கவர்மென்ட் வேலை

இருக்கிற வேலையையும் உனக்காகத்தான் விட்டேன்...’’ ‘‘அது எனக்குத் தெரியும்!’’ ‘‘அப்புறம் என்ன சாதனா?’’ ‘‘வேலைய விட்டது முக்கியமில்ல... வேலை கிடைக்கறதுதான் முக்கியம்.’’
‘‘உனக்குத் தெரியாததில்லை. நான் எழுதாத எக்ஸாம் இல்ல. போகாத ஆபீஸ் இல்ல...’’ ‘‘ஆனா வேலை கிடைக்கலையே?’’ ‘‘நான் எம்.பி.ஏ படிச்சவன். இருபதாயிரம் சம்பளத்துக்கு பார்த்துட்டு இருந்த வேலைய விட்டுட்டு டிரை பண்றேன். கண்டிப்பா இந்த வருஷம் வேலை கிடைச்சுடும்...’’ ‘‘கிடைச்ச பிறகுதான் நம்ம கல்யாணம்!’’ ‘‘சாதனா... நீ எல்லார்கிட்டயும் விசாரிச்சுப் பாரும்மா. பிரைவேட் வேலைதான் இப்ப எல்லாருமே பார்க்கறாங்க.’’ ‘‘இங்க பாருங்க... கால் வயித்து கஞ்சி குடிச்சாலும் கவர்மென்ட் கஞ்சிதான் குடிக்கணும்.’’ ‘‘சரி சாதனா, நான் முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கேன்!’’ சாதனா அமைதியாக அந்த இடத்தை விட்டுச் சென்ற பின்பும் கிஷோர் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். யாரோ ஒரு தோழியின் காதலன். ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து, அங்கிருந்த நண்பர்கள் சகவாசத்தால் மோசமான பழக்கங்களுக்கு அடிமையாகி, மனைவியை விட்டு வேறு ஒருத்தியோடு ஓடிப்போன சம்பவம் அவளுக்கு ஆழமாக மனதில் பதிந்து விட்டது. அதன் பிரதிபலிப்புதான் இந்தக் கொந்தளிப்பு சாதனாவுக்கு! என்ன செய்வது? கவர்மென்ட் வேலை கிடைப்பது எவ்வளவு சுலபம் இல்லையோ... அது போலத்தான் ஆறு வருஷம் காதலித்த பெண்ணை விட்டுக் கொடுப்பதும் சுலபம் இல்லை! பெட்டிக்கடைகளில்கூட விடாமல் அப்ளிகேஷன் வாங்கி, மத்திய அரசு, மாநில அரசு, பேங்க் என எல்லா தேர்வுகளும் முயற்சி செய்து தோற்றாகிவிட்டது. நண்பர்கள் எல்லோரும் அவனை கேலியாகப் பார்த்தாலும், தன் காதலிக்காக அந்தக் கடைசி முயற்சியையும் செய்யத் துணிந்தான். அன்று மாலை சாதனா கடுங் கோபத்தோடு வந்திருந்தாள். ‘‘கிஷோர், எங்க வீட்ல கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டாங்க. இனிமே காத்திருக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.’’ ‘‘சரி சாதனா!’’ ‘‘என்ன சரி... அப்ப நீ என்னை கல்யாணம் பண்ணிக்கற எண்ணத்துல இல்லையா?’’ ‘‘யார் சொன்னா, நாளைக்கே வந்து பொண்ணு கேட்கறேன்!’’ ‘‘நிஜமாவா... உனக்கு வேலை?’’ ‘‘வேலை வந்துடுச்சு. வேளையும் வந்துடுச்சு.’’ ‘‘அப்படியா?’’
‘‘ஆமாம் சாதனா, நீ எதிர்பார்த்த மாதிரியே கவர்மென்ட் வேலை. இந்தா அப்பாயின்ட்மென்ட் ஆர்டர். டாஸ்மாக்ல சூப்பர்வைசர் வேலை. கவர்மென்ட் வேலைதான் சாதனா, நல்ல சம்பளம். சந்தோஷம்தானே!’’ கையில் இருந்த காகிதத்தை என்னவோ போல் வெறித்துப் பார்த்தாள் சாதனா.
|