தர்மபுரி பக்கம் சமீபத்தில் பற்றி எரிந்த காதல் எதிர்ப்புக் கலவரமும், அதைத் தொடர்ந்து டாக்டர் ராமதாஸால் செய்யப்பட்டு வரும் காதல் எதிர்ப்பு பிரசாரமும் சமீபகால பரபரப்புகள். காதலால் எரிந்த நாயக்கன்கொட்டாய் கிராமத்திலிருந்து வெறும் அரை மணி நேரப் பயணத்தில் இருக்கிறது ‘மாரண்டபள்ளி’ கிராமம்! ‘காதலர்களின் காவல் கிராமம்’ என்று அழைக்கப்படும் இந்த ஊரின் பாரம்பரிய வழக்கமே, காதலர்களுக்கு ஆதரவு தந்து அரணாகத் திகழ்வதுதான் என்றால் நம்புவீர்களா?
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கிறது மாரண்டபள்ளி. முட்டைக்கோஸ், முள்ளங்கி, மல்லி, கீரை என கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் போர்வை போர்த்திக் கிடக்கும் ஊரின் எல்லையில் கால் வைத்ததுமே விநோதமாகப் பார்க்கிறார்கள் நம்மை.

‘‘ஆரு நீங்க; என்ன சோலியா வாறீக?’’ - பக்கத்திலிருந்த பெட்டிக்கடைக்காரர் கேட்டதும், ‘‘இங்க காதலிக்கிறவங்களையெல்லாம்...’’ நாம் முடிப்பற்குள்ளேயே, ‘‘அட ஆமாங்க. அதுக்கென்ன இப்போ? எதுக்குக் கேக்குறீக?’’ எனச் சூழ்ந்து கொண்டது கூட்டம். கூட்டத்தில் ஒரு குரல், ‘‘எதுனாலும் ஊர்க்கவுண்டர்ட்ட போங்கப்பா’’ என்றது.
அடுத்த நிமிடம் கண்ணப்ப கவுண்டர் வீட்டில் நாம்.
‘‘அது வேற ஒண்ணுமில்ல தம்பி. இப்ப கொஞ்ச நாளா இங்க நிலைமை சரியில்லையா, ஊருக்குச் சம்பந்தமில்லாதவங்க வந்து, வேண்டாததை எல்லாம் பேசிட்டுப் போயிடுறாங்க. அதனால கொஞ்சம் எச்சரிக்கையா இருக்காங்க மக்க. கலவரம் நடந்தப்ப இங்கயும் சில பேர் வந்தாங்க. ‘ஊர்ல யாராச்சும் காதல் கீதல்னு திரிஞ்சா சொல்லுங்கப்பா’ன்னு கேட்டாங்க. ‘அதையெல்லாம் நாங்க பாத்துக்கறோம். நீங்க வேலையைப் பார்த்துட்டுப் போங்கப்பா’ன்னு விரட்டிட்டோம். தாத்தன், அய்யன் காலம் தொட்டு இருக்கற வழக்கத்தை எதுக்காகவும் விட முடியுமா சொல்லுங்க?’’ என்கிற கண்ணப்ப கவுண்டரின் பேச்சுக்கு ஊரில் அவ்வளவு மரியாதை. தன்னுடைய எண்பது வயது சர்வீஸில் நூற்று இருபது காதல் திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார் மனிதர்.
‘‘எங்க தாத்தா காலத்துல இது ஆரம்பிச்சிருக்கு. ‘ஆசைப்பட்ட வாழ்க்கை அமையல’ங்கிற மாதிரி அவருக்கும் ஒரு காதல் ஃபிளாஷ்பேக் இருந்திருக்கு. அதுபத்தி எனக்கு முழு விபரம் தெரியல. அதனால, சேர்ந்து வாழணும்னு ஆசைப்படறவங்களுக்கு ஊர் மக்கள் முன்னால கல்யாணம் பண்ணி வச்சிருக்கார். தாத்தா நடத்தினதாலயே அய்யா அந்த வழக்கத்தை தொடர்ந்தார். அப்பல்லாம் அங்கொண்ணும் இங்கொண்ணுமாத்தான் நடந்திருக்கு. எனக்கு விவரம் தெரிய, எங்க வீட்டுல வச்சே நிறைய கல்யாணத்தை நடத்திருக்கார் அய்யா. அவர் காலத்துக்குப் பிறகு எங்கிட்ட அடைக்கலம் தேடி வர ஆரம்பிச்சாங்க. நானும் நடத்தி வச்சிட்டிருக்கேன்.
ஆனா, எடுத்தோம் கவிழ்த்தோம்னு பண்ணிடுறதில்ல. காதல் விவகாரம் அரசல் புரசலா தெரியும்போது, ரெண்டு வீட்டுக்காரங்களையும் கூப்பிட்டுப் பேசுவோம். கிராமத்துல வீட்டுக்கொருத்தர் அந்தக் கூட்டத்துல கட்டாயம் கலந்துக்கணும். பையனும் பொண்ணும் பேசுற பேச்சுல இருந்தே, அவங்க உண்மையாவே சேர்ந்து வாழணும்னு நினைக்காங்களா... இல்ல, வயசுக் கோளாறாங்கிறது தெரிஞ்சிடும். நிஜத்துலயே ஒருத்தரையொருத்தர் விரும்புறாங்கன்னா, ஊர் மக்களே அவங்க சேர்ந்து வாழறதுக்கு சம்மதம் சொல்லிடுறாங்க.

