‘‘என் படத்தில அநியாயமா இந்த சீனை வெட்டிட்டாங்க...’’ எனத் திரைத்துறையினர் அடிக்கடி புலம்புவதும், ‘‘இந்தக் காட்சியை அனுமதிக்க மாட்டோம்’’ என சில சமயங்களில் சென்சார் போர்டு அடம்பிடிப்பதும் தமிழ் சினிமாவில் ஃபுல் ஸ்டாப் இல்லாத தொடர்கதை. இந்த இரு தரப்புக்கும் உள்ள ஏழாம் பொருத்தமே இப்போது ‘விஸ்வரூபம்’ எடுத்துள்ளது.
‘விஸ்வரூபம்’ வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தபோது, ‘‘சென்சார் போர்டு தணிக்கை செய்வதில் நிறைய தவறுகள் நடக்கிறது. எதையும் அவர்கள் முறையாகச் செய்வதில்லை’’ என்று தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் சொன்னது பெரும் சர்ச்சை திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறது. ‘அட்வகேட் ஜெனரல் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என சென்சார் அதிகாரிகள் கொதிக்க, ‘நான் சொன்னது உண்மைதான்’ என உறுதியாகச் சொன்னார் நவநீதகிருஷ்ணன்.
என்னதான் நடக்கிறது சென்சார் விவகாரத்தில்?
‘‘சென்சாரில் சின்ன படம் பெரிய படம் என்ற பாரபட்சம் அந்தக் காலத்திலிருந்தே இருக்கிறது.’’ என்று காட்டமாகத் தொடங்கினார் திரைப்படம் தொடர்பான பல விஷயங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் இயக்குனர், தயாரிப்பாளர் கேயார்.
‘‘1989ம் ஆண்டு நான் எடுத்த ஒரு படத்திற்கு தேவையற்ற கட்ஸ் கொடுக்கப்பட்டது. அது பற்றிக் கேட்டதற்கு, ‘இங்கு இதுதான் ரூல்ஸ்... கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது’ என்று அப்போதைய சென்சார் அதிகாரி சொன்னார். அது என்ன ரூல்ஸ், எந்தெந்தக் காட்சிகள் இடம்பெறக் கூடாது என்ற கைட்லைன்ஸ் எத்தனை பேருக்கு தெரியும்?
காவல்துறையில் மாசத்துக்கு இத்தனை கேஸ் என்று பிடிப்பார்களே... அது போலத்தான் சென்சாரிலும் நடந்துகொள்கிறார்கள். யு, ஏ சான்றிதழ்கள் வழங்குவதில் வழிமுறையே இல்லை. இதில் அப்பாவிகளாக மாட்டிக்கொண்டு முழிப்பது தயாரிப்பாளர்கள்தான்.
ஒவ்வொரு வருடமும் சென்சார் கட் கொடுத்த காட்சிகளையெலாம் ஒன்று சேர்த்து சினிமா துறையினருக்கு திரையிட்டால், ‘எதுமாதிரியான காட்சிகளை எடுக்கக்கூடாது’ என்று ஒரு தெளிவு கிடைக்கும். ஒரு படத்தில் முழுக்க முத்தக் காட்சிகள் இருக்கிறது. அதற்கு ‘யு’ சான்றிதழ் தருகிறார்கள். இது எப்படி என்றால், சென்சாரிடம் பதில் இல்லை. ‘ஹீரோ, ஹீரோயின் இரண்டு பேர் வாயிலும் துர்நாற்றம் வராததால் அந்தக் காட்சிகளை அனுமதித்தோம்’ என்று அபத்தமாகவாவது ஒரு காரணம் சொல்லலாம் இல்லையா? இந்திப் படங்களில் டூ பீஸ் போட்டிருந்தாலும் அதற்கு ‘யு’ சான்றிதழ் தருகிறார்கள். அதுவே தமிழ் என்றால் தனித்தனியாக இல்லாமல் சேர்ந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கிறார்கள். ‘விஸ்வரூபம்’ பிரச்னைக்குப் பிறகு ‘அயிட்டம் டான்ஸ்’ இருந்தால் அந்தப் பாட்டையே தூக்கி விடுகிறார்களாம்.
