ராசி என்பது அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றியது. நீங்கள் பிறக்கும்போது குளிர் காலமா, வெயில் காலமா... தென்றல் வீசியதா, கோரப் புயலா... என நிகழ்வுகளைப் போன்றது. தற்செயலாக ஒருவரை யாரோ அறிமுகம் செய்து வைக்கிறார்கள். கைகுலுக்குகிறோம். பேசுகிறோம். சிரிக்கிறோம். நண்பரின் நண்பர் என்பதால் அவர் உங்களுக்கும் நண்பரே. ஆனால் அவர் நல்லவரா, கெட்டவரா, அவரின் பின்புலம் என்ன என்று எதுவுமே உங்களுக்குத் தெரியாது. அதையெல்லாம் ஆராய்ந்து நட்பைத் தொடரச் செய்வதுதான் லக்னத்தினுடைய வேலை. ராசி என்பது கண்ணால் பார்ப்பது, காதால் கேட்டு முடிவுக்கு வருவது. ராசி என்பது உடலோடு முடிந்து போவது. அது நகரும் மேகம். அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். ஆனால், லக்னம் என்பது உடலின் இயக்கங்களை முழுவதுமாகக் கட்டுப்படுத்துவது. உயிராகவே இருப்பது.
ராசி என்பது உடலோடு சேர்ந்த மன இயக்கங்களைப் பற்றிக் கூறுவது. ஆனால் லக்னம் உடலையும் மனதையும் ராசியின் ஆளுமையையும் மீறி கட்டுப்படுத்துவது. உடலையும், மனதையும் ஒரு கட்டத்திற்குமேல் அனுமதிக்காமல் நெறிப்படுத்துகிறது. முப்பிறவிகளின் நல்லது கெட்டதுகளையும் தாங்கிக் கொண்டு, இப்பிறப்பின் எச்சங்களையும் சுமந்து கொண்டு, அடுத்த பிறவிக்கும் ஒருவரை லக்னம் தயார்படுத்துகிறது.
சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி என எத்தனை பெயர்ச்சிகள் வந்து பெயர்ந்து போனாலும், யோக காலம் என்று வந்தால்தான் வாழ்க்கை கோலாகலமாக மாறும். அந்த யோக காலத்தை லக்னத்தை வைத்தே தீர்மானிக்க முடியும்.
ரிஷப ராசிக்காரர்கள் உரக்கப் பேசுவார்கள். எதிலும் அவசரம் காட்டி கொஞ்சம் முந்திரியாக முந்திக் கொள்வார்கள். ஆனால், ரிஷப லக்னக்காரர்களான நீங்கள் மென்மை காட்டுவீர்கள். உங்கள் முறை வரும்வரை காத்திருந்து கருத்தை தெரிவிப்பீர்கள். ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் ரகசியங்களைத் தேக்கி வைத்து எங்கேயாவது ஓரிடத்தில் வெளிப்படுத்துவார்கள். ரிஷப லக்னத்தில் பிறந்த நீங்கள் நெருக்கடி நேரத்தில் கூட, நெருங்கியவர்களிடம்கூட எதையும் வெளியிட மாட்டார்கள். குணம் ஒன்றாகத்தான் இருக்கும். அதை வெளிப்படுத்தும் விதங்கள் வெவ்வேறாக இருக்கும். மனதின் உறுதித் தன்மையையும், நீடித்து நிலைக்கின்ற திறனையும் லக்னம்தான் கொடுக்கும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் எத்தனை மாறினாலும், உங்களுடைய தனித்தன்மை குன்றாமல் லக்னம் பார்த்துக் கொள்ளும். ஒருவர் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறார் எனில், லக்னாதிபதி மிகவும் வலுவுள்ளவனாக இருக்கிறான் என்று பொருள். ராசிக்குள் ஏதேனும் பகை கிரகங்கள் வந்து உட்கார்ந்தால் அப்படியே முடங்கிப் போகச் செய்யும். ஆனால், லக்னத்தை அத்தனை சீக்கிரம் எவராலும் அசைக்க முடியாது.