அதுக்குப் பிறகு அவங்கள பெத்தவங்களும் ஏத்துக்குவாங்க. ஏத்துக்காத பெத்தவங்க இருந்தாங்கன்னா, ‘புள்ளகளுக்கு எந்தப் பிரச்னையும் பண்ணக்கூடாது’ன்னு அவங்ககிட்ட எழுதி வாங்கிடுவோம். அதே போல பையன் பொண்ணுகிட்டயும் கடைசி வரைக்கும் சேர்ந்து வாழ்வோம்னு திரௌபதியம்மன் கோயில் முன்னால சத்தியம் வாங்கிட்டு, அங்கயே கல்யாணத்தை சிம்பிளா நடத்தி வச்சிடுவோம். இதான் தம்பி இங்க வழக்கம். எனக்குப் பிறகு எம்புள்ளங்களும் இத முன்னால நின்னு நடத்துவாங்க’’ என்கிறார் கண்ணப்ப கவுண்டர்.
வன்னியர்கள் மட்டுமே வாழ்வதால், ஆரம்பத்தில் இங்கு காதலும் ஜாதிக்குள்ளேயே நிகழ்ந்திருக்கிறது. நாளடைவில் ஊர், ஜாதி, மதம் என அது எல்லை தாண்ட ஆரம்பித்தபோது, அதையும் மாரண்டபள்ளி மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதுதான் விசேஷம்.
‘‘காதல்னு வந்துட்ட பிறகு, அது ஒரு ஜாதிக்குள்ளதான் வரணும்னு கட்டாயப்படுத்த முடியுமா? அக்கம்பக்கத்து ஊர்களுக்கு வேலைக்குப் போய் வர்ற எங்க புள்ளங்க மேல வெளியூர் பசங்களுக்கும், வெளியூர் பொண்ணுங்க மேல எங்க பசங்களுக்கும்கூட காதல் வந்து பஞ்சாயத்துக்கு வந்திச்சு. அப்பவும் இதே மாதிரிதான் ரெண்டு தரப்புலயும் பேசி, ஊர் வழக்கத்தைச் சொல்லி கல்யாணத்தைப் பண்ணி வச்சோம். வெளியூர்ல இருந்து அப்படி இங்க வாக்கப்பட்டு வந்த பொண்ணுகளே பதினைஞ்சு பேருக்கு மேல இருக்காங்க’’ என்கிறார் கண்ணப்ப கவுண்டரின் மகன் சந்திரன்.
இப்படி நடத்தி வைக்கப்படும் காதல் திருமணங்களை ‘கட்டப்பஞ்சாயத்து’ என்று தவறாகப் புரிந்து கொண்டு ஒரு முறை போலீஸ் வரையெல்லாம் போய் விசாரணை ஆகியிருக்கிறது.
‘‘அது ஒண்ணுமில்லைங்க... கல்யாணம் பண்ணி வச்ச ஒரு பையனோட அப்பாவுக்கு அது பிடிக்கலை. அவர் போலீசுக்குப் போனார். ‘பையனுக்கு கல்யாண வயசு ஆகலை’னு சொல்லி போலீஸ் வந்திச்சு. ஆனாலும் ஊரே எங்க பக்கம் நின்னுச்சு. வயசு வராததால தாலி கட்டிட்டாலும் சம்பந்தப்பட்ட ஜோடியை ஒரு வருஷத்துக்கு அவங்கவங்க வீட்டோட இருக்கச் சொல்லி, அதுக்குப் பிறகு சேர்த்து வச்சோம். காதல் ஜோடி போலீஸுக்குப் போனா, அவங்களும் இதைத்தானே செய்வாங்க? அதைத்தான் நாங்க செய்யறோம்னு போலீஸே புரிஞ்சுக்கிட்டாங்க’’ என்கிறார் சந்திரன்.
கோவிந்தனும் தீபாவும் மாரண்டபள்ளி சேர்த்து வைத்த லேட்டஸ்ட் காதல் தம்பதி.
‘‘பஸ்ல டிரைவரா இருந்தேன். பக்கத்துல ‘தொட்டூர்’ல இருந்து தினமும் இவங்க பஸ்ல பள்ளிக்கூடம் வந்திட்டிருந்தாங்க. அப்ப பழக்கமாச்சு. ரெண்டு வீட்டுலயும் ஏத்துக்க மாட்டாங்கனு தோணுச்சு. நேரா கவுண்டர்கிட்டயே போய் சொன்னேன். அவர்தான் பேசி முடிச்சு வச்சார்’’ என கோவிந்தன் சொல்ல, ‘‘பழகிட்டிருந்தப்பவே அவர் ஊரைப் பத்திச் சொல்லியிருந்தார். அதனால எப்படியும் எங்க காதல் ஜெயிக்கும்னு நம்பிக்கை இருந்துச்சு’’ என்று குறும்பாகச் சிரிக்கிறார் தீபா.
இவர்களைப் போலவே தங்க ராஜ்-சத்யா, ராமர்-பாக்யலக்ஷ்மி, சின்னசாமி-புனிதா... இப்படி ஏகப்பட்ட காதல் தம்பதிகள் இங்கு கவலையின்றி குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். லைலா - மஜ்னு, அம்பிகாபதி - அமராவதி இவர்களை எல்லாம் கூட, மீண்டும் பிறப்பதானால் இங்கு பிறக்கச் சொல்லலாம்!
- அய்யனார் ராஜன்
படங்கள்: சுதர்ஷன் ராவ்