ஆண்மை நீக்கம்





‘‘The impulse of the American woman to geld her husband and castrate her sons is very strong.’’  John Steinbeck, American Writer
ஆண்மை நீக்கம் என்பது அறுவை சிகிச்சை, ரசாயன முறை அல்லது பிற வழிகள் மூலம் ஆணின் விரைகளைச் செயலிழக்கச் செய்தலாகும். இப்படிச் செய்த பின், அவர் கலவியில் ஈடுபட முடியாது. குழந்தை பெறவும் இயலாது. ஆங்கிலத்தில் Castration. ஆண்மை நீக்கப் பெற்றவர்களை ணிuஸீuநீலீ என்பர். இந்த அறுவை சிகிச்சையை Inguinal Orchiectomy என்பர்.

பழங்காலத்தில் மொத்த பிறப்புறுப்பையும் நீக்குவதன் மூலம் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டது. ஆனால், ரத்தப் போக்கால் நிறைய மரணங்கள் நிகழ்ந்தன. விரைகளை மட்டும் நீக்குவது ஒப்பீட்டளவில் பாதுகாப்பு. கி.மு 2281ல் சீனாவில் யூ ஷுன் என்ற அரசன், ஆண்மை நீக்கத்தை குற்றங்களுக்கு தண்டனையாக அறிவித்தான். கி.மு 950ல் ‘மு’ என்ற அரசனின் குற்றவியல் துறை அமைச்சராக இருந்த மார்க்யூஸ் லூ, மரண தண்டனைக்குப் பதிலாக ஆண்மை நீக்கத்தை அறிமுகம் செய்தார். ஷாங் அரச மரபில், போர்க் கைதிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்வது வழக்கத்தில் இருந்தது. கிரிமினல் குற்றவாளிகளுக்கு சீனாவில் அளிக்கப்படும் 5 தண்டனைகளில் ஒன்றாக ஆண்மை நீக்கம் இருந்தது. ஸோவு மரபில், மனைவிக்கு துரோகம் செய்யும் ஆண்களுக்கு இதைச் செய்தனர்.
ஹான் அரச மரபிலும் இந்த தண்டனை தொடர்ந்தது. அரசுக்கு எதிராகக் கருத்து சொன்னதற்காக, சிமா கியான் என்ற பிரபல சீன வரலாற்றறிஞருக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட்டது. மற்றொரு நிகழ்வில் அரசு தஸ்தாவேஜுகளை பிரதி எடுப்பவர்கள் எல்லோரும் கும்பலாக ஆண்மை நீக்கம் செய்யப்பட்டனர். சீனாவில் ஆண்மை நீக்கம் என்பது, பிறப்புறுப்பை மொத்தமாக கத்தி கொண்டு துண்டிப்பதாகும்.

கொரியாவில் நாயை ஏவிவிட்டு, கடித்துக் குதறச் செய்து கொடூரமாக ஆண்மை நீக்கம் செய்தனர். யுவான் அரச மரபு காலத்தில் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டவர்கள் நல்ல விலைக்கு விற்கப்பட்டதால், அறுவை சிகிச்சைக்கு மாறினர்.

3ம் நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்தவத்தைப் பின்பற்றியவர்கள், காம இச்சையைத் தடுக்க ஆண்மை நீக்கத்தை ஓர் உபாயமாகக் கையாண்டனர். பைபிள் புதிய ஏற்பாட்டில் மத்தேயு அதிகாரம் 19, வசனம் 12 இப்படிச் சொல்கிறது. ‘‘தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக் கடவன்.’’ ஆப்ரஹாம் லிங்கனின் கொலையாளியைக் (ஜான் பூத்) கொன்ற அமெரிக்க வீரர் பாஸ்டன் கார்பெட், இந்த பைபிள் வரிகளின் பாதிப்பில் ஆண்மை நீக்கம் செய்துகொண்டார்.



யூத மதம் விலங்குகளுக்கோ மனிதர்களுக்கோ ஆண்மை நீக்கம் செய்வதை தடை விதித்தது. ஆண்மை நீக்கம் செய்த விலங்குகளை கோயில்களில் பலியிட அனுமதி இல்லை. ஆண்மை நீக்கம் செய்த பாதிரிகள், வழிபாடுகள், பலிகள் மற்றும் கொடைகளில் பங்குகொள்ள தகுதியற்றவர்கள்.

