காதல் போச்சே!

விஜிதா ஒரு நிமிடம் தாமதமாக வந்தாள். அதற்குள்ளாகவே ஹரிஷ் பரபரத்தான். ‘‘என்ன விஜி... நான் அரை மணி நேரமா காத்துக்கிட்டு இருக்கேன்!’’
‘‘ஹரி, நீ ஆம்பிளை. காரணம் எதுவுமே சொல்லாமகூட டக்குன்னு கிளம்பிடலாம். நான் அப்படியா..? வீட்ல சந்தேகம் வராத அளவுக்கு நடிக்க வேண்டியிருக்கு...’’ ‘‘சரி, வண்டில ஏறு! படத்துக்கு லேட்டாச்சு...’’ - ஹரிஷ் பதற்றமாக வண்டியை ஸ்டார்ட் செய்தான். ‘‘ஹாய் விஜித்...’’ - வேறு குரல் தன் காதலியை அழைத்தது கண்டு ஹரிஷ் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான். ஒரு ஹேண்ட்ஸம் இளைஞன் விஜிதாவை ஆசை பொங்க பார்த்துக் கொண்டிருந்தான். விஜிதா புரியாமல் நின்றாள். ‘‘நீங்க..?’’ ‘‘என்ன விஜித்... நான் கார்த்தி. ஏன் தெரியாத மாதிரி நடிக்கற? அதான் சொல்லிட்டியே... ‘நமக்குள்ள சரி வராது’ன்னு. ஜஸ்ட் எப்பவாவது வழியில பாக்கறப்ப ஃப்ரெண்டா ட்ரீட் பண்ணக் கூடாதா..?’’ - அந்த இளைஞன் பேச்சுக்கிடையே ஹரிஷைப் பார்த்தான். ‘‘சார் யாரு? புது பாய் ஃப்ரெண்டா?’’ - கேஷுவலாகக் கேட்டான் அவன். விஜிதா மலங்க மலங்க விழித்தாள். ‘‘ஓகே... ஓகே... யு கேரி ஆன்...’’ - சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அவன் ஜென்டிலாக விலகினான். ஹரிஷுக்குள் எரிமலைகள் வெடித்தன. அத்தனை குமுறல்களையும் அடக்கிக் கொண்டு, அமைதியாகக் கேட்டான். ‘‘விஜி... யார் அவன்?’’ ‘‘எனக்குத் தெரியாது ஹரி... இதுவரைக்கும் அவனைப் பார்த்ததே இல்ல. ஏன் என்கிட்ட அப்படிப் பேசினான்னும் புரியல?’’ - விஜிதா சொல்ல, ‘‘இங்க பாரு விஜி... உனக்கு இதுக்கு முன்னாடி எதாவது அஃபையர் இருந்தா சொல்லிடு... ஐ டோன்ட் மைண்ட். ஆனா மறைக்காத!’’ என்றான் ஹரிஷ். விஜிதாவுக்கு சுர்ரென்று கோபம் தலைக்கு எறியது. ‘‘நீ என்னை நம்பல இல்ல?’’ எனக் கோபமாகக் கேட்டாள். ‘‘நம்பறேன்... ஆனா, இவ்வளவு தெளிவா உன் பேரைச் சொல்லி ஒருத்தன் கூப்பிடுறான். என்னைக் கழட்டி விட்டுட்டியேங்கறான். அதை நம்பாம இருக்க முடியல!’’ ‘‘எனக்கு அவனைத் தெரியாதுன்னு சொல்றேன். நான் சொல்றதை நீ நம்ப மாட்டியா?’’ ‘‘உனக்கு நிஜமாவே அவனைத் தெரியாதுன்னா அவன் பேசப் பேச ஏன் சும்மா நின்னே. அவன் சட்டையப் பிடிச்சு கேள்வி கேக்க வேண்டியதுதானே!’’ - ஹரிஷ் பேசிக் கொண்டிருக்கும்போதே அந்த இளைஞன் ஓடி வந்தான். ‘‘ஓ... சாரி மேடம். சாரி, ஜென்டில்மேன். இது டி.விக்காக ‘கேண்டிட் கேமரா’ ஷோ. நீங்க பேசும்போது உங்க பேரைத் தெரிஞ்சுக்கிட்டு சும்மா ஜாலிக்காக பண்ணினோம். மறைஞ்சிருந்து இதை ஷூட் பண்ணியிருக்கோம். அங்க பாருங்க... கேமரா!’’ அசடு வழிய ஹரிஷ் போஸ் கொடுத்து விட்டு விஜிதா பக்கம் திரும்பினான். ‘‘ரோட்ல யாரோ சொல்றதுக்கெல்லாம் சந்தேகப்படற ஒரு ஆளோட பழகினேன்னு நினைச்சா எனக்கு வெட்கமா இருக்கு. குட்பை!’’ என்று கத்திவிட்டு நகர்ந்தாள் விஜிதா.
|