மாயபுத்தகம்
சொல்லாமல்
வதைபட்டுக் கொண்டிருக்கும் காதல்
உதட்டிலிருந்து உடைபடத் துடிக்கும்
நொடியை தேடிக்கொண்டு...
தயக்க விளிம்புகளில்
என்னைக்
கடந்துசென்ற மௌனங்கள்
பகிர்தல் பதறிப்போதல்
உறைதல் உரிமைமீறல்
எனக்கே தெரியாத இத்யாதிகள்
தொலைந்துபோதலின் தொடக்கமானது
நட்பின் சமையலறையில்
எப்போதும்
காதல்
சமைத்துக்கொண்டிருந்திருக்கிறேன்.
சிநேக சந்திப்புகள் கவிழ்ந்து கிடக்க
வெட்கத்தின் கால்கள் இடறும்.
- இளங்கீரன்
ஒரு பெருவனம் நீ
உன்னில் தொலையும்
சிறு தேன் வண்டு நான்.
முத்தம் குடித்து வளரும்
சக்கரவாகப் பறவை நான்
எப்போதும் பொழியும்
மழை முத்தம் நீ
நீ குளித்துக் கரையேறுகையில்
தொடர்ந்து வந்து
தரையில் துடித்துச் சாகும்
வெள்ளை மீன்
என் காதல்
எந்த இருட்டிலும்
நான் படிக்கும்
மாயப்புத்தகம்
நீ
- லதாமகன்