சகிப்பின்மையின் காலம் சமீபத்தில் ‘கடல்’ திரைப்படம் பார்த்தேன். புயல் நடுவே கடலில் கட்டு மரத்தில் சிக்கிய ஒரு மீனவனைப் போல, படத்தை எங்கே கொண்டுசெல்வது என்று தெரியாமல் மணிரத்னம் தவியாய் தவித்து, அந்தத் தவிப்பில் நம்மையும் சிக்க வைத்துவிடுகிறார். ‘நாயகன்’, ‘தளபதி’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ போன்ற படங்களில் திரைக்கதையின் உச்சங்களைத் தொட்ட மணிரத்னத்திற்கு என்ன ஆயிற்று? அழுத்தமற்ற காட்சிகள். அர்த்தமற்ற திருப்பங்கள். தர்க்கமற்ற முரண்பாடுகள். படம் முழுக்க இப்படித்தான் நகர்கிறது. நன்மைக்கும் தீமைக்குமான யுத்தம் என்ற ஆதிகால முரணை வைத்துக்கொண்டு, இப்படி ஒரு தட்டையான படத்தை உருவாக்க ஒரு துணிச்சல் வேண்டும்.
சாத்தானின் உருவமாக வரும் அர்ஜுனின் கதாபாத்திரத்தைப் போல ஒரு அபத்தமான பாத்திரத்தை நான் இதுவரை தமிழ் சினிமாவில் கண்டதில்லை. படத்தில் சாத்தானும் வெற்றி பெறவில்லை; கடவுளும் வெற்றி பெறவில்லை. நடந்தது ஒரு இயக்குனரின் முழுமையான தோல்வி. பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா போன்றவர்கள் தங்கள் திரை வாழ்வின் பிற்பகுதியில் எடுத்த அபத்தமான படங்களை நினைவூட்டுகிறது ‘கடல்’. நமது மாபெரும் கோபுரங்கள் சரியும்போது ஏற்படும் அதே துக்கம், ‘கடல்’ பார்க்கும்போதும் ஏற்பட்டது.
ஆனால் ‘கடல்’ படம், தமிழகத்தின் கலாசார தணிக்கைக்குள் சிக்கிக்கொண்டு வேறொரு முக்கியத்துவத்தைப் பெற்றுவருகிறது. இயேசு பிரான் படத்தை உடைப்பது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் இடம்பெற்று இருப்பதாகக் கூறி, இப்படத்தை தடை செய்ய இந்திய கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
குறிப்பாக பைபிள் கல்லூரியில் படிக்க வரும் அரவிந்த்சாமியிடம், ‘‘இயேசுவுக்கு அண்ணன் சாத்தான்’’ என்று கூறுகிறார் அர்ஜுன். மேலும் அர்ஜுன் அடிக்கடி தன்னை சாத்தான் என்று கூறிக்கொள்கிறார். ஆனால் அவரது பெயரோ பெர்க்மான்ஸ். இந்தப் பெயர் கிறிஸ்தவ பாடகரின் பெயர். அதேபோல் படத்தின் நாயகன் இயேசு படத்தைப் போட்டு உடைக்கிறார். அவர் ஒரு பெண்ணுக்குப் பிரசவம் பார்க்கும்போது தனது கையில் படிந்து இருக்கும் ரத்தம் ‘இயேசுவின் ரத்தம்’ என்று கூறுகிறார். இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டியும், கிறிஸ்தவர்கள் மனம் புண்படும்படி படம் எடுத்த மணிரத்னம் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யவும் அவர்கள் போராட்ட அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள்.
மதம் சார்ந்த தொன்மங்கள், அடையாளங்களை கலைப்பிரதிகளில் அதே புனித அடையாளங்களோடு கையாள வேண்டும் என்றால், எந்த மதம் குறித்தும் ஒரு கலைஞனோ எழுத்தாளனோ எந்த விவாதத்தையும் தனது பிரதிகளில் முன்வைக்க முடியாது. மதக்கோட்பாடுகள் மீதான கடும் விவாதங்களின் வழியாகவே தத்துவரீதியான வளர்ச்சி உலகம் முழுக்க நிகழ்ந்திருக்கிறது. அதிலும் கலைகளும் இலக்கியங்களும் மதத்துடன் நிகழ்த்தியிருக்கும் கடுமையான விவாதங்களையும் மீறல்களையும் மறுக்க வேண்டும் என்றால், உலக இலக்கியத்தின் மாபெரும் படைப்புகளின் பெரும்பகுதியை மறுக்க வேண்டும்.

