இப்போ எப்படி சொல்றாங்க ஐ லவ் யூ ?





‘‘நா ஒன்ன விரும்பல. உம்மேல ஆசப்பட்ல. நீ அழ்கா இருக்கேன்னு நெனிக்கல... இதெல்லாம் நடந்துடுமோன்னு பய்மா இருக்கு. யோஸ்ச்சு சொல்லு’’ - இன்றைய தலைமுறைக்கு காமெடி டயலாக் ஆகிவிட்டது இந்த ‘அலைபாயுதே’ ரொமான்ஸ். ‘‘ஆனாலும் பொண்ணுங்களுக்கு இப்படி வித்தியாசமா ஏதாச்சும் பண்ணாதான் பாஸ் புடிக்குது. ‘உங்கள எப்படீங்க கரெக்ட் பண்றது’ன்னு பாஸ் ஸ்டைல்ல கேட்டாத்தான், கேவலமாவாவது ஒரு சிரிப்பு சிரிச்சு வைக்கிறாங்க!’’ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறது பாய்ஸ் வாய்ஸ்!
ஸோ, இன்னிக்கு ‘ஐ லவ் யூ’ இடத்தைப் பிடித்திருக்கும் அப்பாடக்கர் டயலாக்ஸ் என்னென்ன? சென்னை செம்மஞ்சேரி ஐ.டி இளசுகளிடம் அலசினோம்...
‘‘எங்க ஏரியாவுல ஈவ்னிங் 6 டூ 8 பவர் கட். அப்போ நீ ஒரு தீப்பெட்டி எடுத்துக்கிட்டு எங்க வீட்டுக்கு வா. எதுக்கா? விளக்கேத்தத்தான்!’’ என்று பலத்தகை தட்டலோடு கார்த்தி தொடங்கிவைக்க, லோகேஷும் அனிலும் ஃபுல் பார்மில் இறங்கினார்கள்.

‘‘எங்க வீட்ல பாக்கெட் மணி நிறையவே குடுக்குறாங்க. அவ்வளவெல்லாம் எனக்கு செலவே இல்ல. செல்லுல வேற பேலன்ஸ் தீரவே மாட்டேங்குது. நீ நெனச்சா இதெல்லாம் சரியாகும்! என்ன சொல்றே?’’
‘‘என் ஃபேஸ்புக்ல இருந்து உன்னை நான் ப்ளாக் பண்ணப் போறேன். என்னோட தரை டிக்கெட் ஃப்ரெண்ட்ஷிப் எல்லாம் உனக்குத் தெரிய வேணாம்னு நினைக்கிறேன். என்னவோ தெரியல, உன்கிட்ட மட்டும் நல்லவன் மாதிரி நடிக்கணும்னு தோணுது. அது ஏன்னு உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?’’
‘‘மத்த பொண்ணுங்க மாதிரி உன்ன அவ்வளவு ஈசியா கரெக்ட் பண்ண முடியாதுன்னு பசங்க சொல்றானுங்க. அதான்... ஒரு தனி மரியாதை வந்துடுச்சு உன் மேல!’’ என்று அவர்கள் மாறி மாறி கோல் போட, கைதட்டிக் கொண்டிருந்த கேர்ள்ஸ் கேங்கும் கோதாவில் குதித்தது.

‘‘இதெல்லாம் ஏற்கனவே பசங்க போடுற ரெடிமேட் பிட்டு டயலாக் சார். இப்ப நாங்க சொல்லப் போறது வருங்காலப் பசங்களுக்கும் ஒரு கோனார் கைடா இருக்கும்’’ என்று சுபாஷினி ஆரம்பித்தார்.



‘‘பொண்ணுங்களுக்குப் பொதுவா, அம்மா செல்லம் பசங்களைப் பிடிக்கும். ஸோ, ‘நீ எங்க அம்மா மாதிரியே இருக்கே’ங்கற டயலாக் கிட்டத்தட்ட ஐ லவ் யூதான்!’’
‘‘அதே மாதிரி இன்னும் நிறைய சென்டிமென்ட்ஸ் இருக்கு. ‘என் வீட்டைப் பார்... என்னைப் பிடிக்கும்’ன்ற மாதிரி ஃபேமிலி டீட்டெயில்ஸை ஓவரா ஒப்பிச்சாலே... பொண்ணுங்களுக்கு மேட்டர் புரிஞ்சுடும். அம்மா செஞ்சாங்கன்னு காஞ்சு போன பூரி மசால் கொடுக்குறதெல்லாம் ரோஸ் கொடுக்குறதை விட பவர்ஃபுல் ப்ரபோஸல். அதெல்லாம் புரியாத மாதிரி நடிக்கறதே கஷ்டம்!’’ என்று சுபாஷினி சொல்ல, என்னவோ புரிந்த மாதிரி கூட்டத்தினரின் ‘ஓஹோ’ காதைப் பிளந்தது.

