அமிலத்தில் பூத்த காதல் ரோஜா!





‘காதல் கொள்ளும் மனிதப் பூச்சி... கண்களைக் கொண்டுதான் ருசி அறியும்’ என்று அறிவியல் சொன்ன பாடல் வரிகளையே பொய்யாக்கியிருக்கிறது காயத்ரி - அப்துல்லாவின் காதல். மூன்றரை வயதிலேயே ஆசிட் வீச்சு சம்பவம் ஒன்றில் முகம் முழுதும் கருகிப் போனது காயத்ரிக்கு. அடுத்தவர் பார்க்கக் கூட பயப்படும் தோற்றத்துடன் ஒரு பெண், தன் பருவ வயதோடு எத்தனை போராடியிருப்பாள். ஆனால், காயத்ரியின் மனதை அரவணைக்க வந்த இன்னொரு மனதுக்கு இதெல்லாம் ஒரு குறையாகத் தெரியவில்லை. காதலுக்கு மட்டுமே சாத்தியமாகும் கருணை அது!

‘‘நம்பவே முடியலைங்க. எனக்கும் ஒரு கல்யாணம். அதுவும் காதல் திருமணம்... நான் நினைச்சே பார்த்ததில்ல. இவர் என்கிட்ட காதலைச் சொன்ன அந்த நொடி இன்னமும் கனவு மாதிரிதான் இருக்கு...’’ - அருகில் இருக்கும் கணவரைப் பார்த்து, உணர்ச்சிப் பெருக்கில் உருகுகிறார் காயத்ரி.



‘‘எங்க பூர்வீகம் மதுரை. பிழைப்புக்காக சென்னை வந்த குடும்பம். எனக்கு ஒரே ஒரு அக்கா. அப்பான்னா குடிப்பார்... அடிப்பார்... இதுதான் எங்களுக்குத் தெரியும். எப்பவும் போல ஒரு நாள் குடிச்சுட்டு வந்தவரு, படுத்துக் கிடந்த என் மேலயும் அம்மா மேலயும் ஆசிடை வீசிட்டாரு. துடிதுடிச்சுப் போனோம். அதுல அம்மாவுக்கு ஒரு கண் பார்வையே போற அளவுக்கு மோசமான பாதிப்பு. எனக்கு முகமெல்லாம் கருகி, தோல் சுருங்கிப் போச்சு. அக்கா தப்பிச்சுட்டா. கண்ணைக் கூட மூட முடியல. தூங்கும்போதும் கண் திறந்திட்டே இருக்கும். பள்ளிக்கூடம் போனா பிள்ளைங்க கிண்டல் பண்ணி சேர்க்க மாட்டாங்க. அவங்களைத் தொடக் கூடாது... பக்கத்துல வந்து பயம் காட்டக் கூடாதுன்னு நிறைய வலிகளை அனுபவிச்சுட்டேன். அப்புறம்தான் எங்க பெரியம்மா திருநின்றவூர் பக்கத்துல ஒரு கிறிஸ்டியன் ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டாங்க. அங்க என்கூட படிச்சவங்க எல்லாரும் என்னைப் புரிஞ்சுக்கிட்டாங்க. அந்த மேனேஜ்மென்ட்டே பிளாஸ்டிக் சர்ஜரிக்கு உதவிச்சு. இன்னிக்கும் சிகிச்சை எடுத்துக்கறேன்’’ என்கிற காயத்ரி, தன் வாழ்வில் அப்துல்லா நுழைந்த அந்த நாட்களின் நினைவுகளுக்குள் மூழ்குகிறார்...

‘‘எங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டு, அப்பா தற்கொலையே பண்ணிக்கிட்டார். அம்மாதான் கஷ்டப்பட்டு அக்காவை படிக்க வச்சாங்க. பத்தாவது முடிச்சதுமே அவளுக்குக் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. நான் பிளஸ் 2 முடிச்சப்ப அம்மாவுக்கு முடியலை. நான் ஏதாச்சும் வேலைக்குப் போனாதான் அம்மாவைக் காப்பாத்தலாம்ங்கற நிலைமை. சாலிகிராமத்துல ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்குப் போனேன். அந்தக் கடைக்குப் பொருட்களை சப்ளை பண்றவரா இவர் எனக்குப் பழக்கம் ஆனார்’’ என்று கதீஜா தன் காதல் கணவரை நன்றியுடன் பார்க்க, அப்துல்லா தொடர்கிறார்...