ஆனால் இன்று ‘எந்த மதம் தொடர்பாகவும் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசக்கூடாது’ என அடிப்படைவாதிகள் வீதிக்கு வருகிறார்கள். உண்மையில் நாம் மத்தியகால மத ஒடுக்குமுறை காலகட்டத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறோமா என்ற பயத்தை இது ஏற்படுத்துகிறது. தடை கோரல்களும் எதிர்ப்புகளும் இன்று எல்லா சமூகக் குழுக்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக மாறிவிட்டன.
நாம் சமூக நீதிக்கான, சிறுபான்மையினரின் அடையாளங்களைப் பாதுகாக்கிற போராட்டத்தை முன்னெடுப்பது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் செயல்பாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்கு ஏதேனும் ஒரு வரன்முறை வேண்டாமா? புண்படுதல் என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்? ஒரு சமூகத்தின் சார்பாக சில அரசியல் குழுக்களா? அப்படியானால் இந்தப் புண்படுதல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துக்கொண்டு எந்த சமூக அரசியல் குழுவும் எதன்மீது வேண்டுமானாலும் தன்னுடைய தண்டனையை வழங்கலாம்தானே?
அமீரின் ‘ஆதிபகவன்’ படத்தை தங்களுக்குத் திரையிட்டு அனுமதி பெற வேண்டும் என்று ஒரு இந்து அமைப்பு கோருகிறது. வெளிவர இருக்கும் ‘சிங்கம் 2’ திரைப்படத்தில் முஸ்லிம்களை கடல் கொள்ளையர்களாகச் சித்தரித்துக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன என்ற செய்தியின் அடிப்படையில் ஒரு இஸ்லாமிய அமைப்பு அவற்றை தணிக்கை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. ‘விஸ்வரூபம்’, ‘கடல்’, ‘ஆதிபகவன்’, ‘சிங்கம் 2’ எனத் தொடரும் இந்த சர்ச்சைகளின் பின்னே இருப்பது இன்று வெறுமனே திரைப்படங்கள் சம்பந்தமான அரசியல் மட்டும்தானா?
உண்மையில் நமது சமூகம் பரஸ்பர சந்தேகங்களும் வெறுப்புகளும் சூழ்ந்த ஒரு இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறதோ என்று அஞ்சுகிறேன். அரசியல்வாதிகள் வெறுப்பையும் பயத்தையும் ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் ஊட்டி வருகிறார்கள். ஒரு சமூகப் பிணக்கு அல்லது மோதல் உருவாகும்போது, இந்த நஞ்சு எத்தகைய வடிவம் எடுக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.
பயத்தின் முன், சந்தேகத்தின் முன், கலை மௌனமாக்கப்பட்டுவிடுகிறது. உண்மைகள் கண்களை மூடிக்கொள்கின்றன. நாம் சகிப்புத்தன்மையற்ற ஒரு இடத்தை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறோம்.
காதலர்களின் மனித
உரிமை தினம்‘காதலர் தினத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று இரண்டு மத அமைப்புகள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்திருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். காதலையே தடை செய்யக் கோரும் தலைவர்கள், சங்கங்கள் வாழும் நாட்டில், காதலர் தினத்தை தடை செய்யச் சொல்பவர்கள் எவ்வளவோ பரவாயில்லை எனும் நிலைக்கு வந்துவிட்டேன். போலீஸ் இன்னும் என்னென்ன விவகாரங்களில் எல்லாம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரியவில்லை.
ஆனால் இந்த காதலர் தினத்துக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. காதல் திருமணங்களுக்கும் கலப்புத் திருமணங்களுக்கும் எதிராக வெட்கமின்றி பகிரங்கமாக பலர் கொடி பிடித்த ஆண்டு இது. இந்த சந்தர்ப்பத்தில்தான் காதலர்கள் மேல் இழைக்கப்படும் பல்வேறு வன்முறைகளும் சமூகக் கொடுமைகளும் வெளிச்சத்திற்கு வந்தன. கட்டைப் பஞ்சாயத்துகள் மூலம் ஊர்தோறும் எவ்வளவு காதல் ஜோடிகள் பலவந்தமாக பிரிக்கப்படுகிறார்கள் என்பது சமூகத்தின் பார்வைக்கு வந்தது. சாதி வெறியர்களும் மத வெறியர்களும், காதலிக்கும் பெண்களை எப்படி படுகொலை செய்து வந்திருக்கிறார்கள் என்பதை ‘கௌரவக் கொலைகள்’ என்ற சொல்லின் மூலம் கண்டுகொண்டோம்.
இனியும் காதலர் தினம் என்பது மேற்கத்திய கலாசாரத்தின் விளைவு, வணிக கலாசாரம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இனி ஒவ்வொரு காதலர் தினத்தையும் தமிழகத்தில் காதலர்களைப் பாதுகாக்கும் மனித உரிமை தினமாகக் கொண்டாடலாம்.
