சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்த உஷா லட்சுமணன் செய்கிற கம்பி பொம்மைகளை பெரிய பெரிய கைவினைக் கலைப்பொருள் விற்பனைக் கடைகளில்தான் பார்த்திருப்போம். வேலைப்பாடுகளைப் பார்த்ததும், ‘விலையும் அதிகமாகவே இருக்கும்’ என அந்த இடத்தை விட்டு நகர்ந்திருப்போம். அதே பொம்மைகளை நீங்களே சுலபமாக உங்கள் கைப்பட செய்து, உங்கள் வீட்டையும் அழகுபடுத்தலாம். ‘‘விற்பனை செய்து, கை நிறைய காசும் அள்ளலாம்’’ என நம்பிக்கை தருகிறார் உஷா.
‘‘18 வருஷங்களா பலவிதமான கைவினைப் பொருள்கள் பண்ணிட்டிருக்கேன். என்னோட சொந்த முயற்சியில நானா கத்துக் கிட்டு செய்ய ஆரம்பிச்சது தான் இந்தக் கம்பி பொம்மைகள். தலை மட்டும் ரெடிமேடா கிடைக்கும். மத்தபடி கை, கால்னு உருவத்தை நாம உருவாக்கறதுதான் இதுல ஸ்பெஷல்’’ என்பவர், கற்றுக் கொள்ள ஆர்வமுள்ளோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.
என்னென்ன தேவை? முதலீடு?‘‘பொம்மைக்கான தலை (சாமி உருவம், பெண், குறத்தி... என விருப்பமானது), கம்பி, உல்லன் நூல், ஜரிகை நூல், டிஷ்யூ துணி, பஞ்சு, பசை, மரப்பலகை... சின்ன அளவுல தொடங்க ஆயிரம் ரூபாய் முதலீடு போதுமானது!’’
என்ன ஸ்பெஷல்? எத்தனை மாடல்?‘‘ஏற்கனவே சொன்ன மாதிரி வெறும் தலை மட்டும்தான்
நமக்குக் கிடைக்கும். அதை வச்சு, நம்ம கற்பனைக்கேத்தபடி உருவத்தையும், உடைகளையும் டிசைன் பண்ணணும். உடம்புப் பகுதிக்கு பஞ்சு சுத்தியும், உடைக்கு உல்லன் நூல் வச்சும், முண்டாசுக்கு ஜரிகை நூல் வச்சும் ரெடி பண்ணணும். கல்யாண செட், வளைகாப்பு செட், கிருஷ்ணரும் கோபியரும்னு செட் பொம்மைகளும் பண்ணலாம். பொம்மைகளை ரெடி பண்ணிட்டு, அதை மரப்பலகையில அடிக்கணும்.’’
விற்பனை வாய்ப்பு? லாபம்?‘‘காதி கிராப்ட், குறளகம் மாதிரியான இடங்கள்லயும், கை
வினைப் பொருள் கண்காட்சிகள்லயும் நல்லா விற்பனையாகும். நவராத்திரி சீசன்ல ஆர்டர் குவியும். ஒரு பொம்மைக்கான அடக்க விலை 250 ரூபாய் ஆகும்னா, அதை 350 ரூபாய்க்கு விற்கலாம். 2 பொம்மை 500 ரூபாய்க்குக் கொடுக்கலாம்.’’
பயிற்சி?‘‘2 நாள் பயிற்சிக்குத் தேவையான பொருட்களோட சேர்த்துக் கட்டணம் 500 ரூபாய்.’’
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்