மாற்றான் இருவர் இல்லை ஒருவர்கள்! சூர்யா






போர்வைக்குள் என்ன நடக்கிறதென்றே தெரியாத செப்படி வித்தை போல் இயக்குநர் கே.வி.ஆனந்தின் கூடாரத்துக்குள் உலகறியாமல் நடக்கும் வித்தைகள், வெளியே தெரிய வரும்போது விந்தைகளாகி விடுகின்றன. ‘அயன்’, ‘கோ’வில் அடுத்தடுத்து அதிரி புதிரி வெற்றிகளைத் தந்த பின்னர் ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட்டுக்காக இவர் இயக்கி வரும் ‘மாற்றான்’ இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. சுவாரஸ்யத்தின் உச்சமாக ‘மாற்றானை’த் தாங்கி நிற்பது... சூர்யா..!

‘ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள், சிக்கலான ஒரு ஆபரேஷனில் இரண்டு தனித்தனி மனிதர்களாகப் பிரிக்கப்பட்டார்கள்’ என்று எப்போதாவது உலகின் எந்த மூலையில் இருந்தாவது செய்தி வருமே... அப்படி ‘மாற்றானி’ல் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக வருகிறார் சூர்யா. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தாய்லாந்தில் வாழ்ந்த சயாமிய இரட்டையர்களான ‘இங் - சாங்’கின் கதையை யதேச்சையாகப் படிக்க நேர்ந்த கே.வி.ஆனந்துக்கு, அப்படிப் பிறந்த இரட்டையர்களில் இருவரும் வெவ்வேறு எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்கிற சுவாரசியமான கற்பனை தோன்ற, அதன் அடிப்படையில் இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறார். மூன்று வருடங்களாக இந்தக் கதைக்கான திரைக்கதை சாத்தியங்களை இரட்டை எழுத்தாளர்களான சுபாவிடம் பேசி, முழு ஸ்கிரிப்ட்டையும் முடித்திருக்கிறார்.



கடந்த ஆகஸ்ட் தொடங்கி இந்த ஆகஸ்ட் வரை நீண்டிருக்கும் படப்பிடிப்பில் இரண்டு வேடங்களிலும் தனித்தனியாக நடித்துக் கொடுத்திருக்கிறார் சூர்யா. ஜிப்ரான், பாரதி என்று நல்ல விஷயங்களில் நாட்ட மிருக்கும் விமலனாக ஒரு சூர்யாவும், குடி, கூத்து, கும்மாளம் என்று ஜாலியான டைப்பில் அகிலனுமாக இரட்டை எண்ணங்களும் செயல்களும் கொண்ட இருவேறு வேடங்களில் நடிக்கக் கடுமையாகவே உழைத்திருக்கிறார் ஒற்றைச் சூர்யா. இந்த ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் ஒளிவு மறைவில்லாத வாழ்க்கை மட்டுமே படத்தின் செய்தியாக இல்லாமல், இதைத் தாண்டிய சமூகப் பிரச்னை ஒன்றையும் பிரதானமாக வைத்திருக்கிறார் கே.வி.ஆனந்த்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வித்தியாசமான பாடல்கள் வேண்டி, அவரை அழைத்துக்கொண்டு மத்திய தரைக்கடலில் இத்தாலி, ரோம் என்று சுற்றிய ‘க்ரூஸ் ஷிப்’பில் ரூம் போட்டு மூன்று இனிமையான பாடல்களை வாங்கியிருக்கிறார் கே.வி.ஆனந்த். மொத்தம் ஐந்து பாடல்களை பா.விஜய், நா.முத்துக்குமார், விவேகா, தாமரை, மதன் கார்க்கி எழுதியிருக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் தொடங்கி பால்கன் நாடுகளான லாட்வியா, லிதுவேனியா, எஸ்தோனியா என்று வித்தியாசமான லொகேஷன்களில் தொடர்ந்திருக்கிறது. எஸ்.சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவில் இரட்டையர்களுக்கான சி.ஜி. காட்சிகளுக்கு ‘சிவாஜி’, ‘எந்திரனு’க்குப் பணியாற்றிய சீனிவாஸ் மோகன் உழைத்திருக்கிறார்.


