? திபெத்துல நூறு பில்லியன் டாலர் மதிப்பிலான இயற்கை வளங்கள் இருக்காம். அங்க இருக்கிற மூவாயிரம் கனிமப் படுகைகள்ல 102 வகை தாதுக்கள் கொட்டிக் கிடக்காம். இது எல்லாம் அவனுக்குத்தான் சொந்தமாம். சப்பை மூக்கை தடவிக்கிட்டே சீனாக்காரன் சொல்றான். அதைக் கேட்டு தலையாட்ட நாம என்ன ஜோக்கரா? திபெத்திய மக்களுக்கு ஆயுதங்களை சப்ளை பண்ணி கொரில்லா யுத்தத்தை ஆரம்பிச்சு எந்த கனிமத்தையும் அவன் எடுக்காதபடி பண்ண நமக்கு எத்தனை நேரம் ஆகும்?
சர்வதேச கடல் படுகை ஆணையத்துகிட்ட அனுமதி வாங்கிட்டா போதுமா? இந்தியப் பெருங்கடல்ல 10 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவுல பாலிமெடாலிக் சல்பைட்டை அடுத்த 15 ஆண்டுகளுக்குள்ள அவனால தோண்டி எடுத்துட முடியுமா? நேச நாடுகள் காதை குடைஞ்சுகிட்டே இதை வேடிக்கை பார்க்கும்னு நினைச்சானா? இடியட்...’’ - அளவுக்கு மீறி வார்த்தைகளில் உணர்ச்சிகள் வெளிப்பட ஆரம்பித்ததாலோ என்னவோ, சட்டென்று அமைதியாகி ஆழ்ந்து சுவாசிக்க ஆரம்பித்தார், அடார்னோ.



குறுக்கீடு செய்யாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான் ஃபாஸ்ட். அவர் பேசியதில் எதுவும் மிகையில்லை. துளியும் பொய்யில்லை. அதே வெறி. ஒவ்வொரு ஜெர்மானியனுக்குள்ளும் இருக்கும் அதே கனல். வெந்து தணியும் ஜெர்மனியில் குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லை.
‘‘சீனாவை மடக்க கிடைச்ச இந்த சந்தர்ப்பத்தை விடக் கூடாது ஃபாஸ்ட்...’’ - வானத்தைப் பார்த்தபடி அடார்னோ தொடர்ந்தார். ‘‘எப்படியாவது சூரியனுக்குள்ள ஊடுருவற அந்தக் கனிமத்தை நாம கைப்பற்றிடணும். அப்பதான் உலக நாடுகளை மிரட்ட முடியும். சூரிய வெப்பத்தையே தாங்கற சக்தி அந்த கனிமத்துக்கு இருக்குன்னா, நிச்சயம் எப்படிப்பட்ட அணு ஆயுதத்தையும் அது எதிர்த்து நிற்கும். இதுதான் நமக்கு கிடைச்சிருக்கிற துருப்புச் சீட்டு. ஹிட்லர் காலத்துல எப்படி எல்லா நாடுகளும் நம்மை பார்த்து பயந்ததோ, அதைவிட பலமடங்கு இப்ப அச்சுறுத்தணும். நம்ம இனம் எப்படிப்பட்டதுன்னு உலகுக்குக் காட்டணும்...’’ - தோட்டாக்களாக சீறும் வார்த்தைகளுடன் அவனை நோக்கித் திரும்பினார் அடார்னோ.
‘‘அந்தக் கனிமத்தோட பேர் என்ன?’’
‘‘தெரியலை சார்...’’ என்றான் ஃபாஸ்ட்.
‘‘நோ ப்ராப்ளம். உன் பேரையே வைச்சிடலாம். அது எங்க இருக்கு?’’ எழுந்தபடியே கேட்டார் அடார்னோ.
‘‘நோ ஐடியா. ஆனா, ஒரு க்ளூ கிடைச்சிருக்கு. அதை வச்சு ட்ரேஸ் அவுட் பண்ணிட முடியும்னு நம்பிக்கை இருக்கு சார்...’’ - தன் பின்புறத்தைத் தட்டியபடி எழுந்து நின்றான் ஃபாஸ்ட்.
‘‘ஏழு வருஷங்களா நாம ஒண்ணா வேலை பார்த்துட்டு இருக்கோம். பலமுறை உன்னை நீ நிரூபிச்சிருக்க. அந்த நம்பிக்கைல இந்த ப்ராஜெக்ட்டை உன்கிட்ட ஒப்படைக்கிறேன். முழுமையா கண்டுபிடிக்கிற வரைக்கும் இந்த அசைன்மென்ட் ரகசியமா இருக்கட்டும்...’’
‘‘யெஸ் சார்...’’
‘‘எப்ப புறப்படற?’’ - புருவத்தை உயர்த்தினார் அடார்னோ.

