‘‘ஒரு மொட்டு எப்போது இதழ் விரிக்கும், ஒரு மின்னல் எந்த நொடி கண் சிமிட்டும் என்பதை யாராலாவது சொல்ல முடியுமா? வாழ்க்கையில் பல விஷயங்கள் அப்படித்தான் அமைகின்றன. ‘அமர்க்களம்’ பாடல் பதிவின்போது எடுத்த இந்த புகைப்படம் பார்ப்பதற்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் ஒரு அழகான வாழ்க்கைக்கான முதல் பல்லவி இங்கிருந்துதான் தொடங்கப்பட்டது’’ என ஆரம்பித்தார் இயக்குனர் சரண்.
‘‘ஷாலினியை ‘அமர்க்களம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் முயற்சித்து சம்மதம் வாங்கினேன். ‘நீங்கள் இதில் ஒரு பாட்டும் பாடுறீங்க’ என்றபோது ஷாலினி ஷாக்கானார். ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் ‘சொந்தக்குரலில் பாட ரொம்ப நாளா ஆசை...’ பாடல் பதிவின்போது எடுக்கப்பட்ட படம்தான் இது. ஆரம்பத்தில் இந்தப் பாடலுக்கு வைரமுத்து சார் வேறு வரிகளை எழுதி யிருந்தார். ‘ஷாலினி பாடுகிறார்’ என்று தெரிந்ததும், ‘அப்படியென்றால் வரிகளை மாற்றித் தருகிறேன்’ என்று இரண்டாவது முறையாக மாற்றி எழுதினார்.
பாடல் பதிவாகி முடிந்ததும், அஜித்துக்கு போட்டுக் காட்டினோம். திரும்பத் திரும்ப அந்தப் பாடலை ரீவைண்ட் செய்து கேட்டார். அன்றிலிருந்து தினமும் பலமுறை அந்தப் பாடலைக் கேட்டு விடுவார். க்ளைமாக்ஸில் ஒரு காட்சியை ஊட்டியில் படமாக்கலாம் என்று அஜித் சொன்னார். லொகேஷன் பார்ப்பதற்கு இருவரும் காரில் போனோம். ஒரு பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்பதற்கு இப்போது டேப் ரெகார்டர்களில் ஆப்ஷன் இருக்கிறது. அன்றைக்கு அந்த வசதி இல்லை. ‘சொந்தக்குரலில் பாட...’ பாடலை ஒரே கேசட்டில் பத்து முறை பதிவு செய்து அஜித்திடம் கொடுத்தோம். பாடலைக் கேட்டபடி அவரே டிரைவ் பண்ணினார். சென்னையிலிருந்து ஊட்டி போக சாதாரணமாக 12 மணி நேரம் ஆகும் என்றால், அஜித் சார் 7 மணி நேரத்தில் ஊட்டிக்கு போய்விட்டார். அடிப்படையில் அவர் கார் ரேஸ் வீரர் என்பதைத் தாண்டி, ஷாலினியின் குரல்தான் அவரை ஜெட் வேகத்தில் இயங்க வைத்திருக்கிறது. ஆக, அஜித்திற்குள் காதல் பொறியை ஏற்படுத்தியதும், அதை ஊதிப் பெரிதாக்கியதும் இந்த பாடல்தான்.
காதலைப் பொறுத்தவரை விழியில் விழுந்து இதயம் நுழைவதுதான் பெரும்பாலும் நடக்கும். அஜித் விஷயத்தில் கொஞ்சம் வித்தியாசமாக அவரது செவியில் விழுந்து இதயம் நுழைந்தவர் ஷாலினி. அவரது மனசுக்குள் அஜித் பதிவான சம்பவம் இன்னும் சுவாரஸ்யம். ஷாலினி பாடிய பாடலில் ‘உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டுவா... அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா...’ என்ற வரிகள் வரும் காட்சியை ஊட்டி அருகே படமாக்கத் திட்டமிட்டோம். ஒரு ஏரியின் நடுவே இருந்த பெரிய மணல் திட்டில் அந்தக் காட்சியை எடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து ஷாலினியை அங்கு அழைத்துச் சென்றோம்.
குளிர் நடுக்கும் அதிகாலை, ஐஸ்கட்டி டெம்பரேச்சரில் தண்ணீர். இதற்குள் ஷாலினி இறங்கி, 500 அடி தொலைவில் இருக்கும் மணல் திட்டிற்கு எப்படிப் போவார்? எல்லோரும் பயந்தோம்.
அஜித்தை ‘பேபி’ என்று செல்லமாக அழைப்பார் ஷாலினி. ‘பேபி என்ன மாதிரியான கேரக்டர், பேபி எந்த மாதிரி நடிப்பார், பேபி என்னைப் பற்றி என்ன சொல்லுவார்?’ என அஜித் பற்றி நிறைய கேட்டுக்கொண்டே ஐஸ் தண்ணீரில் சாதாரணமாக நடந்து வந்தார் ஷாலினி. அவர் மனசுக்குள் புதைந்திருந்த அஜித் மீதான காதலின் முகத்தையும் அப்போது நான் கண்டுகொண்டேன்!’’
- அமலன்
படம் உதவி: ஞானம்