கடல் படத்துக்கு எதிராக கருத்து யுத்தம்
‘விஸ்வரூப’மாக தொடங்கிய சர்ச்சை, ‘கடல்’ தாண்டி ‘சிங்கம் 2’ வரை நீண்டு கொண்டிருக்கிறது. ‘‘இப்படி ஆளாளுக்கு போர்க்கொடி தூக்கிக் கொண்டிருந்தால் சினிமாவே எடுக்க முடியாது’’ என்று எல்லா தரப்பிலும் அதிருப்தி தலைதூக்கி வரும் நிலையில், உண்மையான அக்கறையோடு ஒரு விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார் இயக்குனர் பார்த்திபன்.
மணிரத்னம் இயக்கியுள்ள ‘கடல்’ படத்தில் கதாநாயகன் கௌதம், கதாநாயகி துளசியின் உதட்டில் முத்தமிடுவது போன்ற காட்சிகள் தொலைக்காட்சி டிரெய்லர்களிலும், பத்திரிகை விளம்பரங்களிலும் வெளியான வண்ணம் இருக்கிறது. அதுதான் இந்த சர்ச்சையின் மையம்!
பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியான துளசிக்கு 15 வயது இருக்கலாம். அவர் உதட்டில் கதாநாயகன் முத்தமிடுவது போன்ற காட்சி டீன் ஏஜ் குழந்தைகள் மத்தியில் தவறான புரிதல்களை உருவாக்கும் என்பது பொதுக்கருத்தாக உருவாகியிருக்கிறது.
இந்தியா முழுவதும் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன. நடக்கும் சம்பவங்களில் பெரும்பாலானவை சிறுமிகளைக் குறிவைத்து நிகழ்பவை. அதேபோல் குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அண்மையில் டெல்லியில் நிகழ்ந்த சம்பவத்திலும் கூட ஒரு சிறுவன் குற்றவாளியாக நிற்கிறான். பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துவரும் நிலையில் இந்த சர்ச்சை வலுப் பெற்றிருக்கிறது.
‘‘சினிமாவை வெறும் பொழுதுபோக்கு என்று சொல்லி தள்ளிவைக்க முடியாது. நாம் விரும்பாவிட்டாலும் வீட்டு வரவேற்பறைக்குள் அது வந்து விடுகிறது. அதனால் சினிமா எடுப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புணர்வு இருக்கவேண்டும். ஆனால் பல இயக்குனர்கள் வக்கிரமாக படங்களை எடுக்கிறார்கள். ஒரு பக்கம் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை எல்லாம் படங்களில் நடிக்க வைக்கிறார்கள். அந்த சிறுமிகள் காதலிப்பது போலவும், கட்டிப் பிடித்து உருளுவது போலவும், முத்தமிடுவது போலவும் காட்டுகிறார்கள். இதை திரையில் பார்க்கிற குழந்தைகளின் மனதில் என்ன விளைவுகள் ஏற்படும் என யோசிக்க வேண்டாமா? இன்று இந்தியாவே பாலியல் வன்முறைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்கிறது. மக்களோடு மக்களாக நிற்கக்கூட வேண்டாம். படத்தை சிறிது பொறுப்புணர்வோடு எடுக்க வேண்டாமா?

லக்ஷ்மி மேனன், துளசி உள்பட பல நடிகைகள் பத்தாம் வகுப்பு படிப்பதாகச் சொல்கிறார்கள். 16 வயது நிறைவடையாத சிறுமிகள் மீது அக்கறையோடு பல சட்டங்கள் இங்கு இருக்கின்றன. சினிமா ஒரு கலாசாரக் கருவி. அதில் பதினாறு வயது நிரம்பாத சிறுமிகளை ஆடைகளை உரித்து காட்சிப்படுத்துவது வக்கிரம். ‘கடல்’ படத்தின் விளம்பரக் காட்சிகளில், தண்ணீரில் உடல் நனைத்தபடி உதடோடு உதடு வைத்து முத்தமிடுகிறார்கள். இங்கே பெண்ணிய அமைப்புகள் என்னதான் செய்கின்றன..? இதுபோல படம் எடுக்கும் இயக்குனர்களை மட்டுமின்றி, நடிக்க வைத்து சிறுமிகளை வதைக்கும் பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். படத்தில் காதல் காட்சிகள் எல்லைமீறும் பட்சத்தில் சென்சார் போர்டு, அவ்வாறு நடித்தவர்களின் வயதுச் சான்றிதழைப் பெற்று, ‘அவர்கள் மேஜர்தானா’ என்று பரிசோதிக்க வேண்டும்’’ எனக் குமுறுகிறார் இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் தா.கண்ணன்.