2013ல் இதை எழுத அவ்வளவு அவமானமாக இருக்கிறது. என்ன செய்ய, நாம் அப்படிப்பட்ட ஒரு காலத்தில்தானே வாழ்கிறோம்.
சாவு அறிக்கைசமீபத்தில் சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ‘‘வறட்சி காரணமாக விவசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. நிகழ்ந்தவை அனைத்தும் இயற்கை மரணங்களே’’ என்று சொல்லியிருந்தார். ஏன், ‘வறட்சியே இயற்கையானதுதானே... நாங்கள் என்ன செய்ய முடியும்’ என்று ஒரேயடியாக சொல்லியிருக்கலாம். அதே தினத்தன்று சட்டமன்றத்தில் வருவாய்த் துறை அமைச்சர் வெங்கடாசலம், ‘‘விவசாயிகள் இறப்பு குறித்து மாவட்டக் கலெக்டர்கள் அறிக்கை அளித்தால், அதன் அடிப்படையில் முதல்வர் நிவாரணம் அறிவிப்பார்’’ என்று கூறியிருக்கிறார். ‘கலெக்டர்கள் என்ன அறிக்கை அளிக்க வேண்டும்’ என்று நிதியமைச்சர் ஏற்கனவே உணர்த்திவிட்டார்.
இதுவரை 19 விவசாயிகள் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். பருவ மழை பொய்த்தது, காவிரியில் கர்நாடக அரசு செய்த துரோகம், கடும் கடன் தொல்லை இவற்றால் தமிழக விவசாயிகள் பேரழிவை சந்தித்து வருகிறார்கள். இதை இயற்கைப் பேரழிவாக அறிவித்து மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பெருமளவு உதவித் தொகை அளிக்கவேண்டும் என்று விவசாய அமைப்புகள் போராடி வருகின்றன.
இந்தச் சூழலில்தான் ‘‘அந்த 19 விவசாயிகளும் வறட்சியால் சாகவில்லை’’ என அமைச்சர் டெத் சர்டிபிகேட் வழங்குகிறார். நல்லா இருங்க சாமி!
ஒரு திருத்தம் சென்ற இதழில் வெளிவந்த எனக்குப் பிடித்த கவிதையை எழுதியவர் வைகறை. நர்சிம் அல்ல. நர்சிம்மின் கவிதை இந்த இதழில் வருகிறது.
(இன்னும் நடக்கலாம்...)
நான் படித்த புத்தகம்
தமிழ் சினிமாவின் மயக்கம் : ஸீகௌதம சித்தார்த்தன்தமிழ் சினிமாவின் கடந்த பத்தாண்டுகள், பல்வேறு புதிய மாற்றங்களின் பெரும் களமாக இருந்திருக்கிறது. ஒருபுறம் தமிழ் சினிமாவின் மொழியையே மாற்றியமைத்த புது இயக்குனர்களின் வருகை; இன்னொருபுறம் பிரமாண்டமான வர்த்தக சினிமாவின் பெரும் பாய்ச்சல். நுட்பமான கலாசாரப் பின்புலம் உள்ள படங்களுடன், பெரிய ஹீரோக்களின் படங்கள் போட்டி போட நேர்ந்தன. கௌதம சித்தார்த்தனின் இந்தக் கட்டுரைகள் தமிழ் சினிமாவின் கதையாடல்களுக்குள் புதைந்திருக்கும் நுட்பமான அரசியலையும் அழகியல் சார்ந்த பிரச்னைகளையும் ஆராய்கிறது.
‘நான் கடவுள்’, ‘வழக்கு எண் 18/9’, ‘பில்லா 2’, ‘அட்டகத்தி’, ‘மாற்றான்’ என பல படங்களின் பின்புலத்தில் கௌதம சித்தார்த்தன் முன்வைக்கும் கருத்துகள் பலவும், எதிர்காலத்தில் வரப்போகும் படங்களுக்கும் பொருந்தக்கூடியது.
(விலை: ரூ.125/-, வெளியீடு: குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, புதிய எண்: 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-600010.)
எனக்குப் பிடித்த கவிதை
நீ ஊரில் இல்லாதபோது
ஊரே
இல்லாமல் போகிறது
- நர்சிம்
மனுஷ்ய புத்திரனின் ஃபேஸ்புக் பக்கம்தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் யார் என்பதை கூட்டணிக் கட்சிகள்தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர சாமியார்கள் அல்ல
- நிதீஷ் குமார்
நிதீஷ்குமார் கூட்டணியில் இருக்கவேண்டுமா இல்லையா என்பதை இனி சாமியார்கள் முடிவெடுப்பார்கள்.