காதல் புனிதமானது என்பது உண்மையோ, பொய்யோ... ஆனால் அழகானது. ஒரு காதலனுக்கு, தான் காதலிக்கும் பெண்ணே உலகிற் சிறந்த தேவதை. காதலிக்கும் அப்படித்தான். ஒரு நூலிழையைப் போல விழியின் வழியாக மனசுக்குள் ஊடுருவுகிற காதல், நம் வாழ்க்கையையே அழகாக்கி விடுகிறது.
சரவணனின் கேமரா, காதலால் உருவாகும் அந்த அழகை ஆராதிக்கிறது. ‘‘உலகில் படைக்கப்பட்ட எல்லாமே அழகுதான். பார்க்கும் விழிகள்தான் அதில் வித்தியாசம் காண்கின்றன. என் பார்வையில், இந்த உலகத்தில் அவலட்சணமான மனிதர்களே இல்லை’’ என்கிறார் சரவணன்.
காரைக்குடியைச் சேர்ந்த சரவணன், நாடறிந்த ‘கோத்திக்’ போட்டோகிராபர். ஆவேசம் ததும்புகிற காட்சிகளின் வழியாக மெல்லிய உணர்வுகளைப் பேசு வதுதான் கோத்திக் போட்டோகிராபி. உயிர்கள் மௌனித்திருக்க, விழிகள் உரையாடும் காதல் கலையை சரவணனின் கேமரா ஆவேசம் ததும்பும் அழகியலாக உயிர்ப்பிக்கிறது.

‘‘புகைப்படம் என்பது தொழில்நுட்பம் சார்ந்த விஷயமல்ல. தொழில்நுட்பத்தில் அழகியலுக்கு வேலையில்லை. என்னைப் பொறுத்தவரை புகைப்படத்துக்கும் உயிர் இருக்கிறது. அதை உயிர்ப்பித்து உலவ விடுபவன்தான் புகைப்படக்காரன். நான் படித்தது சிவில் எஞ்சினியரிங். பள்ளி நாட்களில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த அத்தை அளித்த கேமராதான் என் வாழ்க்கையை திசை மாற்றியது. இன்றளவும் அறிவார்ந்தவர்கள் பேசுகிற கேமரா தொழில்நுட்பம் எதுவும் எனக்குத் தெரியாது. ஆனாலும் என்னால் நல்ல படங்களை எடுக்க முடியும்.
நிறைய ஆங்கிலப்படங்கள் பார்ப்பேன். அவைதான் என்னை மாற்று சிந்தனையோடு இந்தத் துறையில் இயங்கச் செய்தன. இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தில் எல்லாரும் புகைப்படங்கள் எடுக்கலாம். பத்து புகைப் படங்கள் எடுத்தால் இரண்டு தேறிவிடும். இது தொழில்நுட்பத்தின் சாகசமே தவிர, புகைப்படக்காரனின் சாதனை இல்லை. என்னைப் பொறுத்தவரை கேமராவைத் தொடுவதற்கு முன்பு மனசுக்குள் புகைப்படம் எடுத்து விடுவேன். என் சோதனை முயற்சிகளுக்கு நண்பர்கள் துணை நின்றார்கள். முகத்தில் கரியைப் பூசி ஒருநாள் முழுதும் அமர வைத்திருப்பேன். சிவப்பு வண்ணத்தைக் கொட்டி வெயிலில் நிறுத்துவேன். எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு என் ஆர்வத்தைத் தூண்டிவிட்டார்கள்.
தொடக்கத்திலிருந்தே காதலை என் களமாக எடுத்துக் கொண்டேன். காதலை என் முன்னோடிகள் பலவிதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். நான் ஏதாவது தனித்துச் செய்ய நினைத்தேன். காதல் என்பது இயல்பானதல்ல. அதீத ஆவேசத்தால் உருவாகும் ஒருவகை உணர்ச்சி. பசுத்தோல் போர்த்திய புலியைப் போல மேலே மென்மையை பூசிக்கொண்டிருக்கிறது. பல கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் காரணமாக இருக்கும் ஆவேச உணர்வு அது. நான் அதையே கருவாக்கினேன். என்னிடம் புகைப்படம் எடுக்க வருகிற காதலர்களையும், தம்பதிகளையும் அமர வைத்துப் பேசுகிறேன். அவர்கள் காதல் தொடங்கிய தருணத்தில் ஆரம்பித்து, இன்று வரையிலான வாழ்க்கையை ஆவேசம் ததும்ப ஒரு சினிமாவைப் போல காட்சிகளாக்கித் தருகிறேன். இந்தியா முழுவதும் என் கேமரா பயணித்துக் கொண்டிருக்கிறது. பல பிரபலங்களுக்கு அவர்களின் சொந்த காதல் வாழ்க்கையை காட்சிகளாக்கித் தந்திருக்கிறேன்.

காதலிப்பவர்க ளால் மட்டுமே அழகை உணர முடியும். காதலின்போது அதுவரை அடைபட்டுக் கிடந்த விழியின் சில நீள அகலங்கள் விரியத் தொடங்கும். அந்தக் கண்ணால் பார்த்தால் எல்லாமே அழகுதான். ஒரு நண்பர்... அவருக்கு லேசாக பல் முன்னே துருத்திக்கொண்டு நிற்கும். புகைப்படம் என்றால் ஓடிவிடுவார். அவரை வற்புறுத்தி ஒரு முழுநாள் புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினேன். சிரித்தால் பல் தெரிந்து விடும் என்பதற்காக வாயை மூடிக்கொண்டார். அவரைச் சிரிக்க வைத்து படமெடுத்தேன். ‘இது நான்தானா’ என்று நெகிழ்ந்து போனார். அப்படியான ஒரு எண்ணத்தால் மனதளவில் முடங்கிப்போன ஒரு பெண், தன் படங்களை பெட்ரூமில் அடுக்கி வைத்துக்கொண்டு ‘நானும் அழகானவள்தானா..?’ என்று அழுதபடியே எனக்கு போன் செய்தார்.
வண்ணமயமான பின்னணி, பின்னணியோடு முரண்படாத ஆடை, எதிர்பார்ப்பை தூண்டும் விழிமொழி, பட்டும்படாத பிணைவு... என காதல் புகைப்படங்களுக்கு பல அவதானங்கள் தேவை. அப்படி எடுக்கும் புகைப்படங்கள்தான் வார்த்தைகளில் சிக்காத தீராக் காதலை காலம் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கும்’’ என்று கவிதையாகப் பேசுகிறார் சரவணன். ‘ஐ 5 கிரியேட்டிவ் ஸ்டூடியோ’ என்ற பெயரில் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் ஒரு புகைப்பட நிறுவனத்தையும் இயக்குகிறார் சரவணன்.
- வெ.நீலகண்டன்