‘ஏ’ சான்றிதழ் பெற்ற படம் என்றால் 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு அனுமதி இல்லை என்ற வாசகம் தியேட்டரில் ஒட்டப்பட்டிருக்கிறது. ஆனால் தியேட்டருக்குள் போனால் சின்னச் சின்ன குழந்தைகளும் படம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சென்சார் ரூல்ஸ் இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது’’ என்றார் கேயார்.
எழுத்தாளர், சினிமா விமர்சகர், நடிகர் அஜயன்பாலாவிடம் பேசியபோது, ‘‘சென்சார் உறுப்பினர்களாக அரசியல்வாதிகள்தான் அதிகமாக இருக்கிறர்கள். அவர்களுக்கு சினிமா, கலை, கலாசாரம் பற்றி தெரியாது. அவர்கள் சிபாரிசின் அடிப்படையிலேயே வருகிறார்கள். சமூகத்தின் மைய சக்கரங்களான எழுத்தாளர்கள், சமூகப் பொறுப்பு மிக்க பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள்தான் சென்சார் உறுப்பினர்களாக இருக்கவேண்டும். சென்சார் செய்த படத்தை யாரும் தடை செய்யக் கூடாது. ஆளுக்கொரு போராட்டம் நடத்தினால் சினிமாவே எடுக்க முடியாது. சென்சார் உறுப்பினர்களுக்கு சமூக பொறுப்புணர்வும் இருக்க வேண்டும். படைப்பாளிகளின் சுதந்திரத்தைக் கருத்தில் கொண்டு செயல்படுபவர்களாகவும் இருக்க வேண்டும். சென்சாரில் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் பல சமயங்களில் தியேட்டரில் சேர்க்கப்பட்டு ஓட்டப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் சென்சார் எந்த அக்கறையும் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.’’ என்றார்.
சினிமா துறையினர் சென்சார் மீது வீசும் அனல் கேள்விகளுக்கு பதில் கேட்டு சென்சார் போர்டின் தென் மண்டல அதிகாரி பக்கிரிசாமியைச் சந்தித்தோம்.
‘‘ஒரு திரைப்படம் குறிப்பிட்ட இனம், மதம், மொழியையோ, தனிப்பட்ட மனிதரையோ தவறாக சித்தரிக்காமல், தாக்காமல் இருக்கவேண்டும். மாற்றுத் திறனாளிகளை கேலி செய்வது போன்ற வார்த்தைகள் இருக்கக்கூடாது. கெட்ட வார்த்தைகள், எல்லை மீறிய வன்முறைக் காட்சிகள், அரை நிர்வாணக் காட்சிகள் இருக்கக்கூடாது. இதனையெல்லாம் ஆராய்ந்து, ஒழுங்குபடுத்தி சான்றிதழ் அளிப்பதே எங்கள் வேலை. சென்சார் போர்டில் 170 உறுப்பினர்கள் உள்ளனர். வழக்கறிஞர், டாக்டர், ஆசிரியர், இல்லத்தரசி, அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் என பல துறையைச் சேர்ந்தவர்கள் இதில் இருப்பார்கள்.
ஒரு திரைப்படத்தின் தணிக்கைக்காக விண்ணப்பிக்கும்போது அந்த படத்தின் ஸ்கிரிப்ட்டையும் தர வேண்டும். படத்தைப் பார்க்க குறிப்பிட்ட நாள் ஒதுக்கப்பட்ட பிறகு, திரையிடப் போவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு நான்கு உறுப்பினர்கள் படம் பார்க்க அழைக்கப்படுவார்கள். அவர்களுடன் நானும் சேர்ந்து படம் பார்க்கவேண்டும். இந்த ஐந்து பேரில் இருவர் கண்டிப்பாக பெண் உறுப்பினராக இருக்கவேண்டும். படம் பார்க்கும்போது ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளக்கூடாது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபிறகும் எங்கேயும் யாரிடமும் கருத்து சொல்லக்கூடாது.
படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை மனதில் வைத்து மட்டும் அதற்கு என்ன சான்றிதழ் என்று தீர்மானிப்பதில்லை. முழு படத்தையும், அது சொல்ல வரும் கருத்தையும் மனதில் வைத்தே ‘யு’, ‘ஏ’, ‘யு ஏ’ சான்றிதழ் தரப்படும். ஏ சான்றிதழ் படங்களை 18 வயதுக்குக் குறைந்தவர்கள் பார்க்காமல் கண்காணிக்கவேண்டியது தியேட்டர் நிர்வாகமும் மாநில அரசும்தான். எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. கட் கொடுத்த காட்சிகளை தியேட்டரில் இணைத்து ஓட்டாமல் கண்காணிக்க முன்பெல்லாம் தனியார் ஏஜென்சி ஆட்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த ஏழு வருடங்களாக அந்த நடைமுறை இல்லை. இதுபற்றி புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம்’’ என்றார் அவர்.
சின்ன படம், பெரிய படம் என்பதில் சென்சார் பாரபட்சம் காட்டுகிறது, தணிக்கைச் சான்றிதழ் தருவதற்காக பணம் வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
‘‘படத்தின் கதை, காட்சி அமைப்புகள், வசனங்களே அந்தப் படத்திற்கான சான்றிதழை தீர்மானிக்கிறதே தவிர நாங்கள் பாரபட்சம் காட்டுவதில்லை. சின்ன படங்களில்தான் அதிகமான செக்ஸ் காட்சிகள் இருக்கிறது தெரியுமா? தயாரிப்பாளர் யார் என்பதை வைத்தோ, பணம் வாங்கிக்கொண்டோ நாங்கள் செயல்படுவதில்லை. முன்பு தயாரிப்பாளர்களுக்கும், சென்சார் போர்டுக்கும் இடையே இடைத்தரகர்கள் இருந்திருக்கலாம். அவர்களிடம் பணம் கொடுத்து யாராவது ஏமாந்திருக்கலாம். ஆனால் நான் பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளாக அந்தத் தவறுகள் நடைபெறுவதில்லை.
இரண்டு லட்சம் ரூபாயில் படம் எடுத்த ஒரு தயாரிப்பாளர், 40 ஆயிரம் ரூபாய் சென்சாருக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் சொன்னார். அது பொய்யான குற்றச்சாட்டு. ஒரு படத்தின் நீளத்தைப் பொறுத்து 10 ஆயிரம் ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை சென்சார் போர்டுக்கு கட்டவேண்டும். நலிந்த சினிமா கலைஞர்களுக்கான நிதிக்காக ரூ.10 ஆயிரம் கொடுக்கவேண்டும். எல்லாம் சேர்த்து ரூ.25 ஆயிரம் வரை மட்டுமே செலவாகும். இதற்கு மேலான தொகையை யாருக்கும் தரவேண்டியதில்லை. கொடுத்துப் பழகியவர்களுக்கு நேர்மையானவர்கள்கூட குற்றவாளியாகத்தான் தெரிவார்கள்.
ஒவ்வொரு படத்திலும் நாங்கள் எந்தெந்த காட்சிகளை நீக்கினோம், என்னென்ன வசனங்களை நீக்கினோம் என்பது எங்கள் இணையதளத்தில் தெளிவாக இருக்கிறது. சந்தேகம் இருப்பவர்கள் பார்த்துக் கொள்ளலாம்...’’
‘‘சில படங்களில் ஆபாசமான கெட்ட வார்த்தைகள் வருகிறதே... ‘கடல்’ படத்தில் கூட ஒரு வார்த்தை வருகிறதே?
‘‘அது படத்துக்கு அவசியப்பட்டதால் விட்டோம்!’’
- அமலன்
படம்: ஆர்.சந்திரசேகர்
படத்தின் கதை, காட்சி அமைப்புகள், வசனங்களே அந்தப் படத்திற்கான சான்றிதழை தீர்மானிக்கிறதே தவிர நாங்கள் பாரபட்சம் காட்டுவதில்லை. சின்ன படங்களில் தான் அதிகமான செக்ஸ் காட்சிகள் இருக்கிறது தெரியுமா?