உங்களுக்கு யோகாதிபதிகளாக சூரியன், சனி, சுக்கிரன், புதன் என்று நால்வரும் வருகிறார்கள். ஆனாலும், அதில் முக்கியமாக சூரியனும் சனியும்தான் முடிந்தவரை உதவுகிறார்கள். சனி பகவான் பாக்கியாதிபதியாகவும், ஜீவனாதிபதியாகவும் வருகிறார். இங்கே ஒரு சிறிய விஷயத்தை கவனிப்போம். ரிஷப லக்னத்தை ஸ்திர லக்னம் என்பார்கள். இந்த ஸ்திர லக்னத்திற்கு பாதகாதிபதியே பாக்கியாதிபதிதான். ஆனால், பத்துக்கு உரியவராக சனி வருவதால், அந்த பாதகாதிபத்தியம் அடிபட்டுப் போய்விடுகிறது. அதாவது சனியின் ஆதிபத்தியம் அடிபட்டுப் போய் யோகாதிபத்தியமாக அது வேலை செய்கிறது.
ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன் ஆவார். இவரே ஆறாம் இடமான சத்ரு ஸ்தானத்திற்கும் அதிபதியாக வருகிறார். அதனால், லக்னாதிபதியே அவ்வப்போது தவறான பாதைக்கும் அழைத்துப் போகும் நிலைமை வரும். பெரிய இலக்குகளின் மீது குறி வைத்தாலும், சின்னச் சின்ன ஆசைகளைத் தந்து உங்களை இலக்குகளை உடனடியாக அடைய விடாமல் தடுத்து விடுவார். அதனாலேயே உங்களுக்கு லக்னாதிபதியான சுக்கிரன் பாவியாகவும் ஆகிறார். இப்படி லக்னாதிபதி பாவியானால் எந்தவொரு சுகத்தையும் எளிதாக கிடைக்கச் செய்ய மாட்டார். ‘‘அப்பா ரொம்ப பாசமானவர். ஆனா, எஞ்சினியரிங் சீட்டை கூட வாங்கித் தரமுடியாத சூழ்நிலையில இருந்தார்’’ என்பது போல இருக்கும். ‘‘என் வாழ்க்கையில நானே அடிபட்டு, உதைபட்டு கஷ்டப்பட்டு ஒவ்வொரு கட்டமா மேல வந்தேன்’’ என்கிறவர்கள் உங்களில் நிறைய. ‘‘எங்க அண்ணன் ரொம்ப நல்லவர். எனக்கு உதவி செய்யணும்னு ஆசைப்பட்டார். ஆனா, கல்யாணம் முடிஞ்சதும் எந்தத் தொடர்பும் இல்லை’’ என்பது போல, திருமணத்திற்குப் பிறகு மூத்த சகோதரர்களின் வாழ்க்கை மாறிப்போகும். இப்படி பிரச்னைகளால் உலக அனுபவங்களைக் கொடுத்து வாழ்க்கையை மாற்றுபவராக சுக்கிரன் விளங்குகிறார். சுக்கிர தசை, சுக்கிர புக்தி, பரணி, பூரம், பூராடம், வெள்ளிக்கிழமை, 6, 15, 24 போன்ற தேதிகளில் சற்றே கவனமாக நடந்து கொள்வது நல்லது. புது முயற்சிகளை இந்த நேரங்களில் மேற்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.

