விஸ்வரூபம் சினிமா விமர்சனம்





‘அன்பே சிவ’த்தின் இன்னொரு வடிவம்தான் ‘விஸ்வரூபம்’. வாழ்க்கையின் அவதானிப்பில் கலைஞனின் பார்வை விசாலப்படுகிறது; தரிசனம் ஆழப்படுகிறது. அப்படிப்பட்ட கலைஞனான கமல்ஹாசன், இயக்குநர் - நடிகர் என்ற இரட்டை சவாரியில் வெற்றிக் கோட்டைத் தொடுகிறார்.

நியூயார்க் சிட்டி. ‘உன்னைக் காணாத நான் இன்று...’ என அபிநயம் பிடித்து ஆடும் ‘கதக்’ கலைஞர் விஸ்வநாத்தாக அறிமுகமாகிறார் கமல். ஆட்டத்தில், ஓட்டத்தில் பெண்மையைத் ததும்பவிடும் கமலுக்கு வெளி சகவாசம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய தனியார் டிடெக்டிவ் ஏஜென்ட்டை அமர்த்துகிறார் மனைவி பூஜா குமார்.

கமலை பின்தொடரும் ஏஜென்ட், தவறுதலாக தாலிபன்களிடம் சிக்கிக்கொள்கிறார். ‘ஏஜென்ட்டை அனுப்பிய அம்பு எது’ என்று தேடிப் பிடிக்கும் தீவிரவாதிகள், கமலையும் பூஜாவையும் தூக்கிவந்து துன்புறுத்துகின்றனர். அப்போது விஸ்வரூபம் எடுக்கிறார் கமல். வேலைக்கு ஆகாதவர் என்று நினைத்த இவருக்குள் இப்படியொரு வீரமா என பூஜாவுடன் சேர்ந்து பார்வையாளர்களும் மெய்சிலிர்க்க... கமல் யார்? அவரின் உண்மையான முகம் என்ன? என விரியும் கதைதான் படம்.

நடனம், மெல்லிய நகைச்சுவை என மென்மையாகத் தொடங்கும் திரைக்கதை அதன்பின் தீவிரவாதம், ஆப்கானிஸ்தான் என வேகமெடுக்கும்போது பதைபதைக்கிறது. யாரோ விதைக்கும் குரோதத்தில், எதற்காகவோ நடத்தப்படும் போரில், அப்பாவிகளும் ஏதுமறியா தளிர்களும் குண்டுகளுக்கு இரையாகும் கொடுமையை மறைமுகமாக உணர்த்தும் இயக்குனர் கமல், பார்வையாளர்களின் இதயத்திற்குள்ளும் இந்த வலியை இறக்கி வைக்கிறார். சற்றே பெண் தன்மை பொருந்திய கதக் கலைஞர், ஜிகாதி, உளவுத்துறை அதிகாரி என எல்லாவற்றிலும் அதி அற்புதமாகப் பொருந்தும் உடல்மொழி கமலுக்கு மட்டுமே சாத்தியம். எதுவொன்றின் அடையாளமும், இன்னொன்றில் காட்டாததில் டிஸ்டிங்ஷன் தட்டுகிறார்.

தீவிரவாத தலைவன் உமராக, ராகுல் போஸ் பின்னியெடுத்திருக்கிறார். போரில் ஒரு காலையும் கண்ணையும் இழந்து பிசிறடிக்கும் குரலிலும், உடல்மொழியிலும் அவர் காட்டியிருக்கும் லாவகம், அட்டகாசம். கமலின் மனைவியாக பூஜா குமார். வாவ்! பட்டாம்பூச்சியாக படபடக்கும் பேச்சில் வசீகரிக்கும் பூஜாவுக்கு, வேஸ்ட் என்று நினைத்த கணவன் மீது கொஞ்சம் கொஞ்சமாக டேஸ்ட் வரும் இடங்கள் அழகு. கமலின் மாணவியாக ஆன்ட்ரியாவும் கவர்கிறார். அமெரிக்க அதிகாரியாக சேகர் கபூர், ஆப்கன் தீவிரவாதத் தலைவராக நாசர், உமரின் வலதுகரமாக வரும் ஜாய்தீப் என படத்தில் வரும் எல்லா கேரக்டர்களுமே சோடை போகாத தேர்வு.

