ஒரு ரோஜா வனம்



ஒரு ரோஜா வனம்



நீ நிலவைப் பார்க்கும்போதெல்லாம்
எனக்கு பயமாய் இருக்கிறது
அதைப் பறித்துத் தரும்படி
நீ கேட்டு விடுவாயோ என்றல்ல,
நிலவில் இருந்து யாரேனும்
உன்னைப் பறித்து வரும்படி
ஆள் அனுப்பி விடுவார்களோ என்று.

நகையை யாராவது
சாலையில் கொட்டி விட்டுப் போவார்களா...
நீ கொட்டிவிட்டுப் போகிறாயே
உன் புன்னகையை.

காற்று
தெற்கிலிருந்து வந்தால்தான் தென்றல்.
நீ
எந்த திசையிலிருந்து வந்தாலும்
தென்றல்தான்.

தனி ஒருவனாக
உன்னைக் காதலிக்க
பயமாய் இருக்கிறது...
அதற்காக
துணைக்கு
ஒரு கும்பலை வைத்துக் கொண்டா
காதலிக்க முடியும்?
தயவுசெய்து
உன் அழகின் பரிவாரங்களைக்
கொஞ்சம் அடக்கி வை.

பைரசி பண்ண முடியாத
ஒரே மென்பொருள்
நீதான்.
பாவம் நீ...
இத்தனை கவிதைகளையா
சுமக்க முடியாமல் சுமந்திருப்பாய்
உன் தேகத்தில்.
இரக்கப்பட்டு
அதில் நான் ஒன்றை இறக்கி வைத்தாலும்
பதிலுக்கு இரண்டு கவிதைகளை
நீ தூக்கி வைத்துக் கொள்கிறாய்.

உன்னிடம் காதலைச் சொல்ல
ஒற்றை ரோஜா போதாது...
ஒரு ரோஜா வனம் வேண்டும்.