அடுத்த யோகாதிபதியான புதன் உங்களுக்கு பூர்வ புண்ணியாதிபதியாக இருக்கிறார். இவரும் முக்கியமானவர்தான். குழந்தை பாக்கியம், பூர்வீகச் சொத்து, தாய் மாமன், கல்வி, தனம், வாக்கு என்று எல்லா விஷயங்களையுமே உங்களுக்கு இவர்தான் தீர்மானிக்கிறார். சில பழைய நூல்கள் உங்கள் லக்னத்திற்குரிய மிதுன புதனான இரண்டாம் வீட்டை சுபத்தன்மை பெற்றதாகச் சொல்லவில்லை. ஆனாலும், எந்த நல்லது உங்களுக்கு நடந்தாலும் அதற்கு மறைமுகக் காரணமாக இந்த புதனே செயல்படுகிறார். இதை எவராலும் மறுக்க முடியாது. நல்ல செயல்களுக்கான எண்ணங்களை இதுவே வித்திடுகிறது. மேலும், உங்கள் செயல்களும் திறமைகளும் நல்ல பலனைத் தருவதற்கும் இவரே காரணமாக அமைகிறார். பொதுவாக உங்களின் கல்விக்கும், வித்தைக்கும் உரியவராக, வினையூக்கியாக புதனே செயல்படுகிறார். எனவே புதன் தசை, புதன் புக்தி, புதன் அந்தரம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, 5, 14, 23 போன்ற தேதிகளில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
புதனின் பூரணமான நேர்மறைக் கதிர்வீச்சை நீங்கள் பெற வேண்டியது அவசியம். அதற்கு, தாய் மாமன் மற்றும் தாய் வழி உறவினர்களுக்கு உதவுங்கள். ஏழைப் பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தை செலுத்துங்கள். பழைய பள்ளியை புதுப்பிக்க உதவுங்கள். மனநலம் குன்றியவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள். உணவில் பச்சைப் பயறு, வெண்டைக்காய் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், ஆத்மகாரகன், பிதுர்காரகனான சூரியன் அனைத்து சௌபாக்கியங்களையும் அள்ளித் தரும் சுகாதிபதியாக, நான்காம் வீட்டிற்கு அதிபதியாக வருகிறான். லக்னாதிபதியான சுக்கிரன் உங்களை மிளகாயை கடிக்க வைத்து அது காரம் என்று அனுபவத்தால் உணர வைக்கிறார்; ஆனால் சூரியனோ, மூத்தோர் சொல், முதுமொழிகள், நல்ல நூல்களின் மூலமாகவே சகல அனுபவத்தையும் உங்களுக்குத் தந்து விடுகிறார். ‘‘சின்ன வயசுலயே இவ்ளோ மெச்சூரிட்டியா யோசிக்கறாரே’’ என்பதுபோல பெயரெடுக்க வைப்பார். பட்டுத் திருந்த வைப்பவர் சுக்கிரன்; ஆனால், ‘பிறர் படுவதைப் பார்த்தே புரிந்து கொள்’ என்பவர்தான் சூரியன்.
உங்களின் சுகமான வாழ்க்கையை இவர் தீர்மானிப்பதால், சூரியன் உங்களின் ஜாதகத்தில் நன்றாக அமைந்திருக்க வேண்டியது முக்கியமானதாகும். இல்லையெனில் ‘வீடு வாங்கலாம்’ என்று அட்வான்ஸ் கொடுக்கப் போனால், வேறு யாராவது முந்திக் கொண்டு விடுவார்கள். அவசரமாக பஸ்ஸில் ஏறினால், பாதி வழியில் பஞ்சர் ஆகும். ஆசையாக புது வண்டி வாங்கினாலும், அதில் ஓரமாக சிறு சத்தம் இருந்துகொண்டே இருக்கும். சற்று ஏறிய நெற்றியும், அடிக்கடி முடி உதிர்தலும் தவிர்க்க முடியாததாக மாறும். பற்கள் வரிசையாக இல்லாமல் இருக்கும். பற்களில் அவ்வப்போது ஏதேனும் பிரச்னைகள் வந்து போய் கொண்டிருக்கும். இப்படி சூரியன்தான் உங்களின் வீடு, வாகனம், சுகங்களை தீர்மானிக்கிறான். எல்லாவற்றையும் விட சூரியன்தான் தாய்க்குரிய ஸ்தானத்தையும் தீர்மானிக்கிறான். ரிஷப லக்னத்தில் நிறையபேர் தாயாரையே தெய்வமாகக் கொண்டிருப்பார்கள். சூரியன் சரியில்லையெனில் தாயை விட்டுப் பிரிந்துபோய் படிக்க வேண்டியிருக்கும்.