‘‘சென்டிமென்ட் பசங்களை கல்யாணம் பண்ணுவாங்க. பட் கலாய்க்கிற பசங்களைத்தான் லவ் பண்ணுவாங்க’’ என்று இந்த மூடைக் கலைத்தார் அனில்.
‘‘உதாரணத்துக்கு, பொண்ணுங்க அடிக்க வர்றா மாதிரி ஏதாவது சொல்லணும். அதுதான் இன்னிக்கு ஐ லவ் யூ. அடிக்கறதன் மூலமா உன் மேல எனக்கு அவ்வளவு உரிமை இருக்குன்னு பொண்ணுங்க லவ் கன்ஃபார்ம் பண்ணிடுவாங்க. அது அஃபீஷியல் பச்சைக் கொடி’’ என்று அவர் பில்டப் கொடுக்க, கார்த்தி அதற்கொரு உதாரணம் சொன்னார்.
‘‘ஃப்ரெண்டு ஒருத்தன், கூடப் படிச்ச பொண்ணுகிட்ட போயி, ‘உங்க வீட்டுல உனக்கு எத்தனை வயசுல மாப்பிள்ளை பார்ப்பாங்க’னு கேட்டிருக்கான். ‘எதுக்கு கேக்கறே’ன்னு அவ விசாரிக்க, ‘அமெரிக்க மாப்பிள்ளை அது இதுன்னு நீ பறந்துட்டீன்னா தொல்லை ஒழியுமே... அதான் கேட்டேன்’னு சொல்லிட்டான். டென்ஷனாயிடுச்சு பொண்ணு. செல்லமா அடிக்கிற மாதிரி பட்டு பட்டுனு மரண அடி விழுந்துச்சு. ‘சேச்சே... நான் விளையாட்டுக்குச் சொன்னேன். உண்மையா நான் எதுக்குக் கேட்டேன்னு அப்புறம் சொல்றேன்’னுட்டு போயிட்டான். இப்ப வரைக்கும் அவன் ரீசன் சொல்லல. ஆனா, அவங்களுக்குள்ள என்னவோ புரிஞ்சு போயி லவ் பிக்கப் ஆயிடுச்சு.’’



அதுவரை கலந்து பேசிக் கொண்டிருந்த ஐஸ்வர்யா, சுவாதி, சுபஸ்ரீ மூவரணி, செம ஐடியாக்களோடு வாய் திறந்தது.
‘‘பொண்ணுங்களை கலாய்ச்சாலும் அதுக்குள்ள ஒரு சென்டிமென்ட் இருக்கணும். ‘நான் சூப்பரா சமைப்பேன், சுடிதார் எல்லாம் செம கிளீனா துவைப்பேன், ஆனாலும் ஒரு ஃபிகரும் சிக்க மாட்டேங்குது’னு ஒரு பொண்ணுகிட்ட நாலைஞ்சு தடவை அலுத்துக்கிட்டாலே அது அப்ளிகேஷன்தான்’’ என்றார் சுபஸ்ரீ.
‘‘இன்னிக்கி சில பக்கிங்க ஓவரா கடன் வாங்குறதையே புது வித ‘ஐ லவ் யூ’வா மாத்திடுச்சுங்க. ஒரு கட்டத்துக்கு மேல தர மாட்டேன்னு சொல்லும்போது, உன்ன விட்டா நான் யார் கிட்ட கேப்பேன், எனக்காக இது கூட செய்ய மாட்டியான்னு நாடி பிடிச்சு கெஞ்சுற அளவுக்கு நெருங்கிடுவாங்க. ஐ லவ் யூவெல்லாம் தேவையே இல்லாம போயிடும்!’’ என்ற சுவாதியிடம் கனல் தெறித்தது.
‘‘இந்த மாதிரிதான் பசங்க ப்ரபோஸ் பண்ணணும்னு நாங்க சொல்ல வரல. பண்ணா நல்லா இருக்கும்னும் சொல்லல. வழக்கம் போல, ‘நான் உன்னையே நினைச்சுக்கிட்டிருக்கேன், சாப்பிடல, தூங்கல, டாய்லட் போகல’ன்னு டார்ச்சர் பண்ணாம... அட்லீஸ்ட் சினிமாவுலயாவது நல்ல சீன் வைங்கன்னுதான் சொல்றோம்’’ என்று ஃபினிஷிங் கொடுத்தார் ஐஸ்வர்யா.
ஆர்ட்டிகிள் டெடிகேடட் டு ஆல் டைரக்டர்ஸ்!
- டி.ரஞ்சித்
படங்கள்: புதூர்
சரவணன்