ரஷ்யாவுக்கு அடிக்கடி ஷூட் போகும் தமிழ்ப்படங்களுக்கு மத்தியில், ரஷ்ய நடிகைகள் நடிக்கும் முதல் படமாக இது அமைந்துவிட்டது. காஜல் கதாநாயகியாகும் படத்தில் ரஷ்ய நடிகைகள் ஐரீன் மாலீவாவும், ஜூலியா ப்லிஸ்ஸும் நடித்திருக்கிறார்கள். சூர்யாவின் அப்பாவாக மராத்திய நடிகர் சச்சின் கடேகரும், அம்மாவாக தேசிய விருது பெற்ற தாராவும் நடித்திருக்கிறார்கள். படம் பற்றி இப்போதைக்குப் பேசுவதில்லை என்று இறுக்கமாக இருந்த சூர்யாவின் மௌனத்தை படத்தின் டீஸர் வெளியீட்டில் கொஞ்சம் கலைக்க முடிந்தது.

‘‘இந்தப் படத்தோட கதையை 2009லேயே சொன்னார் கே.வி.ஆனந்த். அப்ப இருந்த டெக்னிக்கல் சமாசாரங்களை வச்சு எந்த அளவுக்கு இதை எடுக்க முடியும்னு தயக்கம் இருந்தது. ஆனா இப்ப தொழில்நுட்பம் ரொம்ப முன்னேறிடுச்சு. அதான் இப்ப பண்ணலாம்னேன்...’’ என்றவரிடம், ‘‘இரண்டு கேரக்டர்களுக்கு எப்படித் தயாரானீங்க..?’’ என்றதற்குத் தொடர்ந்தார்.


‘‘பொதுவாவே என்னை ரசிக்கிறவங்க கிட்ட அடிக்கடி பேசி, என்னைப் பத்தி நான் தெரிஞ்சுக்கறது வழக்கம். நான் என்ன மாதிரியான கேரக்டர்ல வந்தது அவங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு கேட்டு சர்வே பண்ணி வச்சிருக்கேன். அதுல பெரும்பாலானவங்க ‘அயன்’ கேரக்டரைத்தான் சொன்னாங்க. அதனால, அந்த இன்ஸ்பிரேஷன்ல அதுக்கு அடுத்தபடியா இதுல அகிலன் கேரக்டர்ல நடிச்சிருக்கேன். ரெட்டையர்கள் கதை எம்.ஜி.ஆர் காலத்திலேர்ந்தே சொல்லப்பட்டாலும், அவர் படத்தில இருந்த பிரமாண்டம், யதார்த்தம், அட்வென்சர் தாண்டி இந்த ஜெனரேஷனுக்கேற்ற விஷயங்களும் இதுல இருக்கு. இன்னைக்கு இருக்கிற சமூகப் பிரச்னையும் இதுக்குள்ளே நேர்மையா கையாளப்பட்டிருக்கு. இதைத் தாண்டி ஆனந்த் சாரோட நக்கல் படம் முழுவதும் இருக்கும்..!’’

‘‘இந்தப் படத்துல இரட்டையரா நடிக்க நீங்க ரொம்ப கஷ்டப்பட்டதா கே.வி.ஆனந்த் சொன்னார். எப்படியெல்லாம் கஷ்டப்பட்டீங்க..?’’
‘‘உண்மையில சொல்லப் போனா இந்தக் கற்பனையை நிஜமாக்க, என்னைவிட அவர்தான் இதுக்கு ரொம்ப மெனக்கெட்டார். இந்தக் கேரக்டரை பொதுவா இரட்டையர்னு சொல்றதைவிட ஒட்டியே இருக்கும் ‘கன்ஜாய்ன்ட் ட்வின்ஸா’ இருக்கிறதால ‘ஒருவர்கள்’னு சொல்லலாம்..!’’
‘‘இரட்டையர்கள் கடைசிவரை ஒண்ணாவே இருப்பாங்களா, பிரிஞ்சிடுவாங்களா..?’’


‘‘இப்பத்தான் படத்தைப்பற்றிப் பேசவே ஆரம்பிச்சிருக்கோம். அதுக்குள்ள கிளைமாக்ஸ் வரை கேக்கறீங்களே..?’’
ஓ... அப்ப அதுதான்
கிளைமாக்ஸா?
- வேணுஜி