மீண்டும் தொடங்கிவிட்டது ‘கானா’ சீஸன். இந்த முறை கோடம்பாக்கத்தை கலக்கிக் கொண்டிருப்பவர் ‘கானா’ பாலா. ‘அட்டகத்தி’யில் ‘ஆடி போனா ஆவணி’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் ‘லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன்’ என்று ஹிட்டுக்களை குவிக்கிறது இவரது கானா பேனா. ‘சேட்டை’ படத்தில் பாலா பாடியிருக்கும் காதல் கானாவும் இசைப் பிரியர்களை ஈர்த்திருக்க, நமக்காக ஒரு காதல் கானா கேட்டோம் அவரிடம்...
‘‘எதைத்தான் கண்டுட்ட நீ புதுசா
எங்கிட்ட இல்லாதது
பெருசா பெருசா
எதுக்குடி மாறிட்ட நீ தினுசா
எங்கூட பழகுனது பழசா பழசா
வாடி என் கிட்ட... பண்ணாத சேட்ட
மாத்தாத ரூட்ட... பூட்டாத கேட்ட
நீ
பார்த்துட்ட துட்டதான்...
வரமாட்ட கிட்டதான்
அடி நீதாண்டி ஒஸ்தி பொண்ணா
அட நான்தானே டஸ்டு பின்னா?’’ என்று கார் சீட்டில் தாளமிட்டு ‘சேட்டை’ கானாவை வழிய விடும் பாலாவுக்கு ஆர்கெஸ்ட்ராவெல்லாம் தேவையே இல்லை போலியிருக்கிறது.

‘‘பிரதர்... பெரும்பாலும் நம்மகிட்ட லவ் ஃபெயிலியர் பாட்டுதான் ஸ்டாக் இருக்கும். ஆனா, அதுலயும் சில மெசேஜ் சொல்லுவேன்’’ என தொண்டை கனைத்துத் தொடங்குகிறார் அடுத்த கானாவை.
‘‘ஆள் இவ பியூட்டி... அழகு
கண்ணாடி
ஃபைன் குவாலிட்டி உன்
பர்சனாலிட்டி
பார்க்க பார்க்க வந்ததம்மா லவ்வுதானடி
உன் பார்வையால பதில சொன்னா யெஸ்சுதானடி
வயசு பையன
நைசு பண்ணுற
காதலிக்கிறேன் பின்னால சுத்துறேன்...’’ என இடைவெளி விட்டு இன்னொரு கானாவிற்குத் தாவுகிறார்...
‘‘பெண்ணே நீ திருந்தி வா நிரந்தரமா
நீ லவ் பண்ண ஆளா இல்ல
நான் ரொம்ப நல்ல பிள்ள
என் மனமோ வெள்ள - அடிக்கடி
செல்லுல கொடுக்காதே தொல்ல
கண்ட கண்ட பசங்களோட சிரித்துப் பேசி
காதலனை மாற்றுவது உனக்கு ஈசி
உன்னப் பத்தி தூங்கும்போது
நீயே யோசி
உன்னைவிட மேலு
அத்த பொண்ணு ரோசி
நான்தான் வீட்டுக்கு மூத்த பிள்ளை - என்
தாய் தந்தை சொல்லை மீறி
நடந்ததில்லை
உனைப் போல பெண்ணை நானும் கண்டதில்லை
உன் நடவடிக்கை எங்கம்மாவுக்கு பிடிக்கவில்லை’’ என முடிப்பவரிடம், ‘‘உங்களுக்கு லவ் ஃபெயிலிரா?’’ என்றால், ‘‘எனக்கா... லவ்வா...?’’ எனச் சிரிக்கிறார்.

‘‘கானாதான் பிரதர் நமக்கு லவ்வரு. அதைத் தவிர யாரையும் நான் லவ் பண்ணதில்ல. சென்னை பிரெசிடன்ஸி காலேஜ்ல படிக்கிறப்போ செகரெட்டரியா இருந்திருக்கேன். அப்போ இருந்தே சோஷியல் சர்வீஸ்தான் பிடிக்கும். அதனால பொண்ணுங்க பின்னாடி சுத்தினதில்ல. புளியந்தோப்பு தாண்டி கன்னிகாபுரம் பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்க. அடித்தட்டு மக்கள் வசிக்கிற பகுதி. ஆனா, அந்த மக்கள்கிட்டதான் ரசனையும் ஜாஸ்தி. பாட்டுலயும் படிப்புலயும் என்னை வளர்த்தெடுத்த ஏரியா அது. பி.எல் படிச்சிருக்கேன். ஏழை மக்கள் பிரச்னைக்காக இலவசமாவே வேலை பார்க்கறேன்.
கானாதான் நமக்கு பொழுதுபோக்கு. இத யாரும் சொல்லிக்கொடுக்கல. கடவுள் அருளால தானா வந்தது. ‘பிறக்கும்போதும் அழுகின்றான்... இறக்கும்போதும் அழுகின்றான்...’னு பாடின சந்திரபாபுதான் சினிமால எனக்கு மானசீக குரு. மனுஷன் எவ்வளவு பெரிய விஷயத்தை ரொம்ப ஈஸியா சொல்லிட்டு போயிருக்கான்!’’ என்னும் பாலா,
‘‘ஆறு அடி வீடு
அதன் பேரு சுடுகாடு
அங்க போனா
திரும்பி வர முடியாது
கொஞ்சம் நாளானா
இருக்கும் இடம் தெரியாது...’’ என மனம் கனக்க தத்துவ கானாவும் பாடுகிறார்.
இயக்குனர் பாலா, வெற்றிமாறன், என முன்னணி இயக்குனர்களின் படங்களில் பிஸியாக இருந்தாலும் கன்னிகாபுரம்
மக்களைப் பிரிந்து கோடம்பாக்கத்தில் குடியேறும் ஐடியாவே இல்லையாம் இவருக்கு.
கானா இருக்கும் இடத்துக்கு கோடம்பாக்கம் வரும்!
- அமலன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்