‘‘இப்பவே...’’ தாமதமின்றி பதிலளித்தான் ஃபாஸ்ட்.
‘‘எங்க?’’
‘‘இந்தியா...’’
‘‘இந்தியா? இன்ட்ரஸ்டிங். அங்க எந்த இடம்?’’
‘‘தமிழ்நாடு. மதுரை மீனாட்சியம்மன் கோயில்!’’

சரியாக காதலர் தினம் முடிந்த 26வது நாள், ரோஜாக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் டாக்டர் ஜோன்ஸ்.
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அந்தப் பிரிவுக்கு ‘ரோஸஸ்’ என்று பெயர் வைத்தவனின் வாயில் சர்க்கரை போட வேண்டும். ‘ரிசர்ச் ஆப்பர்ச்சூனிட்டிஸ் இன் ஸ்பேஸ் அண்ட் எர்த் சயின்ஸ்’ என்பதை என்ன அழகாக ‘ரோஸஸ்’ என்று சுருக்கியிருக்கிறார்கள்?
2013ம் ஆண்டுக்கான நாசாவின் ஆய்வு அறிவிப்பு கடந்த மாதம் 14ம் தேதியன்றுதான் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. உண்மையில் இது அடுத்தகட்ட பாய்ச்சல். மாபெரும் நெருப்புக் கோளத்துக்கு ரோஜாப் பூவைக் கொடுத்து வசப்படுத்துவதற்கான தருணம்.
இதுவரை எத்தனையோ செயற்கைக்கோள்களை தயாரித்து பாய்ச்சியாயிற்று. எந்த வாகனத்தாலும் சூரியனை நெருங்க முடியவில்லை. அதற்காக மனதிலேயே ஆசையைப் பூட்டி வைக்க முடியுமா? முடியாது. ஆணழகனாக காட்சி தரும் சூரியனை நம் பிடிக்குள் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் அமெரிக்காவின் கனவு நினைவாகும்.
இதற்கு தேவை ஒரு கனிமம். அதுவும் அபூர்வமான, அமெரிக்காவுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கக் கூடிய ஒரு கனிமம். அதை குளிர்சாதனப் பெட்டியைப் போல் பயன்படுத்த வேண்டும். யெஸ், கோடைகாலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் வெப்பத்தையும் எப்படி மாறி மாறி ஏர்கண்டிஷன் சிந்துகிறதோ, அப்படி இந்தக் கனிமமும் வேலை செய்ய வேண்டும்.
சூரியனுக்கு அருகிலுள்ள கிரகங்கள் வெப்பமாக இருக்கின்றன. அங்கு இந்தக் கனிமத்தை ஷீல்டாக்கி பொருத்திவிட்டால், சூரியக் கதிர்களை அது ஃபில்டர் செய்யும். குளிர்ச்சியையும், ஆக்சிஜனையும் தனக்குக் கீழே பரவவிடும். அதுபோலவே சூரியனுக்கு தொலைவில் உள்ள கோள்கள் குளிர்ச்சியாக இருக்கின்றன. அங்கு இந்தக் கனிமத்தை, வெப்பத்தையும் பிராண வாயுவையும் கொடுக்கும் ஊடகமாகப் பயன்படுத்தலாம்.