பண்டைய எகிப்தில் கள்ளத்தொடர்புக்கு தண்டனையாக ஆண்மை நீக்கம் செய்தனர். 4ம் நூற்றாண்டில் பைஸன்டைன் சாம்ராஜ்யத்தில் ஆண்மை நீக்கத்தை மரண தண்டனைக்கு இணையாகப் பாவித்தார்கள். போரில் எதிரிகளை சித்ரவதை செய்யவும், மனரீதியாகப் பலவீனப்படுத்தவும் இதை ஓர் உத்தியாகக் கையாண்டனர். தோற்ற நாடுகளின் பெண்களை ‘முழுமையாக’த் தமதாக்கிக் கொள்ளவும் அந்நாட்டு ஆண்களுக்கு ஆண்மை நீக்கம் செய்தார்கள். 11ம் நூற்றாண்டில் நார்மன்கள் இத்தாலி மற்றும் சிசிலியின் மீது படையெடுத்தபோது, தோல்வியுற்ற வீரர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்தனர்.

12ம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவில் கற்பழிப்புக்கு தண்டனையாக ஆண்மை நீக்கம் செய்தனர். இங்கிலாந்தில் தேசத்துரோகக் குற்றங்களுக்கு ஆண்மை பறிப்பும், ஒரு கண்ணைப் பிடுங்குதலும் தண்டனையாக இருந்தது. 13ம் நூற்றாண்டில் பிரான்ஸில் ஹோமோசெக்ஸ் குற்றங்களுக்கு இதே தண்டனை. வில்லியம் வாலேஸ் என்ற ஸ்காட்லாந்து போராளி, பிரிட்டனை எதிர்த்துப் போராடிய குற்றத்திற்காக ஆண்மை நீக்கம் செய்து தண்டிக்கப்பட்டார்.

மத்திய காலத்தில் ஜார்ஜியா அரசில் தன் குடும்பத்தினரை பலப்படுத்த வேண்டி, மூன்றாம் ஜார்ஜ் மன்னர், அடுத்து ஆட்சிக்கு வரவிருந்த தன் மருமகன் டெம்னாவுக்கு ஆண்மை நீக்கம் செய்தார். பிரெஞ்சு தத்துவ ஞானி மற்றும் துறவியான பியரி ஏப்லார்ட், அவரது காதலியின் உறவினர்களால் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டார்.

14ம் நூற்றாண்டில் சீனாவில் மங்கோலிய ஆட்சி வெல்லப்பட்டு மிங் அரச வம்சம் ஆட்சிக்கு வந்தபோது, மங்கோலியர்கள் பலருக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட்டது. 18ம் நூற்றாண்டில் மியோ புரட்சியில், சீன தளபதிகள் மியோ ஆண்களுக்கு விரை நீக்கம் செய்தனர்.

16ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ரோமன் கத்தோலிக்க ஆலயங்களில் பெண்கள் ஸ்தோத்திரப் பாடல்கள் பாடத் தடை இருந்தது. அதனால் விடலைப் பையன்களுக்கு இளம் வயதிலேயே - அதாவது, குரல் உடையும் முன் - ஆண்மை நீக்கம் செய்து, அவர்களுக்கு பெண்கள் போன்ற மென்மைக் குரல் வரச் செய்தனர். இவர்களை Castrati   என்றழைத்தனர். இக்குரல்களை ஒபேரா இசையமைப்பாளர்கள் மிக விரும்பிப் பயன்படுத்தினர். ஃபேரினெல்லி, செனெஸினோ, கேரெஸ்டினி ஆகியோர் பிரபல   Castratiகள். 19ம் நூற்றாண்டில் இவ்வழக்கம் தடை செய்யப்பட்டது.
13 நூற்றாண்டுகளாக அடிமை வர்த்தகத்தில் 2.8 கோடி ஆப்ரிக்கர்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேருக்கு ஆண்மை நீக்கம் செய்தனர். எப்படி காளையை விற்கும்போது, அதைக் கொண்டு இனப்பெருக்கம் செய்து விடக் கூடாது என்று விரைகளைச் சிதைத்து விற்பார்களோ, அப்படித்தான் இதுவும். கறுப்பினத்தவருக்கு அடக்க முடியாத காம இச்சை உண்டு என நம்பப்பட்டதும் இதற்கு ஒரு காரணம்.

1778ல் வர்ஜீனியாவில் தாமஸ் ஜெபர்ஸன் கற்பழிப்பு, பலதார மணம், ஓரினப் புணர்ச்சி ஆகியவற்றுக்கு மரணதண்டனைக்குப் பதிலாக ஆண்மை நீக்கத்தைத் தண்டனையாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார். 18ம் நூற்றாண்டில் ஈரானில் அக்கா மொகமத் கான் காஜர், ஸாண்ட் அரச வம்சத்தினரால் விரை நீக்கம் செய்யப்பட்டார். பின் அந்த வம்சத்தின் கடைசி அரசனான லோட்ஃப் அலி கானை போரில் காஜர் வீழ்த்தியபோது, பழி வாங்கும் நடவடிக்கையாக அவனுக்கு விரை நீக்கம் செய்தார்.

