பதிலுக்கு பதில்





உங்க பொண் ணை எங்க பையனுக்குக் கட்டி வைக்க பூரண சம்மதம். அதே மாதிரி எங்க வீட்டுப் பொண்ணு மதுமிதாவை உங்க பையன் மாதவனுக்குப் பேசி முடிச்சிடலாமே...’’ - திடீரென்று மாப்பிள்ளை வீட்டார் இப்படிக் கேட்பார்கள் என்று லட்சுமிபதி எதிர்பார்க்கவே இல்லை.

‘‘ஏன் சொல்றேன்னா, வரதட்சணை பிரச்னையே வேண்டாம். ரெண்டு கல்யாணத்தையும் ஒரே நாள்ல அதே மண்டபத்தில் நடத்திடலாம். செலவு மிச்சம்.’’ - மேலும் பேசிக்கொண்டே போனார் பெண்ணின் அப்பா நாராயணன்.
‘‘உங்க பொண்ணோட சம்மதத்தைக் கேட்டீங்களா..?’’
‘‘அவளுக்குப் பிடிச்சதனாலதான் இந்த யோசனையே தோணுச்சு...’’
‘‘எதுக்கும் என் பையனைக் கேட்டுச் சொல்லிடறேனே...’’ - அரை மனதாகக் கூறி விடைபெற்றார்
லட்சுமிபதி.
‘‘இது என்ன வியாபாரமா... பேரம் பேசறதுக்கு? செலவு மிச்சம்ங்கிறதுக்காக இத்தனை வருஷமா நான் லவ் பண்ணின தேன்மொழியைக் கைவிட முடியுமா. என் மனசுல தேன்மொழியைத் தவிர வேற யாருக்கும் இடம் இல்லை’’ - கோபமாகக் கூறினான் மாதவன்.
‘‘டேய்... இது உன் தங்கச்சி வாழ்க்கைடா. அதை நீயே கெடுத்துடாதே! உன்னையும் தேன்மொழியையும் சேர்த்து வைக்கலாம்னுதான் நாங்களும் நினைச்சோம். ஆனா என்ன பண்றது? சந்தர்ப்பம். உன் தங்கச்சிக்கு இதை விட நல்ல இடம் கிடைக்காது. அவளுக்காக நீ இதுக்கு சம்மதிச்சுத்தான் ஆகணும். ரெண்டு கல்யாணத்துக்கும் சம்மதிச்சு தகவல் குடுத்துட்டேன்...’’ - திட்டவட்டமாக அறிவித்த அப்பாவை எதிர்த்து மாதவனால் ஒன்றும் பேச முடியவில்லை.
தேன்மொழியின் செல்போன் சிணுங்கியது.
‘‘ஹலோ!’’
‘‘என்னவோ உன்னோடது தெய்வீகக் காதல். தூய்மையான காதல்... உன்கிட்ட இருந்து மாதவனை பிரிக்கவே முடியாதுன்னு சவால் விட்டியே... நான் நினைச்சா எதையும் சாதிப்பேன். அவன் தங்கச்சி கல்யாணத்தையே சாக்கா வச்சி அவனை என்னோட கணவனாக்கிடப் போறேன். வந்து ஆசீர்வாதம் பண்ணிட்டு, அப்படியே அழுதுட்டுப் போ’’ - செல்போனில் தனது முன்னாள் தோழி தேன்மொழியிடம் பேசினாள் மதுமிதா.
‘‘மாதவன் எனக்குக் கணவராகி ஒரு மணி நேரமாயிடுச்சு. அவர் தங்கச்சிதான் தாலி எடுத்துக் கொடுத்து கல்யாணம் பண்ணி வச்சா. பழனியில் கல்யாணம் பண்ணிக்கிட்டு கார்ல வந்துட்டு இருக்கோம். அப்புறம் இன்னொரு விஷயம்... அவர் தங்கச்சிக்கும் மாப்பிள்ளை பார்த்தாச்சு. என் கணவரோட நெருங்கிய நண்பர். தங்கச்சியோட ஈகோவுக்காக கல்யாணம் கட்டிக்கிற கேரக்டர் இல்லை. சுயமா சிந்திக்கிறவர். அவர் மனசுக்குப் பிடிச்சு கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கார். சீக்கிரமே பெரியவங்க நிச்சயம் பண்ணி அந்தக் கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கும். அண்ணனும் தங்கச்சியும் வந்து வாழ்த்திட்டு அழுதுட்டுப் போங்க’’ - அவள் டயலாக்கையே சொல்லி செல்போனை அணைத்தாள் தேன்மொழி.