இப்படிச் செய்வதன் வழியாக பிரபஞ்சத்திலுள்ள அனைத்து கிரகங்களின் தன்மைகளையும் ஆராயலாம். உயிரினங்கள் வாழ முடியும் எனில், அங்கு குடியேற்றத்தை ஏற்படுத்தி பால் வீதியையே அமெரிக்காவின் காலனியாக மாற்றி விடலாம்.
ஒரு முடிவுடன் டாக்டர் ஜோன்ஸ், ஹீலியோ பிசிக்ஸ் ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தார்.

எதிர்பார்த்தது போலவே சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஸ்கூல் தெருவுக்குள் தன் ஸ்கூட்டியை தாரா திருப்பியபோது வெண்ணிற தாடியுடன் விமலானந்தா எதிர்ப்பட்டார். வழக்கம் போலவே, ‘‘அம்மா தாராதேவி...’’ என தன் இரு கரங்களையும் உயர்த்திக் கும்பிட்டார். அவளது வண்டியின் டயர் தடத்தை தொட்டு வணங்கினார்.
தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது. பெயரைத் தவிர விமலானந்தா யாரென்றே தாராவுக்குத் தெரியாது. ஆனாலும் எப்படித்தான் மூக்கில் வியர்க்கிறதோ? ஆனந்தி மாமியைச் சந்திக்க எப்போது வந்தாலும், எதிர்ப்படுகிறார். இதே வாக்கியத்தை சொல்லி வணங்கிவிட்டு நகர்கிறார். இத்தனைக்கும் அவருக்கு வயது குறைந்தது எழுபதாவது இருக்கும். 23 வயதுப்பெண் அவரது பேத்திக்கு சமானம். ஆசீர்வதிக்கலாம். வணங்கலாமா?
ஒருமுறை பின்தொடர்ந்து சென்று, ‘‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்’’ என்று கேட்டிருக்கிறாள். நேரடியாக எதுவும் பதில் சொல்லாமல், ‘‘எனது பாக்கியம்...’’ என கண்கலங்கியபடி அந்த இடத்திலேயே அவள் காலில் விழுந்துவிட்டார். தாரா நகரும் வரை அவர் எழுந்திருக்கவேயில்லை. ‘மென்டலி டிஸ்டர்ப்ட் பெர்சன் போல’ என விட்டுவிட்டாள். அதன் பிறகு விமலானந்தாவை அவள் பொருட்படுத்துவதில்லை.
தலையைச் சிலுப்பியபடி அந்த வீட்டின் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு கேட்டை திறந்தாள்.
எட்டிப் பார்த்த மகேஷ், ‘‘வாங்கக்கா...’’ என வரவேற்றான்.
‘‘அம்மம்மா... தாராக்கா வந்திருக்காங்க...’’ என அவளது தலையை பார்த்ததும் உள்நோக்கி குரல் கொடுத்தாள் நிரஞ்சனா.
‘‘என்ன, தாத்தா கூட சேர்ந்து ‘ப்ளூ ரே’ல படம் பார்க்கறீங்களா... என்ன படம்?’’ - கேட்டபடியே செருப்பைக் கழற்றிவிட்டு நுழைந்தாள் தாரா.
சோபாவில் அமர்ந்திருந்த நாகராஜன் அவளைப் பார்த்து புன்னகைத்தபடியே, ‘‘வாம்மா...’’ என்றார்.
‘‘நல்லா இருக்கீங்களா மாமா..?’’ என்று அவள் கேட்டு முடிப்பதற்குள், ‘‘ப்ளூ ரே இல்ல. டிவிடி. ‘கர்ணன்’ படத்தை மூணாவது முறையா பாக்கறோம். ரொம்ப நல்லா இருக்குக்கா...’’ என சோபாவில் குதித்தான் மகேஷ்.