இதுபற்றி இயக்குனர் பார்த்திபனிடம் பேசினோம்.
‘‘ஒரு சிறுமி பூப்பெய்தும் நிகழ்வைக் கொண்டாடுவது தவறு என்று என் படத்தில் ஒரு காட்சி வைத்தேன். அதை பலர் கண்டித்தார்கள். ‘எங்கள் வீட்டில் ஒரு பெண் திருமணத்துக்கு தயாராக இருக்கிறாள் என்று உறவுகளுக்குத் தெரியப்படுத்துவதே அதன் நோக்கம்’ என்றார்கள். ‘கடல்’ படத்தில் மைனர் பெண்ணுக்கு முத்தம் கொடுப்பது சரியா என்று என்னிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, மேற்கண்ட நிகழ்வை மனதில் வைத்துக்கொண்டு, ‘கல்யாணத்துக்குத் தகுதியான பெண் முத்தம் கொடுப்பதில் என்ன தவறு’ என்றேன். இது பல விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. பல இயக்குனர்களுக்கு குழந்தைகள் மனதில் ஏற்படும் இயல்பான உணர்வுகளை புரிந்துகொள்ளத் தெரியவில்லை. இயல்பான ஈர்ப்பையும், குறும்புத்தனத்தையும் காதல் என்று புரிந்துகொள்கிறார்கள். அந்த புரிதல் குறைபாடுதான் வக்கிரமாகி விடுகிறது. அதற்காக சிறுவர்களை திரைப்படத்தில் பயன் படுத்தவே கூடாது என்று சொல்வது அபத்தமானது. ‘அழகி’யில் குழந்தைகளின் சிறுவயது ஈர்ப்பு அழகாக காட்சிப்படுத்தப்படும். ஆனால் அதுவே எனக்கு இன்றுவரை உறுத்தலாக இருக்கிறது. ‘சில்ட்ரன் ஆப் ஹெவன்’ படத்தில் முழுக்க முழுக்க சிறுவர்கள்தான் நடித்திருப்பார்கள். அற்புதமான படம். அதை எப்படிக் குறை சொல்ல முடியும்..? குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் விதம் இங்கே தவறாக இருக்கிறது. என் மகள் கீர்த்தனா நடித்தது கூட எனக்குப் பிடிக்கவில்லை. அவரது அம்மா விரும்பினார். யதார்த்தமான சராசரி சந்தோஷங்களையும், விளையாட்டுகளையும் நேர்மையாக சித்தரிக்கும் படங்களும் வரத்தான் செய்கின்றன. அதை வரவேற்கலாம். வக்கிரமாக்கும் படங்களை எதிர்க்கத்தான் வேண்டும்’’ என்கிறார் பார்த்திபன்.
‘பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண்ணை உதட்டோடு உதடு பொருத்தி முத்தமிடுவதாக காட்டுவது சரியா..?’ ‘கடல்’ படத்தின் தயாரிப்பு நிர்வாகி சுப்ரியாவிடம் கேட்டோம். ‘‘படத்தில் அதுபோன்ற எந்த காட்சியும் இல்லையே’’ என்றவர், ‘‘டிரெய்லரில் மட்டும்தான் இருக்கிறது. இதுபற்றிப் பிறகு பேசுகிறேன்’’ என்று தொடர்பைத் துண்டித்தவர், அதன்பிறகு பேசவே இல்லை.
- வெ.நீலகண்டன்