‘‘உங்க கடவுளுக்கு நான்கு கைகள்னா எப்படி சிலுவையில் அறைவீங்க?’’ என்ற அமெரிக்க அதிகாரியின் கேள்விக்கு, ‘‘நாங்க எங்க கடவுளை கடல்ல தூக்கிப்போடுவோம்...’’ என்று பூஜா பேசுவது கமல் ஸ்பெஷல்.

அமெரிக்கப் படைகளால் தாக்கப்பட்ட பகுதிகளை உமரும் கமலும் பார்க்கப் போகும் இடத்தில் ‘‘முதல்ல இங்கிலீஷ்காரன், அப்புறம் ரஷ்யாக்காரன், அடுத்து அமெரிக்கா, இப்போ நீங்களா? போங்கடா முன்னால வால் முளைச்சவங்களே...’’ என ஒரு பெண்மணி அடிக்கும் கமென்ட், நாகரிகத்தை சூறையாடும் மனித வல்லூறுகளுக்கு சவுக்கடி.



ஊஞ்சலில் உட்கார வைக்கப்படும் உமரின் இளைய மகன், ‘‘ஐ’ம் நாட் சைல்ட்...’’ என இறங்கிப் போவதும், அவரது மூத்த மகன் ஊஞ்சலில் ஆடி மகிழ்வதும், மறுநாளே அவன் மனித வெடிகுண்டாகி சிதறிப் போகும் சோகமும் ஈர நெஞ்சங்களில் உறைந்துவிடுகிறது. உணவிற்கான அரிசியையும் காய்கறிகளையும் கமல் வாங்கிக்கொண்டு வரும்போது, இன்னொரு பக்கம் உயிர்களுக்கு உலை வைக்க தராசுகளில் தோட்டாக்கள் நிறுக்கும் காட்சியில், அவரவர் மனசாட்சியை எடை போட்டுக் காட்டுகிறார் இயக்குனர் கமல்.

ஆப்கனில் திடீர்திடீரென இடம் மாறி பறக்கிற ஹெலிகாப்டர்கள், நியூயார்க்கின் அவசரம், கமலின் அதி அற்புத நடனத்தின் அசைவுகளில் கேமரா இடம் மாறுகிற லாவகம் என மொத்தப் படத்தையும் தன் கன்ட்ரோலில் வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சனு வர்கிஸ். ‘உன்னைக் காணாத நான் இன்று நானில்லையே’ பாடலின் வார்த்தைகளில் கமல்ஹாசனின் மொத்த சாமர்த்தியமும் பொங்கி வழிகிறது. வசீகரமான பாடல் வரிகளுக்கு இடம் கொடுத்து இருக்கும் ஷங்கர் இசான் லாயின் இசை மிகப்பெரிய ஆறுதல்.  

கூறியது கூறல் கிளிப்பிள்ளைகள் வேலை. இனிமேல் அது கமலுக்குப் பொருந்தாது. கமல் யாரையும் ‘விஸ்வரூப’த்தில் விட்டு வைக்கவில்லை. மதம், இனம், தீவிரவாதம், அரசியல், சாதி, உறவுகள், வாழ்க்கை என எல்லாவற்றிலும் விலகி நின்று தனிமனிதனாகக் கேள்வி எழுப்புகிறார். அந்த அசல் துணிவிற்காகவே கமலைக் கொண்டாடலாம்.
இந்த மக்கள் பணம் தருவார்களோ, இல்லையோ... தெரியாது. மரியாதை தருவார்கள். அது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது கமல்... கீப் இட் அப்!
- குங்குமம்
விமர்சனக் குழு