எப்படி வரும் டிரஸ் சென்ஸ்?





‘டிரஸ் சென்ஸ்’ என்கிறார்களே... அதை வளர்த்துக்கொள்ள முடியுமா?
- மு.சந்தோஷ், சென்னை.

பதில் சொல்கிறார் காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கர்
நாலு பேர் நம்மைப் பார்க்கும்போது, பார்ப்பவர் மனதில் நம்மைப் பற்றி நல்ல அபிப்ராயம் ஏற்படும்படி நாம் உடுத்தும் உடை இருக்க வேண்டும் என்பதைத்தான் ‘டிரஸ் சென்ஸ்’ என்கிறார்கள். படித்து, பார்த்து, கேட்டு, அனுபவித்து எப்படி அறிவை வளர்த்துக்கொள்கிறோமோ, அதே போலத்தான் உடை உடுத்துவது தொடர்பான அறிவும். இது நாம் அணிந்திருக்கும் முறை, உடைகளின் மேட்ச்சிங், கலர் என பல விஷயங்களைச் சார்ந்து அமைகிறது. சில நேரம் உடலின் நிறம், ஹேர் ஸ்டைல், அணியும் கண்ணாடி போன்றவை கூட டிரஸ் சென்ஸில் சேரும்.
பொதுவாக வண்ண வண்ண உடைகளை அணிய எல்லோருக்கும் ஆசை. ஆனால் உடை நமது உடலுக்கேற்றபடி அமையுமா என்பதையே முதலில் கவனிக்க வேண்டும். ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இது பொருந்தும். சிலர் ‘ஃபிட்’டான உடை என்றால் ‘டைட்’டான உடை என நினைத்துக்கொள்கிறார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும்.
உடை உடுத்துவதில் நீங்கள் எக்ஸ்பர்ட் ஆக வேண்டுமானால், உடையை விதம்விதமான காம்பினேஷன்களில் அணிந்து பார்த்து பயிற்சி எடுத்துக்கொள்வதுதான் ஒரே வழி. நீங்கள் அணியும் உடை உங்கள் மனதுக்கு மட்டும் பிடித்தால் போதாது, மற்றவர்களிடமும் அபிப்ராயம் கேட்க வேண்டும். மேலும் நண்பர்கள், தெரிந்தவர்கள், ரோட்டில் போவோர் வருவோர் என மற்றவர்கள் உடை அணிந்திருப்பதைக் கவனித்து அதில் உங்களுக்குப் பிடித்ததை உள்வாங்கியும் முயற்சித்துப் பார்க்கலாம். தொடர்ந்து இப்படிச் செய்து வரும் பட்சத்தில் நிச்சயமாக உங்களது டிரஸ் சென்ஸ் அபாரமானதாகத் திகழும்.

என் மகன் நான்காம் வகுப்பு படிக்கிறான். சில நாட்களாக பள்ளி விட்டு வந்ததும், கை, கால், உடம்பெல்லாம் வலிப்பதாகச் சொல்கிறான். சோர்ந்து சோர்ந்து படுக்கிறான். டாக்டரிடம் கேட்டால், நார்மலாக இருப்பதாகச் சொல்கிறார். என்ன பிரச்னையாக இருக்கும்?
- தாமரைச்செல்வி,செங்கல்பட்டு.
பதில் சொல்கிறார் டாக்டர் அகமது (நிறுவனர், ‘ஆப்பிள்’ குழந்தைகளுக்கான ஃபிட்னஸ் பயிற்சி மையம், சென்னை)
குழந்தைப் பருவம் என்பது ஓடியாடி உடல் எலும்புகளுக்கு எனர்ஜி கொடுக்க வேண்டிய பருவம். அதற்காக குழந்தைகளை உடற்பயிற்சி செய்யச் சொல்லி வற்புறுத்த முடியாது. உடற்பயிற்சியின் அவசியமெல்லாம் புரியாத வயது அது. எனவேதான் பள்ளிக்கூடங்களில் விளையாடுவதற்கென்றே நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று, விளையாட்டு நேரத்தை பிள்ளைகளின் பாடப் புத்தகங்கள் விழுங்கி விடுகின்றன. விளையாட்டின் மீது பள்ளிகளுக்கே அக்கறை இல்லை என்கிறபோது பிள்ளைகளை என்ன சொல்ல முடியும்? தேர்வும் மதிப்பெண்ணும் முக்கியமாகி விட்டதன் விளைவு இது.

பள்ளிக் கூடங்களில் மறுக்கப்பட்டதை வீட்டிலாவது அனுமதிக்கிறோமா என்றால் அதுவுமில்லை. வீட்டுக்கு வந்ததும், பாடவாரியாக டியூஷன். அதை முடித்து வீடு திரும்பி ‘ஹோம் ஒர்க்’ நோட்டைக் கையில் எடுக்கும்போதே பையனுக்குத் தூக்கம் வந்து விடுகிறது. ஒவ்வொரு நாளும் இப்படியே கழிந்தால் பிள்ளைகள் எப்படி உற்சாகமாக இருப்பார்கள்?

மருத்துவர்களிடம் சென்றால், சத்தான உணவுகளைக் கொடுக்கச் சொல்லி பரிந்துரைக்க மட்டுமே செய்வார்கள். சிலர் வேண்டுமானால், மருந்து மாத்திரைகளையும் பரிந்துரைக்கலாம். மருந்து, மாத்திரைகளை பிஞ்சிலேயே அடிக்கடி எடுப்பது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நல்லதா... நீங்களே யோசியுங்கள். மேலும், சோர்வு, அசதி, மந்தம் இவற்றையெல்லாம் வெறும் உணவுப்பழக்கத்தால் மட்டுமே சரிப்படுத்த முடியாது. குழந்தையின் உடலுக்கு அன்றாடப் பயிற்சி என்பது அத்தியாவசியம்.

உங்கள் மகனுக்கு என்ன பிரச்னை என்று இப்போது புரிந்திருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது, டி.வி, வீடியோ கேம் என இல்லாமல், கொஞ்ச நாளைக்கு அவனை திறந்தவெளியில் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை விளையாட அனுமதிப்பதுதான். அல்லது,

அவனுக்கு என்ன விளையாட்டில் ஆர்வம் இருக்கிறதோ அதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுங்கள். சைக்கிள் ஓட்டச் சொல்லுங்கள். இவை போதும், சில மாதங்களிலேயே உங்கள் மகனிடம் மாற்றம் கண்டு மகிழ்வீர்கள்.