1879ல் சீனாவில் புரட்சிக்காரனான யாக்கூப் பெக், அவரது மகன்கள், பேரன்கள் அனைவருக்கும் தண்டனையாக ஆண்மை நீக்கம் செய்யப்பட்டு, அரண்மனையில் அடிமை வேலைக்கு அனுப்பப்பட்டனர். அமெரிக்காவில் போர்க் கைதிகளுக்கும் அடிமைகளுக்கும் விரைநீக்கம் செய்தனர். 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் யூஜெனிக்ஸ் இயக்கம், மனநலம் குன்றியவர்களிடமிருந்து சமூகத்தைக் காக்கும் பொருட்டு அவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்தது. நாஜி ஜெர்மனியில் மனநலமற்றவர்கள், செக்ஸ் குற்றவாளிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள், யூதர்களுக்கு கட்டாய ஆண்மை நீக்கம் செய்யப்பட்டது.

1929ல் டென்மார்க் முதன்
முதலாக அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்வதை சட்டபூர்வமாக்கியது. பின் ஜெர்மனி, நார்வே, பின்லாந்து, எஸ்தோனியா, ஐஸ்லாந்து, லாட்வியா, ஸ்வீடன், செக் குடியரசு நாடுகள் ஆண்மை நீக்கத்தை சட்டபூர்வமாக்கின. தவிர, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, கிரீன்லாந்து ஆகிய நாடுகள் சட்டமியற்றாவிட்டாலும் இதைப் புழக்கத்தில் வைத்திருக்கின்றன. 1899 முதலே அமெரிக்காவில் இது புழக்கத்தில் இருக்கிறது.

செக் குடியரசு பாலியல் குற்றங்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்வதை தண்டனையாக வைத்திருக்கிறது. மறுபடி தவறு செய்யாமல் இயல்பு வாழ்க்கை நடத்த இது உதவியாக இருக்கிறது என கைதிகளே நினைக்கின்றனர். தெற்கு ஆசியாவில் ஆண்களிலிருந்து பெண்ணாக மாறும் ஹிஜ்ராக்கள், ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.

தெற்கு ஆசியா, ஆப்ரிக்கா, கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில்தான் மத, சமூக காரணங்களுக்காக ஆண்மை நீக்கம் செய்வது பரவலாக இருக்கிறது. பாலியல் குற்றங்களுக்கு ரசாயன முறையில் தற்காலிக ஆண்மை நீக்கம் செய்வது பல நாடுகளில் புழக்கத்தில் இருக்கிறது. சமீபத்திய டெல்லி கற்பழிப்புச் சம்பவத்துக்குப் பின் இந்தியாவிலும் இதைச் செய்யலாம் என நம் முதல்வர் உட்பட பலர் பரிந்துரைத்தார்கள். ஆனால், நீதிபதி வர்மா கமிட்டி, ‘இது அரசியலமைப்புக்கும் மனித உரிமைக்கும் எதிரானது’ என நிராகரித்தது.

ப்ரோஸ்டேட் புற்றுநோய் வந்தால், விரைகளை அகற்றுவதையோ ரசாயன ஆண்மை நீக்கம் செய்வதையோ சிகிச்சையாகச் செய்கின்றனர். சில ஏழை நாடுகளில் ஆண்மை நீக்கத்தை கர்ப்பத்தடை முறையாகப் பின்பற்றுகின்றனர். பால்மாற்று அறுவை சிகிச்சையிலும் விரை நீக்கம் முக்கிய இடம் வகிக்கிறது. சமீபத்திய ஆராய்ச்சியில், சிறு வயதிலேயே ஆண்மை நீக்கம் செய்யப்பட்டவர்கள் பிற ஆண்களை விட அதிக ஆண்டுகள் உயிர் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது.

கேன்சர் மற்றும் உயிர் பறிக்கும் நோய்களிலிருந்து காக்கும் சந்தர்ப்பங்கள் தவிர, மற்ற விஷயங்களில் ஆண்மை நீக்கம் என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலே.

ஆண்மை நீக்கம்
அடிமை வியாபாரச் சரக்கானவன்
அதிமதுரக்குரலுடை பதின்மன்
பெண்களைப் புறம்சிதைத்தவன்
போர்முனையில் சிறைபட்டவன்
விவாகத்துரோகம் விழைந்தவன்
விரைப்புற்றினிலே விழுந்தவன்
ஆண்மை பறித்தெறி என்ப விதி.

Stats சவீதா
ரசாயன விரைநீக்கத்துக்குப் பின் 95% பேர் பாலியல் குற்றங்களில் மீண்டும் ஈடு படுவதில்லை.

விரைமுறுக்குப் பிரச்னை கொண்டவர்களில் 34% பேருக்கு ஆண்மை நீக்கம் தேவைப்படுகிறது.

ஜெர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 5 பேருக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்கப்படுகிறது.

1998 முதல் 2008 வரை பத்தாண்டுகளில் செக் குடியரசில் விரைநீக்க தண்டனை பெற்றவர் எண்ணிக்கை 94.