‘‘ஆமாம்க்கா. அதுவும் தன் கவசகுண்டலத்தை அறுத்து இந்திரன்கிட்ட கர்ணன் தரும்போதெல்லாம் அழுகையா வருது...’’ என்றாள் நிரஞ்சனா.
‘‘ஏன்க்கா, அந்த கவச குண்டலம் இப்ப எங்க இருக்கு? இந்திரன் அதை எங்க மறைச்சு வச்சிருக்கான்?’’ - கேள்வி கேட்ட மகேஷைப் பார்க்க சிரிப்பு வந்தது.
‘‘நிச்சயம் பூமிலதான்டா இருக்கும். சாமி கோயில்ல இருக்காரு. கோயில் பூமில இருக்கு. அப்ப இந்திரன் வாங்கினதும் இங்கதான இருக்கணும்?’’ என்ற நிரஞ்சனா, ‘‘ஆனாலும் ஒரு விஷயம் மட்டும் புரியலைடா. சூரியனுக்கு நிறைய பசங்க இருக்காங்க. ஏன்... ஆஞ்சநேயர் கூட சூரியனோட மகன்தான். அப்படி இருக்கிறப்ப மத்த பசங்களுக்கு கவச குண்டலத்தைக் கொடுக்காம ஏன் கர்ணனுக்கு மட்டும் சூரியன் கொடுத்தாரு?’’ என்று கேட்டாள் நிரஞ்சனா.
‘‘அட, ஆமாம்ல...’’ என ஆச்சர்யப்பட்டான் மகேஷ்.
‘‘வீட்டுக்கு வந்த அக்காவையும் தொந்தரவு பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா...’’ என்றபடி வந்தாள் ஆனந்தி மாமி.
‘‘பரவால்ல மாமி. குழந்தைங்கதான? என்ன... இவங்க கேட்கற கேள்விக்கு பதில் சொல்ல எனக்குத்தான் தெரியலை...’’ என்று சிரித்த தாரா, ‘‘உங்ககிட்டயும் மாமாகிட்டயும் சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன். ஊர் பேர் தெரியாத என்னை, உங்க பொண்ணு மாதிரி பார்த்துக்கிட்டீங்க. இதை சாகற வரைக்கும் மறக்க மாட்டேன். உங்க ஆசீர்வாதம் எனக்கு வேணும்...’’ என்று தழுதழுத்தாள்.
‘‘அது எப்பவும் உண்டுமா. சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்லையேன்னு வருத்தப்படாத. நாங்க இருக்கோம். ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல ஆர்க்கிடெக்சர் முடிச்சிருக்க. இப்ப வேலை கிடைச்சு மும்பைக்கு போற. சந்தோஷமா போயிட்டு வா. உன் மனசு போல எல்லாம் அமையும்...’’ என்றார் நாகராஜன்.
அப்போது தாராவின் செல்போன் ஒலித்தது. எடுத்து பேசியவளின் முகம் மாறியது. ‘‘என்ன தாரா... ஏதாவது பிரச்னையா?’’ - கவலையுடன் கேட்டாள் ஆனந்தி மாமி.
‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமி. கிரெடிட் கார்டு வேணுமான்னு கேட்டாங்க. தட்ஸ் ஆல். சரி மாமி, நான் கிளம்பறேன். பேக்கிங் பண்ண வேண்டியிருக்கு. அங்க போனதும் போன் பண்ணறேன். வரேன் மாமா. மகேஷ், நிரஞ்சனா பை...’’ என்று சொல்லிவிட்டு வாசலுக்கு வந்தாள்.

கைப்பேசியில் வந்த அழைப்பு, அப்போதும் அவள் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. ‘தாரா, உங்கப்பா செத்துட்டாரு. உடனே கிளம்பி வா...’
பிடிக்காத அப்பா. அனைவரிடமிருந்தும் மறைத்த அப்பா. அவரது உடலைப் பார்க்கப் போவதா, வேண்டாமா?
யாரோ அசைவது போல் இருந்தது. நிமிர்ந்தாள். எப்போது அவளைப் பார்த்தாலும் வணங்கும் அதே விமலானந்தா. வலது காலை உயர்த்தி நடராஜர் போல் போஸ் கொடுத்தபடியே, கண்ணீர் வழிய அவளைப் பார்த்து உடைந்த குரலில் கதறினார். ‘‘அம்மா தாராதேவி... மதுரை வெள்ளியம்பலத்துக்கு ஆபத்து வந்துடுச்சும்மா... அதை தடுத்து நிறுத்தி ஈரேழு உலகத்தையும் காப்பாத்தும்மா...’’
(தொடரும்)