நடிகைகளைத் திட்டினேனா?





தென்னிந்திய நடிகைகள் எல்லாம் சாணை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் சனா கானை. விஷயம் ஊருக்கே தெரிந்தது தான். ‘வட இந்திய நடிகைகளை விட தென்னிந்திய நடிகைகள்தான் அதிகம் குடிக்கிறார்கள்’ என்று சனா கான் சொன்னதாக பத்திரிகைகளில் வந்த செய்திதான் பிரச்னையின் மூலம். இது குறித்துப் பல நடிகைகள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்கள். கடந்த வாரம் ஸ்ரேயாவும் தன் பங்குக்கு, ‘சனா கான் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று சொன்னதாக செய்திகள் வந்தன.

ஒரு விழாவுக்காக சென்னை வந்திருந்த சனாவைப் பிடித்து மேட்டரைக் கேட்டதும் குலுக்கித் திறந்த பீர் பாட்டிலாய்ப் பொங்கிவிட்டார். ‘‘எனக்கு மும்பை பழகிய அளவுக்கு சென்னை தெரியாது. ‘சிலம்பாட்ட’த்தில் சிம்புவுடன் அறிமுகம் ஆனதும், ‘அடுத்து நீதான் டாப் ஸ்டார். தமிழில் நீ எங்கேயோ போகப் போறே...’ன்னுதான் என்னை சந்திச்ச எல்லாருமே சொன்னாங்க. பல சினிமாக்காரர்கள் அறிமுகம் ஆனாங்க. அதுல யார் எப்படிப்பட்டவங்க என்பதெல்லாம் எனக்குத் தெரியலை. எல்லாரையும் நம்பியதுல நல்ல ப்ராஜெக்ட்ஸ் விலகிப் போனதுதான் மிச்சம். இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா தமிழையும், தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியையும் ஸ்டடி பண்ண ஆரம்பிச்சிருக்கேன். அதுக்குள்ள இப்படி ஒரு நியூஸ்.

ஒருத்தர் ஒரு ஸ்டேட்மென்ட் சொன்னதா செய்தி வந்தா, அதைப்பத்தி சொன்னவங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்கணுமா இல்லையா..? நான் சொன்னது பொதுவான விஷயம். என்கிட்ட கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‘எந்தப் பழக்கமும் எல்லா இடத்திலும் பொதுவாதான் இருக்குது’ங்கிற அர்த்தத்துலதான் அப்படிச் சொன்னேன். அது நடிகைகளைக் குறிச்சு சொன்னதா செய்திகள் வந்துடுச்சு. தமிழ்ப் படங்கள்ல நடிச்சிருக்க நானும் தமிழ் நடிகைதானே? நான் இருக்கும் இண்டஸ்ட்ரியில் என் சக நடிகைகளைப் பற்றி அப்படி அவதூறு சொல்வேனா..? அது பற்றி பத்திரிகைகளும் சரி, கருத்து சொன்ன மற்றவர்களும் சரி, ‘இப்படிச் சொன்னாயா?’ன்னு என்னை ஒரு வார்த்தை கேட்டிருந்தா அந்தப் பிரச்னை அப்பவே முடிஞ்சிருக்கும்...’’



‘‘சரி... மலையாள ‘கிளைமாக்ஸ்’ல நீங்க சிலுக்கா நடிக்கிற கதையைச் சொல்லுங்க...’’
‘‘ஆமாம்... அது ஒரு சந்தோஷமான விஷயம். ஆனா பலரும் நினைச்சுக்கிட்டிருக்கிற மாதிரி இது ‘டர்ட்டி பிக்ச’ரோட ரீமேக் இல்லை. இதுவரை சிலுக்குங்கிற நடிகையின் வாழ்க்கையில் நடந்த வெளியே தெரியாத நிகழ்ச்சிகளை ஸ்கிரிப்ட்டாக்கி ஆன்டனி எடுத்துக்கிட்டிருக்க படம். கோயம்புத்தூரிலும், கடலூரிலும் ஷூட்டிங் நடந்திருக்கு. ஒரு நடிகையோட வேடத்துல நடிக்கிறதுல ரொம்பவும் ஆர்வமா இருக்கேன்.




என்னைப் பார்த்ததுமே, பப்ளியான கேரக்டர்கள்லதான் நடிப்பேன்னு நினைக்கிறாங்க. எனக்கு எல்லா வேடங்கள்லயும் நடிக்க ஆசையிருக்கு. ‘வாகை சூட வா’ போல கிராமத்துப் படங்கள்ல கறுப்பு மேக்கப் போட்டு நடிக்கவும் தயாரா இருக்கேன்...’’

இசையில் நாட்டமிருக்கும் சனாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையும், தன் முதல் படத்துக்கு இசையமைத்த யுவன்ஷங்கர் ராஜாவின் இசையும் ரொம்பப் பிடிக்குமாம். ‘‘பாடுவீங்களா..?’’ என்றால், ‘‘என் குரல் சும்மாவே சூப்பர். இதுல நான் பாடி என் அபிமான இசையமைப்பாளர்களுக்குக் கொலைவெறியை ஏத்த விரும்பலை...’’ என்கிறார் சிரித்துக் கொண்டே.
அழகிகள் பாட வேண்டிய அவசியமில்லை சனா... பார்த்தாலே பசங்க மண்டையில ‘பல்ப்’ எரியும்..!
- வேணுஜி