
தமிழ் சினிமாவில் லேட்டஸ்ட் பரபரப்பு ஹீரோயின் அபூர்வா. இப்போது அபூர்வஸ்ரீ. சின்னச் சின்ன கேரக்டர்களில் தன் திறமையை நிரூபித்து, பல வருடப் போராட்டங்களுக்குப் பின் கிடைத்தது ஹீரோயின் சான்ஸ். படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
திடீரென்று படத்தின் இயக்குனர் கார்த்திக்கிடமிருந்து அவசர போன்.
‘‘அபூர்! எனக்கு நீ ஒரு சின்ன உதவி செய்யணும்...’’
‘‘என்ன சார் இப்படிக் கேட்கறீங்க? நீங்கதானே எனக்கு எல்லாம். என்ன செய்யணும்? சொல்லுங்க சார்!’’
‘‘இன்னிக்கு ஈவ்னிங் ஒரு பைனான்சியரை சந்திக்கப் போறேன். நீயும் என்கூட வரணும். இந்தப் படம் என்னோட முதல் முயற்சி. டைரக்டரா மட்டும் இல்லாம, படத்தோட தயாரிப்பாளராவும் கொஞ்சம் அகலக்கால் வச்சிட்டேன். வாங்கின கடன்களை அடைச்சாத்தான் படத்தை ரிலீஸ் பண்ண முடியும். இந்த பைனான்சியர் நம்ம படத்தை நம்பி பணம் போடுவாரான்னு தெரியலை. நீதான் எப்படியாவது பேசி அவரை சம்மதிக்க வைக்கணும். எனக்கே உன்கிட்ட இந்த உதவிய கேட்கிறதுக்கு சங்கடமாத்தான் இருக்கு. ஆனா இந்தப் படம்தான் உனக்கும் லைஃப்... எனக்கும் லைஃப். அதான், வேற வழி தெரியல அபூர்!’’
‘‘பரவால்ல சார்! இது நம்ம இரண்டு பேரோட எதிர்காலப் பிரச்னை. அதுக்காக விட்டுக் கொடுத்துப் போறது தப்பா தெரியல. கண்டிப்பா நான் வர்றேன் சார். ஆனா அதுக்கு முன்னால உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.’’
‘‘என்ன அபூர்... சொல்லு!’’
‘‘சார், என் மனசு பூரா நீங்கதான் நெறைஞ்சு இருக்கறீங்க. படம் ரிலீஸான பிறகு என் காதலை உங்ககிட்ட சொல்லலாம்னு மூடி வச்சிருந்தேன். ஆனா, இப்ப அத சொல்ல வேண்டியதாயிடுச்சு. உங்களுக்காக நான் எதையும் செய்யத் தயாரா இருக்கேன். ஆனா நீங்க கட்டற தாலிதான் என் கழுத்துல ஏறும்!’’
‘‘அபூர், வெரி வெரி ஸாரிடா! என்ன மன்னிச்சுடு. உன் மனசு புரியாம எதை எதையோ பேசிட்டேன். நான் பைனான்சியருக்கு வேற ஏற்பாடு பண்ணிக்கிறேன். படம் முடிஞ்சதும் நாம கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கலாம். ஓகேவா? பைடா!’’ என்றபடி கார்த்திக் லைனை கட் பண்ண, அதற்குள் செகண்ட் காலில் மகேஷ் 3 முறை வந்து போயிருந்தான். 10 வருடங்களாக அபூர்வாவை உருகி உருகிக் காதலிப்பவன்.
‘எப்படியோ ஒரே ஒரு காதல் பொய்யால் இன்னிக்கு தப்பிச்சுட்டோம். பட ரிலீஸ் வரைக்கும் இப்படியே இதைக் கொண்டு போயிடணும். சினிமா ஜோர்ல மகேஷை ஏமாத்திடக் கூடாது.’ - மனதுக்குள் சொன்னபடி செல்போனில் மகேஷ் நம்பரை அழுத்தினாள் அபூர்வா. ‘ஸ்வீட் நத்திங்ஸ்’ உரையாடல் தொடங்கியது.