‘காணக் கண்கோடி வேண்டும்’ என்பார்கள். அதை நிரூபிக்கும் வண்ணம் அமைந்திருந்தது 4ம் வகுப்பு படிக்கும் விஷ்வக்சேனனின் ‘பறவைகள் பலவிதம்’ போட்டோ ஆல்பம்.
- அறச்சலூர் அன்பழகன், சென்னை-42.
மாஸ் ஹீரோக்களோடு நடிக்க நினைக்கலாம்... அதற்காக உடுக்கை இடையழகி அஞ்சலி, நம்ம ஹன்சிகா போல பம்ப்ளிமாஸ் ஆக நினைக்கலாமா? ‘சேட்டை’ படத்தில் அவர்கள் இருவருக்கும் சபாஷ், சரியான போட்டிதாங்கோ!
- ஆர்.பால்பாண்டி, திருப்பூர்.
குழந்தைப் பேறு அமையப்பெறாத தம்பதியர்க்கு ‘வாடகைத் தாய்’ ஒரு வரப்பிரசாதம்தான். ஆனால், இச்சேவை செய்யும் சகோதரிகளுக்கு சரியான ஊதியம் கிடைக்கப் பெறாமல் இடைத்தரகர்கள் உறிஞ்சுவது ஈவிரக்கமற்ற செயல்!
- அ.கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி.
‘சொய்ங்... சொய்ங்...’ பாடல் புகழ் மகிழினிக்கு அந்த ஒரே பாடலால் பிரிந்த உறவுகள் கூடியதும், கிடைக்காத வீட்டு மனைப் பட்டா கிடைத்ததும் உச்ச ஆச்சரியம்! சினிமா ஒரு மேஜிக் என்பது உண்மைதான்.
- முத்தையா தம்பி, மஞ்சக்குப்பம்.
அட்ரா சக்கை... அட்ரா சக்கை... கவுண்டமணி புது டைரக்டர் ஒருத்தருக்கு கால்ஷீட் கொடுத்துட்டாரா! ங்கொக்கமக்கா... இந்த ரெண்டாவது இன்னிங்ஸால மத்த காமெடி நடிகர்களுக்கு ஆப்புதான்!
- எல்.சார்லஸ், புதுச்சேரி.
பத்து தலைமுறைகளுக்கும் சொத்து சேர்க்க நினைக்கும் திரைக் கலைஞர்களுக்கு மத்தியில், தன் சம்பாத்தியத்தை திரும்ப சினிமாவுக்கே செலவழிக்கும் நிஜக் கலைஞன் கமலை தமிழர்கள் காப்பாற்ற வேண்டாம்; காலை வாராமல் இருந்தாலே போதும். அவர் தன் லட்சியத்தை எட்டிவிடுவார்!
- அ.சுகுமார், காட்டுக்கானூர்.
‘ஒரு தலைராகம்’ ரூபாவின் ரூபம் மாறவே இல்லை. அன்று போலவே இன்றும் இருக்கும் ரூபாவுக்கு அதற்குள் அம்மா வேடம் வேண்டாம். அக்கா, அண்ணி என்று படிப்படியாக செல்வதே சரி! இதுதான் இந்த ரசிக நாட்டாமைகளின் தீர்ப்பு!
- கலைப் ப்ரியா, வேலூர்.
அமெரிக்காவின் ‘சன்சிட்டி’ முதியவர்கள், ‘இளமை ஊஞ்சலாட’ சந்தோஷமாக இருப்பதைப் படித்ததும், பெருமையாக இருந்தது. கூடவே நம்மூரை நினைத்து பெருமூச்சு விடத்தான் முடிகிறது.
- வரலட்சுமி முத்துசாமி, கிழக்கு முகப்பேர்.
புத்தகத்தில் பாம்பின் படத்தைப் பார்க்கும்போதே நமக்கு ஆழ்மனம் அலறுகிறது. போதைக்காக அதை எப்படித்தான் நாக்கில் கொத்த விடுகிறார்களோ! கண் எதிரே பாம்பு சீறியது போன்ற அதிர்ச்சியை இக்கட்டுரை ஏற்படுத்தி விட்டது!
- எஸ்.ரங்கசாமி, சிவகங்கை.
(அந்தர மனிதர்கள் - அடுத்த இதழில்!)