உங்கள் சொந்த ஜாதகத்தில் சூரியனை பலப்படுத்தவும், சூரியனால் கிடைக்கும் நேர்மறை பலன்களைப் பெறவும், பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைக்கு உதவுங்கள். முடிந்தால் தத்து எடுத்தும் வளர்க்கலாம். இதய நோயாளிகளுக்கான மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். பார்வை இழந்து தவிப்போருக்கு கண்ணாடி வாங்கிக் கொடுங்கள். கண் தானம் செய்யுங்கள். உணவில் அவ்வப்போது கேரட், பப்பாளி, நெல்லிக்காய், விளாம்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
சனிதான் உங்களுக்கு நீடித்த உத்யோகம், சமூகத்தில் அந்தஸ்து, பெரிய பதவிகளில் அமர்த்துதல் என்று எல்லாவித பாக்கியத்தையும் தருகிறார். புதன், சுக்கிரன், சூரியன் போன்றோர் உங்களைக் கைவிட்டாலும், சனி ஒருக்காலும் உங்களை விடமாட்டார். அவர் ஏதேனும் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு தன்னுடைய தசையோ, புக்தியோ, அந்தரமோ வரும்போது வெளுத்து வாங்கி விடுவார். பார்ப்பதற்கு நாலு முழ வேட்டியோடு இருந்தாலும், மாநிலத்திலேயே உயர்ந்த செல்வாக்குள்ள மனிதராக உங்களை மாற்றப் போகிறவரே சனிதான். உங்களுக்கு எந்த தசை நடந்தாலும் சரிதான்... அதில் சனி புக்தியோ, அந்தரமோ வந்தால் பலன்களை அள்ளி வீசுவார். பூசம், அனுஷம், உத்திரட்டாதி, 8, 17, 26 போன்ற தேதிகள், சனிக்கிழமை போன்றவை உங்களுக்கு எப்போதும் அதிர்ஷ்டத்தை தரும். உங்கள் ஜாதகத்தில் சனியை பலப்படுத்த முதியோர்களுக்கு உதவுங்கள். சாலை விபத்தில் சிக்கிக் கொள்வோருக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள். வேலையின்றி தவிப்பவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுங்கள். மாற்றுத் திறனாளிக்கு ஏதேனும் ஒரு விதத்தில் உதவுங்கள். ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துக்களை மீட்க உதவுங்கள். மாங்காய், கத்தரிக்காய், அத்திக்காய், கருணைக் கிழங்கு. சேப்பங் கிழங்கு, கருப்பு திராட்சை சாப்பிடுங்கள்.
உங்களுக்கு நல்ல நேரமோ, கெட்ட நேரமோ... எது நடந்தாலும் நன்மையே நடக்கச் செய்வது என்பது இறுதியில் இறைவன் கைகளில்தான் உள்ளது. அதிலும் இயல்பாகவே சுகவாசியான நீங்கள் இன்னும் சுகமான வாழ்க்கையை வாழ வேண்டுமெனில் திட்டக்குடி எனும் தலத்திலுள்ள சுகாசனப் பெருமாளையும் வேதவல்லித் தாயாரையும் முடிந்தபோதெல்லாம் தரிசியுங்கள். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் தொழுதூரிலிருந்து 13 கி.மீ தொலைவிலும், விருத்தாசலத்திலிருந்து 32 கி.மீ இத்தலம் அமைந்துள்ளது.
(தீர்வுகளைத் தேடுவோம்...)
மாற்றம் தரும் மந்திரம்
ரிஷப லக்னத்தில் பிறந்த நீங்கள், எல்லா நலனும் பெற இந்த ஆண்டாளின் திருப்பாவையை எப்போதும் கூறுங்கள்...
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்ககுடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்