‘சாத்தானா, கடவுளா... யார் பெரியவன்?’ என்ற ஒரு துளிதான் ‘கடலி’ன் கதை. அர்ஜுனும் அரவிந்த்சாமியும் கிறிஸ்தவ குரு மடத்தில் படிக்கும் மாணவர்கள். ஒழுக்கமீறல் காரணமாக, குரு மடத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார் அர்ஜுன். அதற்குக் காரணம் அரவிந்த்சாமி. ‘‘நீ கடவுள்னா நான் சாத்தான்... யார் ஜெயிக்கிறாங்கன்னு பார்ப்போம்’’ என பார்வையில் பகை வீசிச் செல்லும் அர்ஜுனையும், பாதிரியார் அரவிந்த்சாமியையும் சில காலம் கழித்து சந்திக்க வைக்கும் விதியின் வழியே மீதிக் கதை.
ஒரு மீனவ கிராமத்துக்குப் பாதிரியாராகச் செல்கிறார் அரவிந்த்சாமி. அங்கு தான்தோன்றித்தனமாக திரியும் கௌதமை திருத்தி நல்லவனாக்குகிறார். கடத்தல், கொள்ளை என்று கெட்ட வழியில் பணக்காரனாகும் அர்ஜுன், கௌதமை தன் வழிக்கு மாற்றிக் கெடுக்கப் பார்க்கிறார். கன்னியாஸ்திரிகளின் அரவணைப்பில் வளரும் துளசி மீது கௌதமுக்கு காதல். இதற்கு எமனாகவும் வருகிறார் அர்ஜுன். காதல் மலர்ந்ததா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
வழக்கமான கதைதான். ஹீரோ ஒரு பெண்ணைக் காதலிப்பது, அப்புறம் அவள்தான் வில்லனின் மகள் என்று சஸ்பென்ஸ் உடைப்பது... இதெல்லாம் நாங்க நம்பியார் காலத்துலயே பார்த்துட்டோமே! மணி சார், நீங்களுமா? கதை முழுக்கவே கசப்பு மாத்திரை என்பதால்தான், முடிந்தவரை அதில் கௌதம் - துளசி காதல் பூசித் தர முயன்றிருக்கிறார் மணிரத்னம். ஆனால், படம் நெடுகவும் நிறையும் சந்தேகங்களுக்கு பதில் தரத் தவறும் ஒவ்வொரு இடத்திலும் சறுக்குகிறது திரைக்கதை.
படம் முழுமைக்கும் மனதில் நிற்பது கௌதம்தான். அறிமுகப்படத்திலேயே அப்பாவை விட இரு மடங்கு தாண்டிக் குதித்திருக்கிறது இந்த சிங்கக் குட்டி. சர்ச்சில் பொன்வண்ணனால் இழிவுபடுத்தப்படும்போதும், காதல் வந்து புத்துணர்ச்சி பெறும்போதும் நெற்றி மறைக்கும் அழகு தலைமுடியோடு அவர் காட்டும் எக்ஸ்பிரஷனை கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். விடலை வெட்கம், அரவணைப்பு உணர்வோடு கௌதமின் கை பிடித்துக் கொள்ளும் காதல் ஏக்கம், கிறக்கம் என துளசி. அப்படியே கார்த்திக் - ராதாவின் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியாது போல.
மகளைக் கண் முன்னால் கண்டதும் கொல்லத் துணியும் அர்ஜுன் அதை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாமே... ஏன் ஹாஸ்டலில் படிக்க வைக்கிறார்? துளசிக்கு 2 வயதுக்கு மேல் மூளை வளரவில்லை என்கிறார்கள்... அப்படிப்பட்டவரால் பிரசவமெல்லாம் பார்க்க முடியுமா?

நாகர் கோவில் மொழி நடை, பல இடங்களில் புரியாமல் போக்கு காட்டி சோதிக்கிறது. அத்தனை கேரக்டர்களும் மேதாவியாக வேறு பேசுவதால், லேசாய் தலை வலிக்கிறது. ஜெயமோகனை டைரக்டர் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார் போல.
ஏ.ஆர்.ரஹ்மான்தான் படத்தின் இன்னொரு ஹீரோ. ‘ஏலே கீச்சான்’, ‘நெஞ்சுக்குள்ளே’, ‘மூங்கில் தோட்டம்’, ‘அடியே...’ என பாடல்கள் மனதை அள்ளிப் போகின்றன. ஆனால் காட்சிகளோடு பாடல்கள் ஒன்றாதது பலவீனம். உலகப் புகழ் ‘நெஞ்சுக்குள்ளே’ பாட்டை பேக்கிரவுண்டில் ஓட விட்டது கொடுமை சாமி!
மீண்டும் திரும்பியிருக்கிறார் ராஜீவ் மேனன். கடலின் ஆவேசத்தை, சில்லிடும் இரவு அமைதியை கேமராவில் கவிதையாக்கிக் காட்டுகிறார். விட்ட இடத்தைப் பிடிச்சுட்டீங்க பாஸ்! கடலளவு எதிர்பார்த்து தியேட்டருக்குப் போனால், அதே அளவுக்கு ஏமாற்றுகிறார் மணிரத்னம். ஒரிஜினல் கடல் போலவே இந்தக் கடலும் ‘எப்படா கரைக்கு வருவோம்’ என்ற உணர்வைத்தான் தருகிறது.
- குங்குமம் விமர்சனக் குழு