‘‘ஹலோ... இவங்க சொல்றாங்கன்னு ஏதோ தியாகி மாதிரி நீங்களும் என்னைப் பார்த்துடாதீங்க. எல்லாரையும் போல பழகிப் பார்த்து மனசுக்குப் பிடிச்சுதான் நான் காயத்ரியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆரம்பத்துல இருந்தே எனக்கு மார்க்கெட்டிங் தொழில்தான். முதல்ல மூணு வருஷம் நல்ல ஃப்ரெண்ட்ஸா பழகினோம். திடீர்னு ஒரு நாள், ‘வேலை முடிய லேட் ஆகிடுச்சு. நைட் நேரம். வீட்டுக்குக் கூட்டிப் போய் விட முடியுமா’ன்னு கேட்டாங்க. டிராப் பண்ணினேன். அதுக்கப்புறமும் அவங்க மேற் படிப்பு, அது, இதுன்னு என்னால முடிஞ்ச சின்னச் சின்ன உதவிகளைச் செஞ்சேன். அதே மாதிரி எந்த ஒரு விஷயத்துலயும் என்கிட்ட ஐடியா கேப்பாங்க. எனக்கு சரினு பட்டதைச் சொல்வேன்.

காயத்ரியோட குணம் எனக்கு நல்லா தெரியும். பொறுமைசாலி. ரொம்ப மெச்சூர்டா நடந்துப்பாங்க. மத்த பொண்ணுங்க மாதிரி தடாலடியா பேச மாட்டாங்க. இவங்களுக்குப் போய் இப்படி ஒரு நிலைமையானு நிறைய தடவை யோசிச்சிருக்கேன். அப்போ எங்க வீட்டுல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாங்க. காயத்ரி வீட்டுல ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்துக்கிட்டிருக்காங்கன்னு தெரியும். எனக்கு இவ்வளவு தெரிஞ்ச காயத்ரியை விட்டுட்டு நான் ஏன் தெரியாத ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணிச்சு. அதைத்தான் காயத்ரிகிட்ட சொன்னேன்’’ என்கிற அப்துல்லா தன் முடிவில் ரொம்பவே உறுதியாக இருந்திருக்கிறார்.

‘‘சாதாரணமா ஒரு அப்துல்லா வும் காயத்ரியும் லவ் பண்ணினாலே அது பெரிய பிரச்னைதான். இதுல என்னைப் பார்த்தா என்ன சொல்வாங்க? எனக்கு பயத்துல கை, காலெல்லாம் நடுங்கிச்சு. இவர்தான், ‘எல்லாமே நான் பார்த்துக்கறேன்’னு சொன்னார். அவர் வீட்ல சம்மதிக்கல. அதுக்காக வீட்டை விட்டே வெளியேறினார். அந்த நேரத்துல நடிகை சுகாசினி மேடமோட ‘நாம்’ அமைப்பு என்னோட மேற்படிப்பு செலவை ஏத்துக்க முன்வந்திருந்தாங்க. இவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னதும், சுகாசினி மேடமே கூப்பிட்டுப் பேசினாங்க. இவர் மனசு உறுதியா இருக்குன்னு தெரிஞ்சதும், அவங்களே கல்யாணத்துக்கு வாழ்த்து சொல்லி அனுப்பிட்டாங்க. இவர் குடும்பத்துக்கு இதுல சம்மதம் இல்லைன்னாலும் இவர் சமூகம் என்னை ஏத்துக்கத் தயாரா இருந்தது. இந்துவா பிறந்தாலும், கிறிஸ்தவர்களோட வளர்ந்தவ நான். இஸ்லாம்ல இணையுறது எனக்குக் கஷ்டமா இல்ல. ஜமாத்ல பேசி வேண்டிய சடங்குகளைச் செய்தோம். போன மாசம் ஜமாத் முன்னிலையில எங்க நிக்காஹ்வும் நடந்துச்சு’’ என்கிற காயத்ரி, இப்போது கதீஜா.



‘‘மதம் எதுவா இருந்தா என்னங்க? எல்லாமே அன்புதான். என் கண்ணுக்கு இவங்க பேரழகாத்தான் தெரியறாங்க. அப்படி உருவத்தை மாத்திக் காட்டுற சக்தியும் அன்புக்கு இருக்கு. அதைத் தவிர, எங்க கதையில ஒண்ணும் விசேஷம் இல்ல. எல்லாரையும் போல சாதாரண காதல்தான், கல்யாணம்தான். சாதாரண குடும்ப வாழ்க்கை தான்’’ என்கிறார் அப்துல்லா கேஷுவலாக.
அத்தனை சாதாரணமானதா இது?!
- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்