* சந்தானம் எப்போதும் விடிவி கணேஷுடன் காணப்படுகிறார். படங்கள் ஒப்புக்கொள்வது சம்பந்தமாக ஆலோசனை கேட்பதும் அவரிடம்தான். அதனால் கணேஷுக்கு ஒரு ‘வெயிட்’டான ரோல் கொடுத்து, சந்தானத்தின் கால்ஷீட்டை எப்படியாவது வாங்கி விடுகிறார்கள் சில சாமர்த்தியசாலிகள். இது தெரியாமல் சந்தானம் கால்ஷீட்டிற்காக அலைகிறார்கள் சில தயாரிப்பாளர்கள்.

* கமலுக்கு ஆறுதல் சொல்லப் போனவர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் உளவுத்துறையினர். எதற்கு என்பது தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள் திரையுலக புள்ளிகள்.

* உங்களின் எண் விஜய்யின் அலைபேசியில் பதிவாகி இருந்தால்தான் எடுப்பார். இல்லாவிட்டால், ஸாரி... நோ ரெஸ்பான்ஸ்தான்! நேரம் காலம் இல்லாமல் போன் போட்டு, ‘‘என்ன தலைவா, எப்போ ‘தலைவா’ வரும்?’’ என்ற தீராத ரசிகர் தொல்லையைத் தவிர்க்கத்தான் இந்த ஏற்பாடு.
* ஜூடி ஷெகோனி. ஹாலிவுட்டிலிருந்து மும்பை திரையுலகம் இறக்குமதி செய்திருக்கும் புது அழகி. நடிகையாகவும் மாடலாகவும் பிரிட்டனில் புகழ்பெற்ற இவர், ‘கிளப் டான்ஸர்’ படத்தில் அயிட்டம் நம்பருக்கு ஆடுகிறார். ஜூஹு பீச்சில் பிகினியில் ஜூடி ஆடிய ஆட்டத்தால் கிறுகிறுத்துப் போயிருக்கிறது பாலிவுட்.
* விஜயகாந்த் ஃபுட்பால் பிரியர் என்பது யாருக்குமே தெரியாத விஷயம். அத்தனை விளையாட்டுக்காரர்களின் பயோடேட்டாவையும் விரல் நுனியில் வைத்திருப்பார். எந்த அணி ஜெயிக்கும் என்பது வரை கணித்து சொல்லக்கூட அவரால் முடியும். இந்தத் தடவை இங்கிலீஷ் பிரீமியர் லீக்கை நேரில் போய் பார்க்கத் திட்டமிட்டிருக்கிறார்.
* எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை கௌரவிக்கும் விதமாக அவரது சிறப்புச் சிறுகதைகளை இந்தியாவின் எல்லா மொழிகளிலும் நேஷனல் புக் டிரஸ்ட் புத்தகமாக வெளியிடுகிறது. முதல் கட்டமாக தமிழில் அவரது சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன.
றீஹாரிஸ் ஜெயராஜ் கார்களின் காதலன். இப்போது லெம்போகினி காரை இரண்டரை கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார். இரண்டு பேர்தான் அதில் உட்கார முடியும். ஹாரிஸின் அடுத்த இலக்கு, ஃபெராரி கார்.
சைலன்ஸ்

* அக்கட பூமியில் ஹிட்டாகி, இங்குவந்து இளைய தளபதி வரை ஜோடி போட்ட நடிகை சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவரோடு சேர்ந்து நடித்த தமிழ் நடிகர்களில் ஒருவரைத் தவிர யாரைப் பற்றியும் நல்ல அபிப்பிராயம் சொல்லவில்லையாம். ‘அந்த நடிகை வேண்டாம்’ என பல ஹீரோக்களும் இப்போது பின்வாங்குகிறார்கள். அப்செட் ஆன நடிகர்களின் பட்டியல் நீளம் என்பதுதான் விஷயம்.
* நகைச்சுவை புயல் கடைசியாக மௌனத்தை உடைத்து விட்டார். ‘‘ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும்’’ என்ற நிபந்தனையோடு காமெடி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். டயலாக் பேசியே இடம்பிடித்த நகைச்சுவை நடிகருக்கு கொஞ்சம் கிலி தட்டி இருக்கிறதாம்.
* ஒரே பெயர்கொண்ட ஹீரோ, இயக்குனர் படத்தில் வில்லன் வேடம் போடவிருந்தார் அவதார நடிகர். ஹீரோவின் தந்தைக்கு எதிராக சங்கத் தேர்தலில் அவதார நடிகரின் மனைவி செயல்பட... படத்திலிருந்து அவதாரத்தை நீக்கச் சொல்லி, வில்லன் நடிகருக்கே வில்லனாகி விட்டாராம் ஹீரோவின் தந்தை.
* மும்பையில் நடந்து வந்த அஜித் படத்தின் ஷூட்டிங் ஓவர். அடுத்த கட்ட படப்பிடிப்பு துபாயில். இயக்குனர் விஷ்ணுவர்த்தன் உள்ளிட்ட யூனிட் அங்கிருந்தே துபாய் பறக்க, அஜித் சென்னை வந்து, மகளுடன் இரண்டு நாட்களைக் கழித்துவிட்டு தனியாக துபாய் சென்றிருக்கிறார்.
* அப்பாவிகள் துப்பாக்கிக்கு பலியாவதைத் தடுக்க ‘துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா’ கொண்டுவர ஆர்வம் காட்டுகிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா. இந்த நேரத்தில், ஆறு மாதங்களுக்கு முன்பாக அவர் விடுமுறையில் சுட்டுப் பழகிய போட்டோவை வெளியிட்டு பரபரப்பு கிளப்பியிருக்கிறது வெள்ளை மாளிகை. துப்பாக்கி தயாரிக்கும் நிறுவனங்களை அசத்தவே இந்த போட்டோ என விளக்கம் கொடுக்கிறார்கள் ஒபாமாவின் ஆலோசகர்கள்.
* எழுத்தாளர் நாஞ்சில்நாட னுக்கு பேருந்து பயணம் மிகவும் பிடிக்கும். கோவையிலும் சரி, வெளியூர் செல்ல நேர்ந்தாலும் சரி, பேருந்திலேயே பயணிக்கிறார். சக பயணிகள் அவரை அடையாளம் கண்டுகொண்டு கையெழுத்துப் பெறுவதும், புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதும் உண்டு.
* ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பில் விக்ரம் சுகுமார் இயக்கும் படத்தில் ஓவியா நடிக்கிறார். நாயகனும் வில்லனும் புதுமுகங்களே. எழுத்தாளர் வேல.ராமமூர்த்திதான் வில்லன்.